Wednesday, 16 December 2009

தெலுங்கானா - 2

தெலுங்கானாவை பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே எண்ணி இருந்தேன், குழப்பம் முடியட்டும் என்று நினைத்திருந்தேன் முடிகிற வழியாக தெரியவில்லை....

இப்போது தெலுங்கானாவை எதிர்ப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை? எதிர்க்கும் ஆந்திர மக்கள் அனைவரும் ஹைதராபதிற்க்காகவே எதிர்க்கிறார்கள். அங்கே கொட்டி  இருக்கும் பல கோடிகள் 'கை விட்டு' போய்விடுமோ என்றே எதிர்க்கிறார்கள். அந்த கோடிகள் எப்படி 'கைவிட்டு' போகும் என்று யாரும் கேட்கபோவது இல்லை, அந்த கேள்விக்கான பதிலை "வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள்" என்றெல்லாம் பூசி மெழுகி பேசுகிறார்கள்.

தெலுங்கானாவை கேட்பவர்கள் தனி நாட்டை கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கிறார்கள்.ஆனால் நாட்டை கேட்கும் அளவிற்கு ஒரு பதற்றம் நிலவுகிறது. ஹைதராபாத் வளர்ந்தது 90-களின் இறுதியில்தான் ஆனால் 1960-களில் இந்த அளவிற்கு வளராமல் இருக்கும்போதே ஆந்திரா அரசியல்வாதிகள் தெலுங்கானாவை ஆதரிக்கவில்லை.அதற்கு காரணம் அலட்சிய மனோபாவமே, அதாவது வீட்டில் படிக்காத, அந்தஸ்தில் குறைந்த தம்பியை பார்க்கும் அண்ணனாகதான் ராயல்சீமாவும், ஆந்திராவும் தெலுங்கானாவை பார்த்தன.

பாண்டிச்சேரி தமிழகத்துடன் சேராமல் ஏன் தனித்து இருக்கிறது? கோவா ஏன் ஒரு மாநிலமாக இருக்கிறது? இதற்கு பதில் சொன்னால் அந்த பதில் தெலுங்கானவிற்கும் பொருந்தும்.
இன்று சிறிய மாநிலம் சரியாக வராது என்று சொல்பவர்கள் ஜார்க்கண்டை உதாரணமாக சொல்பவர்கள் உத்தராஞ்சலை கொஞ்சம் பார்க்கலாம். ஜார்க்கண்டை பொறுத்தவரை ஏற்கனவே நாறிக்கொண்டு இருந்த பீகாரில் இருந்து அதிகம் முன்னேறாத பகுதியான (பிகாரிலேயே மோசமான பகுதிகள்) ஜார்க்கண்டை பிரித்தார்கள் , இப்போது மோசமானதாக தெரிந்தாலும் அந்த பிரிவு பீகாருக்கும் ஜார்க்கண்டுக்கும் தொலைநோக்கில் நல்லதே.

இந்த தெலுங்கான பகுதியை ஆண்ட நிஜாம் 1940-களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்து இருக்கிறார்? வைரங்களும், கோமேதங்களும் அவர் பொக்கிஷத்தை அலங்கரித்தன. சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய படை வைத்து இருந்தார். அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காராக இருக்க முடிந்தது? அதற்க்கான பதில் தெரிந்தால் இன்றைய தெலுங்கானாவின் வறுமையின் காரணம் தெரியும். காந்தியும் நேருவும் இந்திய அரசியலை மாற்றிக்கொண்டு இருந்த போது, நிஜாம் 4 மனைவிகளுடன் மற்றும் சுமார் 42 ஆசை நாயகிகளுடன் குஷாலாக இருந்து இருக்கிறார். பொதுவுடைமை , ஜனநாயகம் என்றெல்லாம் இந்தியா மாறிக்கொண்டு இருக்கும் சமயம் நிஜாமின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நிஜாமின் தாயார் அவருக்கு அழகிய பெண்களை பரிசளித்து கொண்டு இருந்தார். இதை சொல்வது நிஜாமை
குறை சொல்வதற்கு அல்ல , தெலுங்கானாவை புரிந்து கொல்வதற்கு. 1948-வரை நிஜாம் வாழ்ந்தது ஒரு 13-ஆம் நூற்றாண்டு வாழ்வை! தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரின் ராஜ்ஜியத்தையும் அவர் 13-ம் நூற்றாண்டில் வைத்து கொண்டு இருந்ததுதான்  இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், நிஜாம் ஆட்சி செய்த தெலுங்கானா பிதார் (கர்நாடகா) என்று பிரிட்டிஷார் நுழையாத இடமெல்லாம் இன்று பின்தங்கிய இடங்கள் , வறுமை நிறைந்த மாவட்டங்கள்.எப்படி பதிமூன்றாம் நூற்றாண்டில் வரிவசூளிப்பது மட்டும்தான் மன்னனின் வேலை என்றும், அதற்கு மேல் அவன் கருணை இருந்தால் சில குளங்களை வெட்டுவது போதும் என்ற நிலை இருந்ததோ அதே நிலைதான் ஹைதராபாதில் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை நன்கு முன்னேறிய , ஆங்கில கல்வி கற்ற ஆந்திர மக்களுடன் போட்டி போட சொன்னது மிகப்பெரிய கொடுமை.

இறுதியாக மத்திய அரசை குறை சொல்கிறார்கள், நான் அப்படி நினைக்கவில்லை, மத்திய அரசு மிகவும் புத்திசாலிதனமாக நடந்து கொண்டு இருக்கிறது.மத்திய அரசு சொல்வதெல்லாம், " ஆந்திர சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை" என்று தெளிவாக இருக்கிறது, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நடத்துவது என்பது
குதிரை கொம்புதான்.. இதன் மூலம் மத்திய அரசு ஒரு நெருக்கடியை கூடுமானவரை கட்டு படுத்தி இருக்கிறது, நரசிம்ம ராவ் இருந்து இருந்தால் இந்த பிரச்சினையை அடுத்த 150 வருடங்கள் தள்ளி போட்டு சமாளித்துஇருப்பார்!

இன்று தெலுங்கானவிற்கு  தேவையானது எல்லாம் தனி மாநிலம், திறமையான ஐ.யே.எஸ் அதிகாரிகள் , மத்திய அரசின் நிதி மற்றும் அந்நிய முதலீடுகள், போட்டி உண்ணாவிரதங்கள் அல்ல.