Wednesday, 11 February 2009

நான் கடவுள் - சில கேள்விகள்

வணக்கம் ஜெயமோகன் சார்,

இன்று நான் கடவுள் படம் பார்த்தேன். படத்துல வர ஹிந்தி வசனங்கள்/சமஸ்க்ருத ஸ்லோகங்கள் எல்லாம் நீங்க எழுதியதா? நெருப்புக்கு என்னடா சுத்தம்/அசுத்தம், அப்பறம் எவன்டா சாமி என்று கேட்கும் ஒரு காட்சி போன்ற இடங்களில் வசனகர்த்தா யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆவல் பார்வையாளனுக்கு எழலாம். ஆனால், அதை தவிர ஜெயமோகன் தான் சார் இப்படி எழுத முடியும் அப்படின்னு சொல்ற மாதிரி வசனம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம். சாதாரண ரசிகனுக்கு புரிய வேண்டும் என்கிற சினிமா விதியால் செய்யப்படும் சமரசங்களா இவை? ஏழாம் உலகம் கதை உங்க மனசுல உருவாக நான் கடவுள் படத்தில் பணி புரிந்தது ஒரு காரணமா?

நன்றி,
உங்கள் வாசகன் வாசு


ஏழாம் உலகம் 2003ல் வந்தது. 2005 ல் நான் கடவுள் திட்டமிட்டமிடப்பட்டது.
வசனம் படத்தின் தேவைக்கு ஏற்பத்தான் எழுதப்படும். அதில் சரியாக வந்தவை மட்டுமே படத்தில் இருக்கும்
படத்தில் வசனம் என்பது பேசும் சொற்கள் மட்டுமல்ல. பேசும் டக்ருணமும் சேர்த்துதான் எழுதப்படுகின்ரன
ஜெ

Tuesday, 10 February 2009

நான் கடவுள் - தேவோ மனுஷ்ய ரூபனே

சினிமாவில் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் சில சமரசங்கள் செய்து கொள்ள நேரிடும். உதாரணமாக, நடிகர் தனக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகள் வைக்க சொல்வார் அல்லது தயாரிப்பாளர் பக்தி படம் எடுக்கும் தன் இயக்குனரிடம் லாபம் கருதி ஒரு பாடலுக்கு நமீதா ஆடினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இம்சை செய்வார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனக்கு பிடித்த மாதிரி செய்வது மிக சிலருக்கே சாத்தியம். இயக்குனரின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக இருந்தால் இதை செய்ய முடியும். அல்லது, இயக்குனர் மிக பிரபலம் அடைந்தவராக இருக்க வேண்டும்(ஷங்கர், மணிரத்னம் மாதிரி). இயக்குனர் பாலா அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக அவரது மூன்று படங்களும் அவர் நினைத்த மாதிரி அமைந்துவிட்டன. சேது, நந்தா, பிதாமகன் என்று அவர் எடுத்த மூன்று படங்களுமே சினிமாவிற்கான வியாபார தந்திரங்கள் அதிகம் இல்லாதவை. இப்போது "நான் கடவுள்".

பாலாவின் படங்களில் கதை என்பது ஒரு மெல்லிய நூல் போன்றது. தனது சொந்த அனுபவங்களை அந்த நூலை பயன்படுத்தி கட்டியிருப்பார். சேது, நந்தா, பிதாமகன் அனைத்துமே இந்த ரகம் தான். நான் கடவுள் இதே வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.

பிச்சைகாரர்களின் உலகம் எப்படி இருக்கும்? மன நலம் குன்றிய குழந்தைகள், பிறவியிலேயே அங்கஹீனம் உள்ளவர்கள், குருடர்கள், பிச்சை எடுப்பதற்காகவே உடல் பகுதிகள் சிதைக்கபட்டவர்கள் என்று பலரின் வாழ்வை மனம் ரணமாகும் விதத்தில் நமக்கு விவரிக்கிறது நான் கடவுள். இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் தாண்டவன் என்னும் தரகன். அவனுக்கு கீழே இந்த பிச்சைகாரர்கள் என்கிற உருப்படிகளை பார்த்துக்கொள்ள அமர்த்தப்பட்டுள்ள கைத்தடிகள் என்று ஒரு பெரிய நெட்வோர்கையே நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாலா.

ஆர்யாவை விட பூஜாவுக்கு நடிக்க அதிக வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் பூஜா. உண்மையிலேயே மன நலம் குன்றிய குழந்தைகள், பிச்சைகாரர்கள் என்று அனைவரையும் நடிக்க வைத்துள்ளார் பாலா. அடுத்த வேலை உணவுக்கே கஷ்டப்படும் இவர்களுக்கு இந்த படம் மூலம் கொஞ்சம் பணமும் மூன்று வருடத்திற்கு உணவும் கிடைக்க வழி செய்த பாலா தான் கடவுள். அனைவருக்கும் உதவி செய்ய கடவுள் நேரில் வரமாட்டார். அதனால் தான் சொன்னேன்,"தேவோ மனுஷ்ய ரூபனே".