Friday 29 January 2010

J.D.சாலிங்கர், சுஜாதா, க்ரியா யோகம், ரஜினிகாந்த்

பிரபல அமெரிக்க எழுத்தாளர் J.D.சாலிங்கர் 91 வயதில் நேற்று மரணமடைந்தார். சாலிங்கர் பற்றி நான் அறிய நேர்ந்தது சுஜாதா அவர்களின் எழுத்தால். திரு.சுஜாதா அவர்களை சுபமங்களா இதழ் ஒரு முறை பேட்டி கண்ட போது அவர் எழுதிய சில கதைகளில் பொருட்களின் பெயர்களை பற்றி சொல்லும் போது ஏன் அதை தயாரித்த நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடுகிறார் என்று கேட்டார்கள். உதாரணமாக, "அவன் Rothmans சிகரெட் பிடித்தான்" என்று ஏன் எழுதுகிறார் சுஜாதா என்பது அவர்கள் கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் போது சுஜாதா, "இதற்கு பெயர் Cataloguing. J.D.சாலிங்கர் இதை நிறைய உபயோகிப்பார். கதையின் நாயகன் அறையில் உள்ள பொருட்களை அதன் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து பட்டியலிடுவார்" என்றார்.

அதன் பின் நான் சாலிங்கர் பற்றி அரைகுறையாக படித்த போது, அவர் மகள் Margaret தனது "Dream Catcher" என்ற நினைவுகளில் தனது தந்தை பரமஹம்ச யோகானந்தரின் குருவான லஹிரி மகாசயா அவர்களின் புத்தகங்களை படித்தார் என்றும் அதன் காரணமாகவே திருமணம் செய்துகொண்டார் என்றும் தெரிவிக்கிறார். இந்த லஹிரி மகாசயா அவர்களின் குரு தான் ரஜினிகாந்த் தன் "பாபா" படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய மகாவதார் பாபாஜி.

ஆனால் சாலிங்கர் க்ரியா யோகத்தை ஒரு கட்டத்தில் துறந்து Homeopathy, Urine Therapy(மொரார்ஜி தேசாய் புகழ்), Acupuncture என்று பலவற்றை முயற்சி செய்தார். மேலும் எதிலும் நிலையில்லாத தனது மனதின் காரணமாக சொந்த வாழ்வில் பல சோதனைகளை சந்தித்தார் என்றும் அறிகிறோம். . The Catcher in the Rye நாவலுக்காகவும் தனது "Reclusive" தன்மைக்காகவும் சாலிங்கர் நிறையவே பேசப்பட்டார்.

Monday 25 January 2010

இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று

இந்தியாவில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்(Deemed Universities) விரைவில் மூடப்படும் என்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என்ற எண்ணமே(concept) கூட வருங்காலத்தில் ஒழிக்கப்படும் என்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் சென்ற வாரம் அறிவித்தார். இந்த 44 பல்கலைக்கழகங்களில் பதினாறு நம்மூரில்.

என்னைப் பொறுத்த வரை இதை வரவேற்க வேண்டும். ஏற்கனவே தாழ்ந்திருக்கும் இந்திய கல்வித் தரத்தை இவர்கள் மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்பது என் எண்ணம். தகுதி இல்லாதவர்களுக்கு துணை வேந்தர் பதவி, ஐந்து லட்சம் கொடுத்தால் பொறியியல் டிகிரி, நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் என்று தான் இன்று பெரும்பாலான நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நிரந்தரமாக மூடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அப்படி செய்யும் போது
அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.