Monday, 26 April 2010

The Alchemist

பிரேசிலிய எழுத்தாளர் பாலோ கொய்லோ அவர்களின் "The Alchemist" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதுவரை உலகின் 42 மொழிகளில் இந்த புத்தகம் பிரசுரமாகியுள்ளது. "உங்கள் கனவுகளை தொடருங்கள்" என்பது தான் புத்தகத்தின் முக்கிய கருத்து. அப்படி தொடரும் ஒரு சிறுவனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை அங்கங்கே கொஞ்சம் தத்துவம் தெளித்து நமக்கு வழங்குகிறார் கொய்லோ. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சில எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக, சுய பரிசோதனை செய்தல், கனவுகளை தொடர்தல், மனதுடன் பேசுதல் போன்றவற்றை விட சிறப்பாக சொல்லும் புத்தகங்கள் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் உண்டு. உதாரணமாக, பாலகுமாரனின் கற்றுக்கொண்டால் குற்றமில்லை, சுவாமி சுகபோதனந்தவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், அய்யா அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் போன்றவை உடனே நினைவிற்கு வருகின்றன. ஆனால், இந்த புத்தகங்களை பற்றி எத்தனை வெளிநாட்டினருக்கு தெரியும்? வெளிநாட்டை விடுங்கள், நம்ம ஆளுங்க எத்தனை பேருக்கு இந்த புக் எல்லாம் தெரியும்?

இந்தியா பல தத்துவங்களின் பிறப்பிடம். ஆனால், நம்ம புத்தகங்கள் மற்ற மொழிகளில் பிரசுரமாவதே இல்லை. ஏன் இந்த நிலை? தெரியவில்லை. பாலகுமாரன் அவர்களின் பல புத்தகங்கள் "உங்களை அறிவது எப்படி", "வாழ்வின் அர்த்தம்" போன்ற தலைப்புகளில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் அபார தகுதி பெற்றவை. பாலகுமாரன் போன்றவர்களை படித்ததனால் தானோ என்னவோ தெரியவில்லை "The Alchemist" படித்த போது உற்சாகம் பீறிட்டு கொண்டெல்லாம் வரவில்லை. ஆனால், பலரை கேட்ட போது "The Alchemist" தங்கள் வாழ்வை மாற்றியது என்றார்கள். இதை சில பிரபல நடிகர்/நடிகைகள் சொல்ல கூட நான் பேட்டிகளில் கேட்டிருக்கிறேன்.

நல்ல புத்தகங்களை தேடிப் படிக்கும் பலர் நம்மில் உண்டு. நிச்சயம் நம் மொழியின் சிறந்த படைப்புகளை உலகிற்கு அடையாளம் காட்ட நம்மால் முடிந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

Sunday, 25 April 2010

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

பாண்டியிலிருந்து காரில் சென்னை வந்து கொண்டிருந்தேன். கிழக்கு கடற்கரை சாலையில் "மாயாஜால்" அருகே வரும் போது வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் "Interceptor" என்ற போலீஸ் குழு ஒன்று நின்று கொண்டிருந்தது. என் காரை ஓரம் கட்டும்படி தூரத்தில் இருந்தே சமிக்ஞை செய்தனர். கார் நின்றவுடன் அருகே வந்த காவலர் ஒருவர் "நீங்க, 75 கிலோமீட்டர் வேகத்துல வரீங்க, இங்க 40 தான் போகலாம்" என்றார். பாண்டியில் இரண்டு "Fosters" அடித்திருந்ததால் எங்கே குடி போதையில் வாகனம் ஓட்டினார் என்று 3000 ரூபாய் தீட்டி விடுவார்களோ என்று பயந்து, "சரி, என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்றேன். "300 ரூபாய் அபராதம் கட்டுங்க, நான் ரசீது தரேன்" என்றார். சரி என்று என் Driving License மற்றும் 300 ரூபாய் பணம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொள்ளாமல் "நீங்க எங்க வேலை செய்யறீங்க?" என்றார் அவர். "Manufacturing Industry" என்றேன்.

சரி, "பைன் எல்லாம் வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்தது போங்க" என்றார். நான் அபராதம் செலுத்த தயாராக இருந்தேன். ஆனால், அரசு ஊழியரோ அரசுக்கு வருமானம் வேண்டாம், என்னை கவனித்துகொள் என்கிறார். சரி என்று நூறு ரூபாய் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்த போது, "எவ்வளோ இருந்தாலும் கொடுங்க, நூறு ரூபாய் இல்லாட்டி பரவாயில்லை" என்றார். சரி என்று சில்லரையாக இருந்த தொண்ணூறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். மனிதர் அதை வாங்கிக்கொண்டு பம்மியபடி, "சார் நான் பணம் வாங்கிட்டேன்னு கோச்சுக்க கூடாது. இனிமே வேகம் பார்த்து போகணும், சரியா? என்றார். உடம்பை நெளித்துக்கொண்டு அதை அவர் சொன்ன பாணி இருக்கிறதே, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. தன் சுய லாபத்துக்காக இயங்கும் இவர்கள் எப்படி சட்டத்தை காப்பார்கள்?