Wednesday 16 December 2009

தெலுங்கானா - 2

தெலுங்கானாவை பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களாகவே எண்ணி இருந்தேன், குழப்பம் முடியட்டும் என்று நினைத்திருந்தேன் முடிகிற வழியாக தெரியவில்லை....

இப்போது தெலுங்கானாவை எதிர்ப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை? எதிர்க்கும் ஆந்திர மக்கள் அனைவரும் ஹைதராபதிற்க்காகவே எதிர்க்கிறார்கள். அங்கே கொட்டி  இருக்கும் பல கோடிகள் 'கை விட்டு' போய்விடுமோ என்றே எதிர்க்கிறார்கள். அந்த கோடிகள் எப்படி 'கைவிட்டு' போகும் என்று யாரும் கேட்கபோவது இல்லை, அந்த கேள்விக்கான பதிலை "வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள்" என்றெல்லாம் பூசி மெழுகி பேசுகிறார்கள்.

தெலுங்கானாவை கேட்பவர்கள் தனி நாட்டை கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கிறார்கள்.ஆனால் நாட்டை கேட்கும் அளவிற்கு ஒரு பதற்றம் நிலவுகிறது. ஹைதராபாத் வளர்ந்தது 90-களின் இறுதியில்தான் ஆனால் 1960-களில் இந்த அளவிற்கு வளராமல் இருக்கும்போதே ஆந்திரா அரசியல்வாதிகள் தெலுங்கானாவை ஆதரிக்கவில்லை.அதற்கு காரணம் அலட்சிய மனோபாவமே, அதாவது வீட்டில் படிக்காத, அந்தஸ்தில் குறைந்த தம்பியை பார்க்கும் அண்ணனாகதான் ராயல்சீமாவும், ஆந்திராவும் தெலுங்கானாவை பார்த்தன.

பாண்டிச்சேரி தமிழகத்துடன் சேராமல் ஏன் தனித்து இருக்கிறது? கோவா ஏன் ஒரு மாநிலமாக இருக்கிறது? இதற்கு பதில் சொன்னால் அந்த பதில் தெலுங்கானவிற்கும் பொருந்தும்.
இன்று சிறிய மாநிலம் சரியாக வராது என்று சொல்பவர்கள் ஜார்க்கண்டை உதாரணமாக சொல்பவர்கள் உத்தராஞ்சலை கொஞ்சம் பார்க்கலாம். ஜார்க்கண்டை பொறுத்தவரை ஏற்கனவே நாறிக்கொண்டு இருந்த பீகாரில் இருந்து அதிகம் முன்னேறாத பகுதியான (பிகாரிலேயே மோசமான பகுதிகள்) ஜார்க்கண்டை பிரித்தார்கள் , இப்போது மோசமானதாக தெரிந்தாலும் அந்த பிரிவு பீகாருக்கும் ஜார்க்கண்டுக்கும் தொலைநோக்கில் நல்லதே.

இந்த தெலுங்கான பகுதியை ஆண்ட நிஜாம் 1940-களில் உலகிலேயே பெரிய பணக்காரராக இருந்து இருக்கிறார்? வைரங்களும், கோமேதங்களும் அவர் பொக்கிஷத்தை அலங்கரித்தன. சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய படை வைத்து இருந்தார். அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காராக இருக்க முடிந்தது? அதற்க்கான பதில் தெரிந்தால் இன்றைய தெலுங்கானாவின் வறுமையின் காரணம் தெரியும். காந்தியும் நேருவும் இந்திய அரசியலை மாற்றிக்கொண்டு இருந்த போது, நிஜாம் 4 மனைவிகளுடன் மற்றும் சுமார் 42 ஆசை நாயகிகளுடன் குஷாலாக இருந்து இருக்கிறார். பொதுவுடைமை , ஜனநாயகம் என்றெல்லாம் இந்தியா மாறிக்கொண்டு இருக்கும் சமயம் நிஜாமின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நிஜாமின் தாயார் அவருக்கு அழகிய பெண்களை பரிசளித்து கொண்டு இருந்தார். இதை சொல்வது நிஜாமை
குறை சொல்வதற்கு அல்ல , தெலுங்கானாவை புரிந்து கொல்வதற்கு. 1948-வரை நிஜாம் வாழ்ந்தது ஒரு 13-ஆம் நூற்றாண்டு வாழ்வை! தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரின் ராஜ்ஜியத்தையும் அவர் 13-ம் நூற்றாண்டில் வைத்து கொண்டு இருந்ததுதான்  இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், நிஜாம் ஆட்சி செய்த தெலுங்கானா பிதார் (கர்நாடகா) என்று பிரிட்டிஷார் நுழையாத இடமெல்லாம் இன்று பின்தங்கிய இடங்கள் , வறுமை நிறைந்த மாவட்டங்கள்.எப்படி பதிமூன்றாம் நூற்றாண்டில் வரிவசூளிப்பது மட்டும்தான் மன்னனின் வேலை என்றும், அதற்கு மேல் அவன் கருணை இருந்தால் சில குளங்களை வெட்டுவது போதும் என்ற நிலை இருந்ததோ அதே நிலைதான் ஹைதராபாதில் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை நன்கு முன்னேறிய , ஆங்கில கல்வி கற்ற ஆந்திர மக்களுடன் போட்டி போட சொன்னது மிகப்பெரிய கொடுமை.

இறுதியாக மத்திய அரசை குறை சொல்கிறார்கள், நான் அப்படி நினைக்கவில்லை, மத்திய அரசு மிகவும் புத்திசாலிதனமாக நடந்து கொண்டு இருக்கிறது.மத்திய அரசு சொல்வதெல்லாம், " ஆந்திர சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை" என்று தெளிவாக இருக்கிறது, ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நடத்துவது என்பது
குதிரை கொம்புதான்.. இதன் மூலம் மத்திய அரசு ஒரு நெருக்கடியை கூடுமானவரை கட்டு படுத்தி இருக்கிறது, நரசிம்ம ராவ் இருந்து இருந்தால் இந்த பிரச்சினையை அடுத்த 150 வருடங்கள் தள்ளி போட்டு சமாளித்துஇருப்பார்!

இன்று தெலுங்கானவிற்கு  தேவையானது எல்லாம் தனி மாநிலம், திறமையான ஐ.யே.எஸ் அதிகாரிகள் , மத்திய அரசின் நிதி மற்றும் அந்நிய முதலீடுகள், போட்டி உண்ணாவிரதங்கள் அல்ல.

Thursday 10 December 2009

தெலுங்கானா நாடகம்

ஆக,தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படும் என்று சிதம்பரம் நேற்றிரவு அறிவித்துவிட்டார். உடனே KCR தனது பதினோரு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். இப்போது பிரச்சனை ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் சேருமா இல்லையா என்பது தான். ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா தேவையில்லை என்கிறது TRS(Telungaana Rashtriya Samithi). என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இது சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் இறங்குவது வீண். சுதந்திரம் வாங்கியவுடன் இந்தியாவை மொழி வாரியாக பிரிக்க வேண்டும் என்ற முடிவின் விளைவை
தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இனி மற்ற மாநிலங்களிலும் இந்த ஓசை கேட்கும். காஷ்மீர் விஷயத்தில் தெலுங்கானா முன்னுதாரணமாக காட்டப்படும். ஒரிசாவை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் நேற்று சொன்னார் "எங்க ஊரும் இப்படிதான். புவனேஸ்வர்,கட்டாக் போன்றவை வளர்ச்சி காண்கின்றன. ஆனால், ஒரிசாவின் மற்ற பகுதிகளில் அந்த வளர்ச்சி இல்லை. ஆகையால், இப்படி ஒரு தனி மாநில அந்தஸ்து கேட்டு ஒரிசாவிலும் போராட்டம் தொடங்கும் என்று நினைக்கிறேன்". இந்த தனி மாநில விஷயத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன சும்பன்களா? "அடைந்தால் திராவிட நாடு அடையாவிட்டால் சுடுகாடு" கோஷத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்போம். மொத்தத்தில் நாடு துண்டாகும்.

இதனால் ஒரு நன்மை நடக்கலாம். LET(Lashkar E Toiba), Indian Mujahideen போன்ற அமைப்புகள் தங்கள் வேலை சுலபமாயிற்று என்று தங்கள் தீவிரவாத நடவடிக்கைகளை கொஞ்சம் தளர்த்தலாம். நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் போது, வெளியில் இருந்து எதற்கு அதை செய்யப் போகிறார்கள்?

ஆனால்,TRS தலைவர் KCR ஒரு விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர். ஆந்திராவே YSR மறைவு, ஜகன் ரெட்டி பிரச்சனை என்று குழப்பத்தில் கிடக்க ஒரே உண்ணாவிரதத்தின் மூலம் அந்த ஊரே தன்னை பார்க்கும் படி செய்தார். "தூள்" படத்தில் அமைச்சர் உண்ணாவிரதம் அறிவிப்பார், அந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

ஜெய் ஹிந்த்

Wednesday 2 December 2009

டிசம்பர் சங்கீத சீசன்

சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி போன்ற சபாக்கள் இன்னும் தங்கள் மார்கழி மாத நிகழ்ச்சிகளை வெளியிடவில்லை ஆனால் பெரும்பாலான சபாக்கள் நேற்றைய நாளிதழ்களில் தங்கள் அரங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை தேதிவாரியாக வெளியிட்டுள்ளன.

டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பெரிய வித்வான்/விதுஷி ஆகியோரின் கச்சேரிகளை சென்னையில் உள்ள எல்லா சபாக்களிலும் கேட்கலாம். ஆகையால் நான் அதை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. நான் கீழே குறிப்பிட்டுள்ள கச்சேரிகள் கொஞ்சம் "ஸ்பெஷல்" ரகம். நேரம் கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.

சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: A.K.C.நடராஜன்-கிளாரினெட்
தேதி மற்றும் நேரம்: 18-12-2009 6:30p.m

சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: காயத்ரி கிரீஷ் பாட்டு, ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில்
தேதி மற்றும் நேரம்: 21-12-2009 6:30p.m

சபா: பார்த்தசாரதி சுவாமி சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: வித்யா பாரதி, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர்
நிகழ்ச்சி: Carnatic-Hindustani Jugalbandhi, Dr.Sriram Parasuram & Anuradha Sriram
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 6:30p.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: டி.எம்.கிருஷ்ண பாட்டு, டி.கே.முர்த்தி & பி.சிவராமன் (இரட்டை மிருதங்கம்)
தேதி மற்றும் நேரம்: 31-12-2009 4:30p.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: விசாகா ஹரி, "ஸ்ரீனிவாச வைபவம்" Musical Discourse
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 9:30a.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: திருப்பாம்பரம் சகோதரர்கள் நாதஸ்வரம், இரட்டை தவில்
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m

சபா: நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: ராமராவ் கலா மண்டப், தி.நகர்
நிகழ்ச்சி: Dr.M.Balamuralikrishna
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m

வளரும் கலைஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நிஷா ராஜகோபால்
அபிஷேக் ரகுராம்
ரித்விக் ராஜா

இவ்வளவு எல்லாம் சொல்றியே இந்த கச்சேரிக்கெல்லாம் நீ போக போறியா அப்படின்னு கேக்கறீங்களா? நான் பனிரெண்டாம் தேதி துபாய் போயிட்டு ஜனவரி கடைசியில் தான் வரேன். அதனால இந்த சீசன் கச்சேரி எதுக்கும் போக முடியாது.

Saturday 28 November 2009

எந்த வேளை?

இங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன?) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி "எந்த வேளை?" ..சற்று யோசித்து மனைவி சொன்னது "காலை" . சற்று நேரம் மௌனம் , "இல்லம்மா எந்த வேளை செய்யணும்?" இப்படி சில தத்துவ விசாரணைகள்  நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....

ok, bye, எனக்கு நிறைய வேளை sorry வேலை இருக்கு (துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும் ...) , அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday 18 November 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


மயிலாப்பூர் சித்திரகுளம்

மரங்கள் சூழ்ந்த சென்னை சாலைகள்

ஹிண்டு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "Metro Plus" பகுதியில் வரும் "Memories of Madras" என்னும் பத்தியில் சென்னை தங்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்தது என்று எழுத்தாளர் பாலகுமாரன், வி.கல்யாணம் போன்றவர்கள் தங்கள் மெட்ராஸ் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

வீட்டை திறந்து வைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், திருட்டு பயமே கிடையாது என்று இவர்கள் சொல்வதை எல்லாம் இன்றைய சென்னையுடன் ஒப்பிடவே முடியவில்லை. கூட்டமில்லாத சாலைகள், மரங்கள் சூழ்ந்த தி. நகர் பகுதி, குப்பையில்லாத மெரினா கடற்கரை என்று நிறைய நம்ப முடியாத தகவல்கள். ஆனால், நம்பியே ஆக வேண்டும் என்கிற மாதிரி கூடவே அந்த கால சென்னையின் படங்களை வேறு பிரசுரித்து வெறுப்பேற்றுகிறார்கள்.நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

Photos Courtesy: Hindu Archives

Monday 16 November 2009

நான் முதல்வரானால் கட்டுரை...

சிறு வயதில் நான் முதல்வரானால் என்று கட்டுரை எழுத சொல்லுவார்கள்..அது போல இப்போது எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன் , இப்படி வந்தது,

முதல் விசிட் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைச்சாலைகள் - அங்கே பார்க்க வேண்டியது....

-70 வயதுக்கு மேல் இருப்பவர் எத்தனை பேர்? அதில் தண்டனை காலம் முடிந்தும் இருப்பவர் எத்தனை பேர்? அதில் கடுமையான உடல் உபாதையினால் அவதிப்படுபவர் எத்தனை பேர்? மூர்கமாக தாக்கப்பட்டு உடல் உறுப்பு சிதைந்தவர் எத்தனை பேர்? ஓரினப்புனர்சியில் வேறு வழியில்லாமல் ஈடுபட்டவர் எத்தனைபேர்?
    
- பெண்கள் சிறைகளில் கர்பப்பையை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் எத்தனை பேர்? கர்பமாக இருப்பவர் எத்தனை பேர் அவருக்கான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில்? மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் கிடைக்கிறதா? 

-சிறைகளில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்டவர் எப்படி நடத்தபடுகின்றனர்? மன நோயாளியுடன் எத்தனை பேர் ஒரே அறையில் தங்கி இருக்கின்றனர்?
 -சிறைகளில் உள்ள கழிவறைகளின் நிலை என்ன, எத்தனை நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்யபடுகின்றது?

அடுத்த விசிட் மனநோய் விடுதிகளுக்கு, அங்கேயும் முதல்வர் பார்க்க வேண்டியது..


-பெண்கள் மனநோய் விடுதிகளில் உள்ள பெண்களின் உடல்நிலை முக்கியமாக பெண்களுக்கு வரும் பிரத்யேக உடல் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்கின்றனர்?
-மனநோய் விடுதியில் எத்தனை பேர் இருக்க முடியும்? எத்தனை பேர் இருக்கிறார்கள்?
-குழந்தைகளுக்கு தனி மனநோய் விடுதி இருக்கிறதா / தனிப்பிரிவு இருக்கிறதா?
-முக்கியமாக குணமடைந்தும் வெளியே போகமுடியாமல் இருக்கும் நோயாளிகள் எத்தனை பேர்?
-அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்தப்படும் மனநோய் விடுதிகள் (ஏர்வாடி / குற்றாலம் போன்ற இடங்களில் நடக்கும்) மனநோய் விடுதிகளில் உள்ளே  போகும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் வெளியே வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இருக்கும் வித்தியாசம்.
-மனநலம் சரியாக இருந்து , பிற காரணங்களால் (உ.தா பெண்ணை காதலித்தவனை பைத்தியம் என்று சொல்லி அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளி ஒருவனை குற்றாலத்தில் உள்ள மனநோய் விடுதிக்கு அனுப்பிய செய்தியை படித்து இருக்கிறேன்) மனநோய் விடுதிகளில் மாட்டிக்கொண்டு அங்கே இருக்கும் சூழ்நிலை காரணமாக பைத்தியம் ஆகியவர் எத்தனை பேர்?

-மன நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து கர்ப்பம் ஆன  பெண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு கருக்கலைப்பு எந்த மாதத்தில், யாரால் செய்யப்பட்டது?
-பொது மருத்துவமனையில் பெற்றெடுத்த குழந்தைகளில் பிறந்த சில மணி நேரங்களில் காணாமல் போய் , சில மாதங்களில் கை கால் இழந்த நிலையில் உள்ளவை எண்ணிக்கை ?
-அப்படி தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் எண்ணிக்கை?

ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றுவதால்தான் வளர்ந்த பிறகு இப்படி கட்டுரை எழுத வாய்ப்பு வரவில்லையோ....?

Friday 13 November 2009

மது கோடாவா அல்லது கோடியா??


இரண்டு ஆண்டு முதலமைச்சர் பதவி சாதனைகள்:

1. 2500 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு
2. மும்பை யூனியன் பேங்க் வங்கிக் கணக்கில் 640 கோடி ரூபாய் பணமாக அவருடன் தொடர்புடைய ஒருவரால் செலுத்தப்பட்டது
3. தனது ஆதரவாளர்களுக்காக 600 பைக் மற்றும் 30 ஸ்கார்பியோ கார்கள்.இவற்றில் 200 பைக் ஒரே நாளில் வாங்கப்பட்டவை
4. தனக்கு நெருக்கமானவர்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
5. தாய்லாந்தில் ஒரு ஹோட்டல்
6. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற நலிவடைந்த தொழிற்சாலைகளை வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு

இன்னும் பட்டியல் முடியவில்லை. அமலாக்கப் பிரிவு தோண்ட தோண்ட பட்டியல் நீண்ட வண்ணம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் பிரதமர் மன்மோகன் சிங் "Don't let the big fish escape" என்று மத்திய புலனாய்வு துறையினருக்கு கட்டளையிட்டார். இப்படி அப்படிப்பட்ட ஒரு மீன் தான். இந்த வழக்கு கூடிய விரைவில் மத்திய புலனாய்வு துறையினர் வசம் சென்று விடும். மீன் பிடிக்கப்படுமா அல்லது இதுவும் அவர்கள் புலனாய்வு செய்துகொண்டு இருக்கும் அல்லது செய்வது போல பாவ்லா காட்டும் "ஆருஷி தல்வார்" வழக்கு போல ஆகுமா என்று பார்ப்போம்.

Thursday 12 November 2009

தமிழ் அகராதி

வலையில் ஏதோ தேடும் போது இது அகப்பட்டது. தமிழ் நாட்டம் உள்ளவர்களுக்கு உதவலாம்.

Monday 9 November 2009

கமல்ஹாசன் பிறந்தநாள் - பத்து தீர்மானங்கள்

நவம்பர் ஏழாம் தேதி அன்று தன் ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். பகுத்தறிவாளர்கள் பிறந்தநாள் தீர்மானங்கள் (Resolution) எல்லாம் எடுப்பார்களா என்று நமக்கு தெரியாது.இருந்தாலும், அவருக்காக நாம் பரிந்துரைக்கும் சில தீர்மானங்கள் இதோ:

1. குழப்பமாக மட்டுமே பேசுவேன் என்பதை மாற்றிக்கொள்வேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

2. சந்தானபாரதி, R.S.சிவாஜி இருவருக்கும் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வருங்காலத்தில் ராஜ்கமல் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ஒரு பாத்திரம் வழங்குவேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளலாம்.

3. வையாபுரி, அப்பாஸ் போன்றவர்கள் மிகக் குறைந்த பணம் அல்லது பணமே பெற்றுக்கொள்ளாததால் எல்லா படத்திலும் அவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

4. சுற்றுலா பொருட்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்ல நேர்ந்தால் கூட நாத்திகம் அல்லது பகுத்தறிவு பற்றி பேசியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன் என்று ஒரு தீர்மானம் செய்து கொள்ளலாம்.

5. "கமல் ஐம்பது" விழாவில் ரஜினி என்னை புகழ்ந்ததை போல நானும் பிறரை புகழக் கற்றுக்கொள்வேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

6. எந்த படமாக இருந்தாலும் அதில் மூக்கை நுழைப்பேன் என்ற எனது கொள்கையை தளர்த்திக் கொள்வேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளலாம்.

7. "Method Acting" பற்றிய தனது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று தீர்மானிக்கலாம்.

8. நேரம் கிடைக்கும் போது நல்ல கதை அமைந்தால் மேடை நாடகங்களில் நடிப்பேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம். (கமல் போன்றவர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது, நலிந்திருக்கும் அந்த கலைக்கு செய்யும் பெரும் உதவி. மலையாள நடிகர்கள் பலர் மேடை நாடகங்களிலும் நடிக்கிறார்கள்)

9. வார்த்தை ஜாலம் எல்லாம் பிரயோகம் செய்யாமல், அடுத்த தலைமுறை நடிகர்களில் இவர்(கள்) நடிப்பு எனக்கு பிடிக்கிறது என்று மனம் திறந்து பாராட்டி, அவர்(கள்) மேலும் நன்றாக தன்னை மெருகேற்றிக்கொள்ள உதவலாம்.

10.இறுதியாக,வீடு மாற்றும் போது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

Thursday 5 November 2009

Guess who this is?

மயான பூமி புக்கிங் - ஒரு அனுபவம்

பக்கத்து வீட்டில் இருந்த வயதான பெண்மணி இறந்துவிட்டார். இறந்தவரின் குடும்பத்தினர் வெளியூருக்கு தகவல் சொல்வதிலும் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பேசுவதிலும் மும்முரமாக இருந்ததால், அருகில் உள்ள மயான பூமிகளுக்கு போன் செய்து எத்தனை மணிக்கு சடலத்தை எரிப்பதற்கு எடுத்துக்கொண்டு வரலாம் என்று விசாரிக்கும் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். முதலில் பேசியது பெசன்ட் நகர் மின்சார மயான பொறுப்பாளரிடம்.

நான்: சார், வீட்ல பாட்டி இறந்துட்டாங்க. எப்போ எடுத்துட்டு வரலாம்?
பொறுப்பாளர்: இன்னிக்கு ஏற்கனவே பத்து பேர் புக்கிங் செஞ்சிருக்காங்க. நாளைக்கு தான் சார் முடியும்.
நான்: இல்ல சார், நாளைக்கு கஷ்டம் சார். இன்னிக்கு விடியகாலைல போனது. நாளைக்கு வரைக்கும் வீட்ல வெச்சுட்டு இருந்தா கஷ்டம் சார்.
பொறுப்பாளர்: அதுக்கு நான் என்ன சார் பண்றது? நாளைக்கு கூட ரெண்டு மூணு பேரு புக் பண்ணி இருக்காங்க. டைரியை பாக்கணும். (அதெப்படி ஒரு நாள் முன்பாக புக் செய்ய முடியும் என்று கேட்க நினைத்தேன். கேட்க பயமாக இருந்தது)
நான்: அப்போ இன்னிக்கு முடியாதா சார்?
பொறுப்பாளர்: வேணா எடுத்துண்டு வந்து இங்க வெயிட் பண்ணுங்க. ஆறு மணிக்கு மேல பாக்கலாம். ஆனா, எக்ஸ்ட்ரா செலவாகும்.
நான்: சரி சார், வீட்ல கேட்டுட்டு சொல்றேன்.

மின்சார மயானம் வேண்டாம் சாதாரண மயானமே போதும் என்று முடிவு செய்யப்பட, மீண்டும் வீட்டுக்கு அருகில் இருந்த மயான பூமி காப்பாளரை தொடர்பு கொண்டேன்.
நான்: சார், வீட்ல டெத் சார். இன்னிக்கு எரிக்க முடியுமா?
மறுபக்கம்: எரிக்கலாம் சார். என்ன ஏஜ் இறந்தவங்களுக்கு? போலீஸ் கேசா?
நான்: இல்ல சார். தொண்ணுறு வயசு பாட்டி.
மறுபக்கம்: போலீஸ் கேசுன எக்ஸ்ட்ரா சார். அதுக்கு தான் கேட்டேன். சரி எடுத்தாங்க.
நான்: எப்போ?
மறுபக்கம்: வாங்களேன் ஒரு மூணு மூன்ற மணிக்கு. எவ்வளோ பேர் குளிக்க போறீங்க இங்க? தண்ணி எல்லாம் ரெடி பண்ணனும். பைப்ல தண்ணி வரல.
நான்: வீட்ல கேட்டுட்டு உங்களுக்கு திரும்ப போன் பண்றேன் சார்.
மறுபக்கம்: புக் பண்ணாம எடுத்துட்டு வரதால எக்ஸ்ட்ரா ஆகும் சார்.
நான்: இப்போ பண்றது புக்கிங் இல்லையா?
மறுபக்கம்: இன்னிக்கே எரிக்கணும்னு சொல்றீங்களே? எப்படி புக் செய்யறது?
நான்: சரி சார், நான் வீட்ல கேட்டு சொல்றேன். எக்ஸ்ட்ரா அப்படின எவ்வளோ ஆகும்?
மறுபக்கம்: ஒரு மூவாயிரம் ஆகும்.
நான்: சரிங்க

கவுண்டமணி ஒரு படத்தில் கிராமத்தில் வெட்டியானாக இருப்பார். அந்த ஊரில் இருப்பவர்களிடம் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் இறந்த பின் நல்ல விதமாக புதைப்பேன்/எரிப்பேன் என்று கூறி மரணத்திற்கு பணம் வசுலிப்பார்.அந்த பணத்தை எடுத்துக்கொண்டு துபாய் சென்று விடலாம் என்று திட்டமிடுவார்.அதை செந்தில் கெடுத்து விடுவார். இரண்டு மயான பூமி ஆட்களிடம் பேசி முடித்தவுடன் கவுண்டமணி ஐடியா தான் தோன்றியது. இது மாதிரி திட்டங்கள் அயல்நாடுகளில் உண்டு. ஆயுள் காப்பீடு மாதிரி இது ஆயுள் இழப்பீடு திட்டம்.

கீழே உள்ளது போல ஒரு விளம்பரத்தை கூடிய விரைவில் நமது தினசரிகளில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் புதைக்கப்படும் இடத்தை உயிரோடு இருக்கும் போதே பாருங்கள். உங்களுக்காக கல்லறையின் மலர்கள் சூழ்ந்த இடத்தில் இடம் வைத்திருக்கிறோம். இப்போதே மாதம் ஐந்நூறு ரூபாய் செலுத்தி திட்டத்தில் சேருங்கள். இந்த விளம்பரத்தை எடுத்துக்கொண்டு எங்கள் அலுவலகம் வருபவர்களுக்கு முன்பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது. இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

புதைக்கப்படுபவர்களுக்கு:

1. வீட்டிலிருந்து ஏ.சி காரில் மயனத்திற்கு பயணம் செய்யுங்கள். மயான காரியங்கள் முடிந்த பின் உங்கள் உறவினர்கள் மீண்டும் அதே காரில் வீடு சென்றடையலாம்.

2. பெற்ற பிள்ளை ஒரு நாள் தான் பாலூற்ற வருவார். நாங்கள் மாதம் ஒரு முறை நல்ல பசும்பால் ஊற்றுவோம்.

3. புழு, பூச்சி அண்டாமல் நீங்கள் படுத்திருக்கும் இடத்தை சுத்தம் செய்வோம்.

4. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பூமாலை சாற்றப்படும். திவச தினத்தன்று சிறப்பு சாப்பாடு படைக்கப்படும்.

எரிக்கப்படுபவர்களுக்கு:

1. இறந்த அன்றே நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நீங்கள் நாறாமல் தப்பிக்கலாம். இது குறித்து வெட்டியானிடம் நேரில் தொடர்பு கொண்டு பேச வசதி செய்து கொடுக்கிறோம்.

2. எரிக்கும் போது சூடு தாங்காமல் எழுந்து கொண்டால், தேக்கு மாற கட்டையால் உதைக்கப்படுவீர்கள்.

3. உங்கள் உறவினர்கள் சிதைக்கு எரியூட்டி சென்ற பின் நெருப்பை அணைத்து உங்கள் வேட்டி, சட்டை,ஜட்டி போன்றவை உருவப்பட மாட்டாது என்று உறுதியளிக்கிறோம். மானத்தோடு சொர்க்கம்/நரகம் சென்று சேர எங்கள் திட்டத்தில் சேருங்கள்.

4. யாரோ ஒருவர் சாம்பலை உங்களுடையது என்று உங்கள் உறவினர்களிடம் தர மாட்டோம்.


பொது:

1. ஒப்பந்த பத்திரம் எங்களிடம் உண்டு. அதை படித்த பின் நீங்களும் வெட்டியானும் கையெழுத்திடலாம். முன் பதிவு மற்றும் மாத சந்தா செலுத்த கிரெடிட் கார்டு வசதி உண்டு.

2. நீங்கள் விரும்பும் மயான பூமியில் தகனம்/புதைப்பு. நெத்திக் காசு ஐந்து ரூபாய் எங்கள் செலவு.

மேலும் விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

Monday 2 November 2009

பட்டங்கள்

இமயமே
மன்னவரே
சாதனையே
நாளைய சரித்திரமே
செங்கரும்பே
ஓயாத உழைப்பே
எங்களை வழி நடத்தும் முகவரியே
உழைப்பால் உயர்ந்த உன்னதமே
செயல் திட்டங்களின் சிகரமே
இணையான இமயமே
திராவிட திருவிளக்கே
முத்தமிழ் எழுதிய முதல் வரியே(இந்த வரியில் சொற்குற்றம் இல்லை ஆனால் பொருட்குற்றம் உள்ளது. மு.க.முத்து தானே முதல் வரி, அதற்கு பின் அழகிரி அப்புறம் ஸ்டாலின். சரி முத்து வேறு ஒருவருக்கு பிறந்தவர் என்று வைத்துக்கொண்டால் கூட, அழகிரி தானே முதல் வரி. கழக கண்மணிகளின் தமிழில் பிழை இருக்கலாமா? )

இன்று தாம்பரம் வரும் துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்க தி.மு.கவினர் கிண்டி முதல் தாம்பரம் வரை வைத்திருந்த வரவேற்பு அட்டைகளில் இருந்த பட்டங்கள். துணை முதல்வருக்கு வேறு என்ன பட்டங்கள் கொடுக்கலாம்? கழக தொண்டர்களுக்கு எதோ நம்மால் இயன்ற உதவி:

குலமகள் ராஜாத்தி பெற்ற கோபுரமே
கனிமொழியின் காவலனே
வேளச்சேரி விடிவெள்ளியே
அனுபவ ஆவணமே
ஏழைகளின் கோமணமே
போயஸ் தோட்டத்தை அழிக்க வந்த போர்வாளே
நெடுஞ்சாலை மயில்கல்லே(பட்டம் கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ண அப்பறம் எதுக்கு அர்த்தம் எல்லாம் பாக்கணும்)
அஞ்சாநெஞ்சர் அழகிரியின் தம்பியே (இதை வைப்பவருக்கு செருப்படி நிச்சயம்)

Thursday 29 October 2009

மழை

ஒரு பூவினிலே விழுந்தால் சிறு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண்மணிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை தந்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கடந்தால் வேறெங்கு நனைவது

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு துணி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டம்
நடுச்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ

மழை பாடல்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமே இல்லை. ஆனால், எனக்கு பிடித்த பாடல் இது தான். என் சுவாசக் காற்றே படத்திற்காக வைரமுத்து அவர்கள் எழுதியது.

மழை காதலுக்கான பருவம். என் சிறு வயது மழை நினைவுகளில் பெண்களுக்கு பெரும் பங்குண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததால் நிறைய பெண்கள் மீது "infatuation" இருந்தது. அந்த "infatuation" காதல் என்று நினைத்துக் கொண்டு நான் உளறியதெல்லாம் பெரும்பாலும் மழை காலங்களில் தான்.

"ரெண்டு வருஷம் வெயிட் பண்ணு, MBA முடிச்சிட்டு உங்க வீட்ல வந்து பேசறேன் என்று சொல்லிய இரண்டு மாதங்களில் அந்த பெண் என்னை மாதிரி நாலு பேரை தாண்டி சென்று விட்டிருந்தாள். அந்த "அயிட்டத்தை" நினைத்து பெட்டிக் கடைகளில் தம் அடித்து நண்பர்களிடம் புலம்பியதெல்லாம் கூட இது போன்ற மழை தருணங்களில் தான். என் முதல் முத்தம் கூட ஒரு நல்ல மழை நாளில் தான் கொடுத்து வாங்கப்பட்டது.என்னைப்போல் உங்கள் ஒவ்வொருவருக்கும் மழைக்கால நினைவுகள் நிறைய இருக்கும். பழைய பக்கங்களை மனதில் புரட்டிப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். புரட்டிப் பாருங்கள். ஹைய்யா, மழை சீசன் வந்தாச்சு.

Thursday 22 October 2009

உலக வெப்பமயமாதல்

சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். ஆனால், இந்த முப்பது வருடங்களில் இப்படி ஒரு வெப்பத்தை ஐப்பசி மாதத்தில் பார்த்ததில்லை.பொதுவாக, சென்னைக்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.சென்னையில் பருவ மழை என்று ஒன்று கிடையாது.புயல் சின்னம் சென்னைக்கருகே எங்காவது தோன்றினால் தான் சென்னையில் மழை.மற்றபடி, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை எல்லாம் சென்னைக்கு பொருந்தாது.இருந்தாலும், ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இப்படி வெய்யில் காயாது.

ஆனால், இந்த வருடம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் மழை இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார், உ.பி போன்ற வட மாநிலங்களில் கூட மழையில்லை. இதெல்லாம் உலக வெப்பமயமாதலின்(Global Warming) ஒரு பகுதி என்றே தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மனித குலத்தின் செயல்களே என்கிறது தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) மற்றும் NASA போன்ற அமைப்புகள். காடுகளை அழிப்பது, புதைவடிவ படிமங்களை எரிப்பது, மரங்களை வெட்டுவது போன்றவை புவி சூடாக முக்கிய காரணங்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இமயமலை உருக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சரி, நம் அளவில் புவி சூடாவதை தவிர்க்க என்ன செய்யாலாம்:
1. உங்கள் ஊரில் உள்ள ஒரு நல்ல அமைப்பில் சேர்ந்து மரக்கன்றுகளை நடுங்கள்.
2. தேவைப்பட்டாலொழிய காகிதங்களை பிரிண்ட் செய்யாதீர்கள்.(ஒரு புத்தகம் உருவாக சில மரங்கள் வெட்டப்பட வேண்டும். புத்தகங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் அதற்காக வெட்டப்படும் மரத்தை போல இரு மடங்கு மரங்கள் நடப்பட வேண்டும்)
3. டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காதீர்கள். எரிப்பவர்களை கண்டால் புவி சூடாதல் பற்றி எச்சரியுங்கள்.
4. நமக்கு நேராத வரை பிரச்சனை இல்லை என்ற எண்ணத்தை முதலில் ஒழியுங்கள். வருங்கால சந்ததி வாழ வழி செய்யுங்கள்.

Wednesday 21 October 2009

இருபத்தியொரு நாட்களில் தமிழ் சினிமா பாடலாசிரியர் ஆவது எப்படி?

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளவரா நீங்கள்?சங்க இலக்கியம், உலக இலக்கியம் இதெல்லாம் படிக்காமல் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக உருவெடுப்பது கடினம் என்கிற பீதி உங்களை பீடித்திருக்கிறதா? கவலை வேண்டாம் நண்பரே. வேட்டைக்காரன்,கந்தசாமி பட பாடல்களை இரண்டு முறை கேளுங்கள். நீங்களும் கவிஞராகலாம்.உங்களுக்காக சில சாம்பிள் இதோ:

"நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்ட
மோதிப் பாரு முழுசா வூடு போய் சேர மாட்ட"

மேலே உள்ள வரிகள் வேட்டைக்காரன் படத்திலிருந்து. அதே படத்தின் ஒபெனிங் சாங் வரிகள் இதோ:

"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடிக்குது வேட்டைக்காரன் வராண்டா"

எவ்வளவு கருத்தாழம் கொண்ட வரிகள்? புலி உறுமும், இடி இடிக்கும் என்று தமிழனை ஆதி மனிதனாய் கற்பனை செய்து அவனுக்கு கற்றுத் தருகிறார் கவிஞர்.அற்புதம்.இப்போது கந்தசாமி பாடல் வரிகள் சிலவற்றை பார்ப்போம்:

"மியாவ் மியாவ் பூனை மீசை இல்ல பூனை
திருடி தின்ன பாக்கிறியே திமுசு கட்ட மீனை"

அடுத்த ஆண்டு கீழ்பாலர்(LKG) வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தில் இதை கண்டிப்பாக "Rhymes" பகுதியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு தகப்பனாக நான் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதே படத்திலிருந்து மற்றுமொரு பாடல்

Hey excuse me ms subulakshmi
ur activites are தப்பு லக்ஷ்மி
உன் பேச்சும் தோற்றம் ரொம்ப குப்ப லக்ஷ்மி
போடா போடா

ஏய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விடமாற்றியே
நீ படிச்ச பொண்ணு தானா
உன்ன படிக்க முடியலையே
ஏய் தள்ளி போ
என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு
ரொம்ப மூடு
ஐயையையோ

இது சாம்பிள் தான். இந்த படங்களின் எல்லா பாடல்களையும் நீங்கள் இரண்டு முறை கேட்டால் நீங்கள் பாடலாசிரியர் ஆவது உறுதி. இந்த படத்தின் பாடல்களை கேட்ட பின் நான் எழுதிய பாடலை கீழே பாருங்கள்.

Situation: காதலன் காதலியிடம் தன் ஆண்மை பற்றி கூறுகிறான்

ஏய் நீ Maruti Swift டி
நான் Hyundai Santro டி
நீ டீசல் வண்டி டி
நான் பெட்ரோல் வண்டி டி
உன் என்ஜின் எப்போவென பிரச்சனை பண்ணும் டி
என் என்ஜின் ரொம்ப soft and smooth டி
நம்ம ரெண்டு என்ஜின் ஒன்ன சேர்ந்த மத்த காருக்கெல்லாம் பீதி டி
நீ மேற்கு வங்காளம்னா நான் நக்சல் டி
உன்னை சின்னாபின்னமாக்க வந்த ஆம்பள சிங்கம் டி

இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. உடனே எடுங்கள் பேனாவை...

Tuesday 20 October 2009

தமிழ் சினிமாவில் ஊர்திப் பாடல்கள்

தமிழ் சினிமா எழுபத்தைந்து ஆண்டுகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்களில் மன்னர் மரபை சேர்ந்த கதைகளே பெரிதும் படமாக்கப்பட்டன. அதன் பின் கால மாற்றத்திற்கு ஏற்ப கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரைப்படங்களாக மாற்றப்பட்டன.

இந்த மாற்றங்களின் பின்னணியில் முக்கியமான ஒரு அம்சம் பாடல்கள் படமாக்கப்படும் விதம். முதலில் சினிமா அரங்குகளில் படமாக்கப்பட்ட பாடல்கள் பின்னர் வெளியுலகில் எடுக்கப்பட்டன. நிஜமான மலை,அருவி,தடாகம் போன்றவை படங்களில் இடம்பெற்றன. செட்டுக்களில் சுற்றிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் என்று பாரதிராஜாவை பற்றி சொல்வார்கள். இவர் வந்த பின்பு தான் வெளிப்புற படபிடிப்பு அதிகம் நடைபெற்றது. இருந்தாலும் எம்.ஜி.யார் தான் அன்பே வா, உலகும் சுற்றும் வாலிபன் போன்ற படங்களின் வாயிலாக இதை முதல் முதலில் முயற்சி செய்தார் என்று நினைக்கிறேன்.அதே போல் பாடல்கள் பல்வேறு ஊர்திகளில் படம் பிடிக்கப்பட்டன. மலைக்கள்ளனில் குதிரையில் பாடிய எம்.ஜி.ஆர், பின்னாளில் ரிக்க்ஷாகாரனாக மாறி பாடினார். இப்படி ஊர்திகளில் படமாக்கப்பட்ட பாடல்களை பற்றியதே இந்த பதிவு.

எம்.கே.டி, பி.யு.சி கால படங்கள் பெரும்பாலும் ஆன்மிகம், மன்னர் கால கதைகள் போன்றவற்றை சார்ந்தே இருந்தன. ஆகையால், இந்த காலகட்டத்தில் படமாக்கப்பட்ட பாடல்கள் பெரிதும் குதிரை சார்ந்தவை. இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் இளமைக்கால படங்களில் கூட குதிரை, படகு போன்றவை தான் பாடல்களில் பிரதான பங்கு வகித்தன. இவர்கள் பின்னாளில் நடித்த படங்களில் தான் கொஞ்சம் கொஞ்சமாக சைக்கிள், பைக், கார் என்று தமிழ் சினிமா ஊர்திகளின் பரிணாம வளர்ச்சியை கண்டது.

இதற்கு முன் சைக்கிள், கார் போன்றவை தமிழ் சினிமாவில் காட்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு பாடலை முழுவதுமாக ஒரு ஊர்தியில் படம் எடுக்க ஆரம்பித்தது 1960 பிறகு தான் என்று எண்ணுகிறேன்.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாடல், "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்னும் பாவமன்னிப்பு படத்தின் பாட்டு. முழுப்பாடலையும் சிவாஜி சைக்கிள் மேல் அமர்ந்து பாடியிருப்பார். அந்த சைக்கிளில் எதோ "வைத்தியசாலை" என்று பெயர் கூட இருக்கும். என்ன பெயர் என்று இப்போது நினைவில்லை.

கப்பலையே காட்டாமல் கப்பலில் நடப்பதாக எடுக்கப்பட்ட பாட்டு புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்,உண்மை சொல்ல வேண்டும்" பாடல். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் "வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்" பாடலில் கப்பல் வரும் என்று நினைக்கிறேன்.நினைவில்லை.இதை படிப்பவர்கள் உறுதி செய்யுங்கள்.

ஊர்தியில் படமாக்கப்பட்ட மற்றுமொரு அழகான பாடல், "அழகிய மிதிலை நகரினிலே" என்று காரில் சென்னை நகரை சுற்றி எடுக்கப்பட்ட பாடல். படப்பெயர் தெரியவில்லை. சிட்டுக்குருவி படத்தில் வரும் "என் கண்மணி உன் காதலி" பாடல் மற்றுமொரு முக்கியமான ஊர்திப் பாடல். அந்த கால பல்லவன் பஸ்சில் படமாக்கப்பட்டது. இதில் கண்டக்டர் சொல்லும் வசனங்கள் மிகப் பிரபலம். ஆனால், பாடல் முழுதும் பஸ்சில் படமாக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. ஒரு வழியாக, சைக்கிள், கார், பஸ்ஸை தாண்டிய தமிழ் சினிமா "பறந்தாலும் விடமாட்டேன்" என்கிற பாடலின் மூலம் தன் பறக்கும் இச்சையை தீர்த்துக்கொண்டது. பாடல் இடம் பெற்ற படம் குரு. பாடல் முழுதும் விமானத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளிவந்த நேரத்தில் நிச்சயம் இந்த பாடல் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும். இன்று வரை இந்த மாதிரி ஒரு விமானப் பாடல் எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ரயில் பாடல்கள் நிறைய உண்டு. "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது(பச்சை விளக்கு) ஆரம்பித்து ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்(5 ஸ்டார்)" வரை எத்தனை பாடல்கள். சொல்ல ஆரம்பித்தால் கணக்கே இல்லை. இன்னும் சில பிரபலமான ஊர்திப் பாடல்கள்:

பாரப்பா பழனியப்பா(பெரிய இடத்து பெண்) - மாட்டுவண்டி
ஓஹோ எந்தன் பேபி(தேன்நிலவு) - இது ஊர்தி பாடல் என்று சொல்ல முடியாது ஆனால் வித்தியாசமான விதத்தில் படமாக்கப்பட்ட பாடல்
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு(குங்குமச்சிமிழ்) - கூட்ஸ் ரயில்
ஆஹா, இன்ப நிலாவினிலே(மாயாபஜார்) - படகு
சின்னத்தாயவள்(தளபதி) - கூட்ஸ் ரயில்
தாலாட்டும் காற்றே வா( பூவெல்லாம் உன் வாசம்) - ரயில்
அந்த நாலு பேருக்கு நன்றி(நம்நாடு) - ரயில்
ஸெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்(முள்ளும் மலரும்)- ஜீப்
என்னை கொஞ்சம் மாற்றி(காக்க காக்க) - ஜீப்

நீங்களும் கொஞ்சம் யோசித்து நான் மறந்த பாடல்களை கொஞ்சம் பின்னூட்டம் இடுங்களேன்.

Saturday 17 October 2009

மதுரையில் சிவாஜி சிலை திறப்பு விழா- அழகிரி பேச்சு

மதுரையில் சமீபத்தில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பேச்சு, சில பகுதிகளில் சிவாஜி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அழகிரிக்கு முன்னால் பேசிய கமல் தன்னை நடிகர் திலகத்தின் மூத்த மகன் என்றார். இதை சிவாஜி தான் முதலில் சொன்னதே. இது கமலின் நடிப்பின் காரணமாக சொல்லப்பட்டது.

இதற்கு பின் பேச வந்த அழகிரி, "கமல் சொன்னது தவறு என்றும் சிவாஜியின் மூத்த மகன் அவர் தான் என்றும் கூறினார்". சிவாஜியை வெகுவாக புகழ்ந்த அழகிரி, தன் திருமணத்திற்கு சிவாஜி வராததால், அவரை சில நாட்கள் பார்க்கும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்தியதாகவும் பின்னர் சமாதானம் அடைந்ததாகவும் சொன்னார்.

பராசக்தி படத்தில் சிவாஜி நடித்த சில காட்சிகளை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், "என்ன நடிகர் இவர்? இவரை மாற்றுங்கள்" என்று சொன்னதாகவும், அப்போது பெருமாள் முதலியாரும், கருணாநிதியும் தான் சிவாஜிக்கு குரல் கொடுத்து, அவர் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் குறிப்பிட்ட அழகிரி, அன்று என் தந்தை மட்டும் போராடியிருக்கா விட்டால் தமிழகத்துக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருப்பாரா? இன்று நாம் தான் அவருக்கு சிலை வைக்க முடியுமா என்றார்.பாவம், சிவாஜி ரசிகர்கள். இதையெல்லாம் கேட்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, இந்த செய்தி உண்மை என்றால் கூட பரவாயில்லை. பிரபல சினிமா செய்தியாளர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" அவர்களிடம் துக்ளக் நிருபர் இது பற்றி கேட்ட போது, "அண்ணா அவர்கள் தான் செட்டியாரிடம் இது பற்றி பேசியதாகவும், சிவாஜி கொஞ்சம் மெலிந்து காணப்பட்டதால் செட்டியார் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த தயங்கியதாகவும் கூறுகிறார். பெருமாள் முதலியார் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.வி.எம்.செட்டியார் தான் நிதியுதவி. அதனால், செட்டியாரை சமாதானப்படுத்த பெருமாள் முதலியாரும் அண்ணாவும் நாடக நடிகரான சிவாஜி கணேசனுக்காக வாதாடியதாகவும் கூறுகிறார் ஆனந்தன்.கலைஞரை பற்றி ஒரு வார்த்தை கூட இதில் இடம்பெறவில்லை.

கலைஞர் என்னும் திருதிராஷ்ட்ரன் தன் மகன்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் மௌனம் சாதிப்பது நமக்கு புதிதல்ல.

பின்குறிப்பு: நிகழ்ச்சிக்கு வந்த பலர், அழகிரி காலில் விழுந்து ஆசி பெற்றனர். அதே போல், பேச்சிலும் அழகிரி புகழ் நெடி தூக்கலாகவே இருந்தது. கமல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

Thursday 15 October 2009

கமல் - 50 விழாவில் கவனித்தது..



- கமலின் ஆரம்ப கால நாயகிகளான ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றோர் வரவில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் (அதாவது இப்போது நாற்பதுகளில் இருப்பவர்க்கு).

- கமலின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆளான பாரதிராஜா வரவில்லை ஏன் என்று தெரியவில்லை

- கமலின் மற்றொரு நெருங்கிய நண்பரான நாசர் வரவில்லை

- பார்க்க முடியாத மற்றும் சிலர் - சத்யராஜ்,குஷ்பு,அஜித், விஜய்,மனோரமா,சூர்யா ...மற்றபடி விக்ரம்,பாலா பற்றியெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.

-இது போன்ற விழாக்களில் தேர்ந்தெடுத்து எப்படி திரு.விஜயகாந்த் கழற்றி விடப்படுகிறார் என்று தெரியவில்லை. கேப்டன் சீக்கிரம் சி.எம்.ஆகுங்க எல்லோரும் பொன்னாடை போர்த்த வருவாங்க.

-கமலை பாராட்டி பலர் பேசினார் , இருப்பதிலேயே சிறப்பாக பாராட்டியவர் பிரபுதேவா (பேசவேயில்லை, அவரும் அவர் தந்தையும் சேர்ந்து நடனமாடினர்). ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனுக்கு இதை விட சிறப்பாக யாரும் மரியாதை செய்ய முடியாது , (Juggler கதை ஞயாபகம் வருகிறது).

-கமல் என்றொரு மகத்தான கலைஞன் மேல் தமிழக திரையுலகம் வைத்திருக்கும் மரியாதையை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானாவர் ஒருவர் மட்டுமே .. அது திரு.கமல்ஹாசன்.

-நான் கமல் பற்றிய் பல்வேறு காலகட்டங்களில் பல பத்திரிக்கை செய்திகளை படித்ததில் இருந்து கமலுக்கும் அவருடன் நடித்த பல பேருக்கும் பிரச்சினை என்றே நினைத்து இருந்தேன்

..உ.தா.அர்ஜுன், குருதிப்புனல் படத்தில் நடித்ததில் அர்ஜுன் மிகவும் காயப்பட்டு விட்டார் என்று படித்து இருக்கிறேன். இந்த விழாவில் கமலின் காலில் விழப்போனார் அர்ஜுன்.

-நாயகன் என்றொரு படத்தை அளித்தவரும் (பேசிய பலரும் நாயகனை பற்றி சொன்னார்கள், நாயகன் வந்து சுமார் 22 வருடங்கள் ஆகின்றன)
கமலின் மருமகனுமான மணிரத்னமும் , அவரின் அண்ணன் மகளுமான சுஹாசினி , மற்றும் அண்ணனான சாரு ஹாசன் போன்றோரை பார்க்க முடியவில்லை.

-தெலுங்கு படவுலகில் இருந்து வந்த வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜுன் போன்றோர் தமிழில் பொளந்து கட்டினர் ...

-பிரகாஷ்ராஜின் தமிழ் அறிவு பிரமிப்பூட்டியது- தமிழ் கண்ணதாசன் கையில் இருப்பது போலவும் - பாரதியின் கையில் இருப்பது போலவும் - தமிழ் சினிமா கமலின் கையில் இருப்பதாக குறிப்பிட்டார்.செல்லம்.. எப்படி செல்லம்...?

--நாயகியருள் அருமையாக பேசியது ராதிகா ... ஒரு சாம்பிள் " கமலை விட கமல் கூட நடித்த ஹீரோயின்களைதான் அதிகம் பாராட்ட வேண்டும், நாங்க இல்லாமல் நீங்க எப்படி காதல் மன்னன் ஆக முடியும்?"

-விழாவில் கடைசியாக பாராட்ட வந்தது ரஜினி. இருவரும் உண்மையிலேயே நண்பர்கள்தான் போல .. இருவரும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. இருவருமே கண்கலங்கி போனார்கள்.முத்தம் குடுத்துக்கொண்டார்கள்.ரஜினி தன்னை தாழ்த்தி கொண்டு பேசினார், தன்னை தாழ்த்துவதின் மகிமையை அவர் முற்றிலும் உணர்ந்தே இருக்கிறார். ரஜினி பேசும்போது நான் கவனித்தவரை முகத்தை சுளித்தது மம்மூட்டி, அவருக்கு ரஜினி மிகவும் ஓவராக பேசுவதாக தோன்றி இருக்கும் போல.

-கடைசியில் ஏற்புரை ஏற்க வந்தார் கமல் - பொதுவாக ஒரு கலைஞனாக கமலை நமக்கு தெரியும்.ஆனால் தமிழ் பத்திரிக்கைகள் மூலமாக ஏற்பட்ட பிம்பம் - அவர் மனித உறவுகளை பேணுவதில் அவ்வளவு நாட்டமில்லாதவர் என்று- அது உண்மை என்று பல சம்பவங்கள் சொல்கின்றன - சாருஹாசன், மணிரத்னம் போன்றோரின் absence ஒரு உதாரணம். அப்படிப்பட்ட கமலுக்கு இத்தனை பேர் திரண்டு இருந்து செய்த மரியாதையை அவரை திக்குமுக்காட செய்து விட்டது என்றே தோன்றியது.ஏறக்குறைய அழுவதற்கு முந்தைய நிலையில் இருந்தார் - அந்த நேரத்திலும் அவர் மக்களை தன்னுடைய சிக்கலான தமிழில் குழப்ப தவறவில்லை - இவர் கூட பேசிப்பேசி சந்தான பாரதிக்கு  தலையில் முடியே இல்லாமல் போய்விட்டது போல.கமலுடைய ஏற்புரையில் தனித்தனியே மற்றவர்க்கு நன்றி செலுத்த முடியாமல் போனதால் - பொதுவாக எல்லோருக்கும் நன்றி செலுத்தி விட்டு , ரஜினியை மட்டும் தன்னுடைய பேச்சில் சேர்த்துக்கொண்டார் - கமல் ரஜினியை பற்றி சொன்னது - "எவன் பேசுவான் இப்படி?"...ஹ்ம்ம்...

-பொதுவாக விஜய் டி.வியின் நேயர்கள் நகரத்தில் வசிக்கும் நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கம்தான், கமலின் ஏரியாவும் அதுதான், so, விஜய் டி.வி பின்னி விட்டார்கள். மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யத்தான் போகிறார்கள்.

சிறந்த நிகழ்ச்சி .. கொஞ்சம் நேரத்தை குறைத்து இருந்தால் மிகச்சிறப்பான நிகழ்ச்சியாக இருந்து இருக்கும்.

Tuesday 13 October 2009

ஞானி - என்னை போல் ஒருவனா நீங்கள்?

சமீபத்தில் உன்னை போல் ஒருவன் படத்தை குமுதத்தில் ஞானி விமர்சனம் செய்து இருந்தார் , அதற்கு ஒரு எதிர்வினை.//  // குறிக்குள் இருப்பது ஞானியின் எழுத்துக்கள். ஞானியின் முழு விமர்சனத்தையும் படிக்க நினைப்பவர்கள் இங்கே செல்லலாம்.

//படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன். //


இதுவரைக்கும் சரி.. இனிமேல்தான் பிரச்சினை, ஞானி மேலும் எழுதுகிறார்

//
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.//


ஞானியே நீங்கள் என்னை போல் ஒருவரா? நிச்சயம் இல்லை.நிச்சயமாக இந்தியாவில் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர் இருக்கவே செய்கின்றனர், எப்படி சிலர் தூக்கு தண்டனையை எதிர்க்கின்றனறோ , அப்படியே மிகப்பலர் ஆதரிக்கவே செய்கின்றனர், "இந்த மாதிரி குண்டு வைக்கின்ற ஆட்களை தூக்குல போடணும் சார்" என்று பலர் பேசிக்கொண்டேதான் இருக்கின்றனர்.இது ஒரு பொது புத்தி, பொது புத்தியை உருவாக்குபவர் பெயரில்லாத பொதுஜனம், அந்த பொதுஜனமே நோக்கியே சொல்கிறார் அந்த படத்தை எடுத்தவர் "உன்னை போல் ஒருவன்"

இதுவரை தீவிரவாதாத்தால் இறந்தவர் எத்தனை பேர் (அது இஸ்லாமிய தீவிரவாதமோ அல்லது இந்து தீவிரவாதமோ அல்லது மற்ற எந்த தீவிரவாதமோ) , கொல்லப்பட்டும் ஒவ்வொரு தீவிரவாதியும் சுமார் பத்து பொதுமக்களை கொன்று விட்டே சாகின்றனர்.

இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியலுக்கு குந்தகம் வராமல் செயல்படுத்தப்படும் 'விசாரணையின் வேகம்' உங்களுக்கு தெரியாதா? "என்னை போல் ஒருவன்" எதிர்கொள்ளும் ஆமை வேக விசாரைணையின் எதிர்வினையே அந்த படம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யமே!

//எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய். //

 
இது நிச்சயமாக ஒத்துக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஞானி எழுதுவது உண்மை.
ஆனால் மீரா நாயரின் water மற்றும் Fire வந்தபோதும் இந்துத்தவா ஆட்கள் இதையேதான் சொன்னார்கள் (அதாவது இம்மாதிரியான படங்களை இஸ்லாமிய கதாபாத்திரங்களை கொண்டு எடுக்க முடியுமா என்று?) அதாவது இந்துத்தவா ஆட்கள் சொல்லும் வாதத்தையே ஞானியும் வேறு சொற்களை வைத்து வேறு பாத்திரங்களுக்காக வேறு மதத்திற்காக சொல்கிறார்.ஹிந்தி படத்தில் வராத ஒரு ஹிந்து தீவிரவாதியை தமிழ் version-இல் சேர்த்தே இந்த கதி. இதற்காக மோடியையோ, அத்வானியோ ஆதரிக்கறேன் என்று நினைக்க வேண்டாம், என்னுடைய பதில் ஞானி அவர்களின் விமர்சனத்திற்கு மட்டும்தான்.

ஞானி அவர்களே, நீங்கள் மிகச்சிறந்த விமர்சகர், தமிழகத்தில் கலை மற்றும் அரசியலில் இன்றுள்ள நேர்மையான விமர்சகர் நீங்கள் மட்டுமே. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை மற்றவர் விமர்சிக்கலாம்தானே?

குளம்பியகத்தின் 300-வது பதிவு இது, இதுவரை ஆதரவு தந்த (இனிமேலும் ஆதரவு தரப்போகும்) அனைவருக்கும் நன்றி.

Thursday 8 October 2009

நோபல் தமிழர்



நோபல் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Wednesday 7 October 2009

www.buzzintown.com

பொதுவாக சென்னை / பெங்களூரில் இருக்கும் நம் மக்கள் வார இறுதியை எப்படி கழிக்கிறார்கள் என்று எனக்கு ஓரளவு தெரியும், இருப்பதில் சுமாரான தமிழ் படத்தை பார்ப்பது / தண்ணி அடித்து மட்டையாவது / பேங்க்/காஸ்/வண்டி/வீடு ரிப்பேர் என்று பொறுப்பானவர்களாக மாறுவது என்பது அதில் சில

சிலர் ஆங்கில / ஹிந்தி படங்களுக்கு செல்கின்றனர் .. ஆனால் எத்தனை பேர் போட்டோ கண்காட்சி , ஓவிய கண்காட்சி,உணவுத்திருவிழா,மாறுபட்ட இசை கச்சேரிகள் , திரைப்பட திருவிழாவிற்கெல்லாம் போகிறோம்? பெரும்பாலும் எங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாது அல்லவா?

www.buzzintown.com- என்ற  தளம் அதற்கு உதவுகிறது, வார இறுதி என்று மட்டுமில்லாமல் வார நாட்களிலும் நகரில் (பல இந்தியா நகரங்களில்) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை சொல்லுகிறது.இந்த வெப்சைட் உங்கள் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் இது போல வேறு சில வெப்சைட்டுகளும் தெரிந்து இருக்கலாம் , மொத்தத்தில் உபயோகமான வலைத்தளம்.

Tuesday 6 October 2009

நவீன கொள்ளையர்கள்

நீங்கள் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படித்திருக்கிறீர்களா? அதில் "திண்ணா" என்று ஒரு கதை வரும், நினைவிருக்கிறதா? அதில் சுஜாதா சொல்வார், "எனது மூதாதையர்களில் ஒருவரான குவளக்குடி சிங்கமையங்கார் ஏழை தென்கலை ஐயங்கார் பையன்களுக்கு உதவ ஒரு பாடசாலை நிறுவினார். அங்கு விஷிஷ்டாத்வைதம், புருஷ சுக்தம் போன்றவை சொல்லி தரப்பட்டன. இதெல்லாம் எப்படி அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார் என்று தெரியவில்லை".

என்னை பொறுத்த வரை,குவளக்குடி சிங்கமையங்கார் போன்றவர்கள் வருங்காலத்தை யூகித்தே இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனக்கு ஐயங்கார் பாடசாலைகள் பற்றி அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் பொதுவாக பாடசாலைகள் பற்றி உண்டு. என் தஞ்சை வீட்டை பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். நான் சிறுவனாக விடுமுறைக்கு அங்கு செல்லும் போது எதிர்வீட்டில் ஒரு பாடசாலை இருந்தது. இது ஏழை ஐயர் (Preferably Vadamal) பசங்களுக்கு என்று உருவாக்கப்பட்டது.பொதுவாக, இப்படி பாடசாலை நடத்துபவர்களுக்கு பல வழிகளில் நிதி உதவி கிடைக்கும்.இந்த பாடசாலைக்கு காஞ்சி மடம் நிதி உதவி செய்தது.

பிராமணர்களுக்கு வேத அத்த்யயணம் மிக முக்கியம். இந்த வேத அத்த்யயணம் என்பது சில ஆண்டுகள் ஒரு பாடசாலையில் தங்கி கற்க வேண்டிய ஒரு விஷயம். அந்த காலத்தில் பிராமணர்களுக்கு வேதம் ஓதுவதை தவிர வேறு தொழிலும் கிடையாது. அரசன் செத்தாலும் வேதம் ஓத வேண்டும், அவன் போரில் வென்றாலும் வேதம் ஓத வேண்டும், அவன் கிணறு வெட்டினாலும் வேதம் ஓத வேண்டும், அவன் யாகம் செய்தாலும் வேதம் ஓத வேண்டும் என்ற நிலை இருந்ததால் பிராமணர்கள் வேதம் ஓதுவதை தொழிலாக கொண்டார்கள். காலங்கள் மாற மாற, இந்த நிலை மாறியது.அரசர்களின் ஆட்சி முடிந்தது.அதற்கு பின்னால் வந்த வெள்ளையர்கள் ஆட்சியில் வேதம் தெரிந்தவர்கள் தேவைப்படவில்லை. வேறு தொழில் செய்தால் தான் "புவ்வா" கிடைக்கும் என்ற நிலை ஏற்பட, பிராமணர்கள் இந்த தொழிலில் இருந்து விலகத் தொடங்கினார்கள்.

மீண்டும் பாடசாலைக்கு வருவோம். எனக்கு தெரிந்த வரை பாடசாலை படிப்பு ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் பொதுவான விஷயங்கள் சொல்லித்தரப்படும். பொதுவான என்பது ரிக்/யஜுர்/சாம/அதர்வண வேதங்கள் போன்றவை. இதற்கு பின் அந்த மாணவர்கள் hands on செய்து திருமணம், ஸ்ரார்தம், உபநயனம் போன்றவற்றிற்கு தேவையான மந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த ஏழு ஆண்டுகள் படிப்பை சொல்லிக்கொடுக்க மாயவரம், கும்பகோணம் என்று பல ஊர்களில் பாடசாலைகள் உண்டு.

எப்படி, இரண்டு பெரிய மனிதர்கள் சந்தித்தால் "நீங்கள் எங்கு படித்தீர்கள், ஐ.ஐ.டியா? நானும் அங்கு தான். எந்த வருடம்?" என்று கேட்டுக் கொள்வார்களோ அதே போல இரண்டு சாஸ்திரிகள் சந்தித்தால் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி "எந்த பாடசாலைல படிச்சேள்? செம்பனார் கோயிலா? அது சந்திரசேகர கனபாடிகள் தான நடத்திண்டு இருந்தார்? நான் ஆங்கரை பாடசாலை. ஜாமாதா நடத்திண்டு இருந்தார். இப்போ முன்னே மாதிரி எல்லாம் இல்லை ஒய். நான் தான் பார்கறேனே.பசங்க மந்திர பிரயோகமே சரி இல்ல.போன வாரம் ஆங்கரை பாடசாலை பையன் ஒருத்தன் கல்யாணத்துல ஸ்ரார்த மந்திரம் சொல்லிண்டு இருந்தான். நமக்கேன் வம்புன்னு கண்டுக்காம விட்டுட்டேன்.கிருஷ்ணா கிருஷ்ணா" என்பார்கள்.

மீண்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் மாதிரி சொல்ல வந்ததை சொல்லாமல் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே இருக்கிறேன். ஒரு வேலை இது தான் "non linear" எழுத்தோ என்னவோ? யார் கண்டது? அடச்சே, மீண்டும் விஷயத்திற்கு வருவோம். ஆக, நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்த பாடசாலை என்ற அமைப்பை நிறுவியவர்கள், வேதம் ஓதும் தொழிலுக்கு மிகப் பெரிய Demand ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தார்கள். சொல்லப்போனால் இன்று,"Supply doesn't meet Demand".

பாருங்களேன், இன்று ஒரு விஷேசத்திற்கு சாஸ்திரிகளை வீட்டிற்க்கு அழைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? அவர் வீட்டுக்கு நாலு தடவை நடையாய் நடந்து, அவர் மனைவி, குழந்தைக்கு எல்லாம் சலாம் போட்டு "மாமா வந்தா நான் வந்ததா சொல்லுங்கோ" என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, அவர் குழந்தைக்கு ரெண்டு சாக்லேட் கொடுத்து என்று நாய் படாத பாடு பட்டு அவரை அழைக்க வேண்டி இருக்கிறது.சரி, வேறு சாஸ்திரிகளை அமர்திக்கொள்வோம் என்றால் நல்ல ஞானம் உள்ள ஒருவரை தேடி கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.

மேலும், ஒரு காலத்தில் வேதம் ஓதும் பிராமணர்கள் என்ன கொடுத்தாலும் யத்கிஞ்சிதமாக வாங்கிக் கொள்வார்கள். இன்று அந்த நிலை கிடையாது. ஒவ்வொரு விஷேசத்திர்க்கும் தகுந்த மாதிரி ஒரு அமௌன்ட் உண்டு. கிட்டத்தட்ட Prepaid ஆட்டோ மாதிரி. சரி, கொடுத்த பணத்திற்கு மதிப்பு உண்டா என்றால் அதுவும் இல்லை. எவ்வளவு சமரசம் செய்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? பசு மாட்டு எரு கிடைக்கவில்லை என்றால் அவசரத்திற்கு வறட்டியில் தண்ணீர் கலந்து அதை சாணம் என்கிறார்கள்(Reverse Engineering). இறந்தவருக்கு காரியம் செய்துவிட்டு அப்படியே திருமணம் செய்து வைக்க வருகிறார்கள். மரணம் நடந்த வீட்டில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் "பதினைந்து நாள் காரியத்திற்கும் நான் தான் Contract. அப்படி இருந்தால் இன்று நான் காரியம் செய்வேன்" என்று பணத்திற்கு நாயாய் அலைகிறார்கள்.

பணம் எல்லாருக்கும் தேவையாய் இருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை விட தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவர்களின் பங்கு அதிகம். மேலும், வேதம் எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், சிறிது கூட மனசாட்சிக்கு பயமில்லாமல் இவர்கள் நடப்பது நல்லதல்ல.

Monday 5 October 2009

உன்னைப்போல் ஒருவன்

A Wednesday படத்தை மூன்று முறை பார்த்துவிட்டதால் UPO(உன்னைப்போல் ஒருவன்) பார்க்க அவசரப்படவில்லை. ஆனாலும், கமல் ரசிகன் என்பதால் அவர் நடிப்பு எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். மேலும், தமிழுக்கு ஏற்ற மாதிரி எப்படி எடுத்திருப்பார்கள் என்றும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த சனிக்கிழமை படத்தை பார்த்த போது எதிர்பார்த்தது வீண்போகவில்லை என்றே சொல்லத் தோன்றியது. கமல் என்பதால் ஒரிஜினல் படத்தை காட்சிக்கு காட்சி காப்பி அடிக்கவில்லை. சில மாற்றங்கள் செய்திருக்கிறார். உதாரணம், சிகரெட் பிடிக்கும் பெண் டிவி நிருபர், ஆரிப்(Ganesh Venkatraman) கதாபாத்திரத்திற்கு மேலும் சில காட்சிகள், இறுதி காட்சியில் பெஞ்சிற்கு பதிலாக ஜீப் போன்ற சில. படத்தை விமர்சனம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம், நான் ஒரு சாதாரண ரசிகன் மட்டுமே. நான் கொடுத்த ஐம்பது ரூபாய்க்கு "I got my worth". இருந்தாலும், சில கேள்விகள் உள்ளன. அவை:

1. எதற்காக அந்த பெண் டிவி நிருவர் புகைப்பதாக காட்ட வேண்டும்? பார்வையாளனுக்கு பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு கொண்டு வரும் முயற்சியா?

2. ஒரு இடத்தில் தீவிரவாதி சொல்கிறான், "என் மனைவி மற்றும் குழந்தை குஜராத் Best Bakery இடத்தில் நடந்த வன்முறையில் இறந்து விட்டார்கள்". ஆரிப் சொல்கிறான், "நான் அங்கு இருந்தால் தடுத்திருப்பேன்". அதற்கு தீவிரவாதி சொல்கிறான், "அங்கு மோதி பார்த்தால் தான் உனக்கு தெரியும். மோதினால் மரணம் தான்". அது மோடியா அல்லது மோதியா என்று தெரியவில்லை..

3. உங்கள் இஷ்ட தெய்வம் என்ன என்று ஒரு போலீஸ் ஆணையரிடம் முதல்வர் கேட்பதாக ஒரு காட்சி எதற்கு? தன் இஷ்ட தெய்வத்தின் பெயரை போலீஸ் ஆணையாளர் சொன்னவுடன் முதல்வர், "இங்க தமிழ்நாட்ல பக்கத்துல இவ்வளோ கடவுள் இருக்கே, அவ்வளவு தூரம் போகணுமா?" என்கிறார். கமல் போலீஸ் ஆணையாளராக நடித்திருந்தால் படத்தில் இந்த காட்சி இடம் பெற்றிருக்காது.

4. உண்மையிலேயே, சோழவரத்தில் World War II ஏர்போர்ட் இருக்கா?

இறுதியாக, நடிகை லக்ஷ்மி அந்த தலைமை செயலாளர் வேடத்திற்கு கன கச்சிதம். ஆனால், நடிக்கத்தான் வாய்ப்பு இல்லை. மோகன்லால் பற்றி என்ன சொல்ல? அவர் நடிப்பு திறனுக்கு தீனி போடும் வேடம் இல்லை. ஆனால், அவரும் கமல் மாதிரி எந்த வேடம் கொடுத்தாலும் ஜொலிப்பவர் தானே? படத்தின் முதல் காட்சியில் நடிகராக வரும் ஸ்ரீமான் "விஜய்" நண்பராச்சே? ஏன் அவரையே நக்கல் அடித்திருக்கிறார்? மொத்தத்தில், நான் மேலே சொன்ன மாதிரி UPO கொடுத்த காசுக்கு நல்ல பொருள்.

Sunday 4 October 2009

மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுக்கணுமா?

மும்பை ஹைகோர்ட் "மனைவி எவ்வளவு திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்" என்று சொல்லி இருக்கிறது.(03-Oct-09,தினமலர்)

இது என்னங்க அநியாயமா இருக்கு அதுக்காக கேவலமா பச்சை பச்சையாய் திட்டினாலும் பொறுத்து கொண்டு பூமி ஆளனுமா? ஒரு அளவு வேணாமா? மனுஷன் எந்த அளவுக்கு பொறுக்கறது? ஒரு மனுஷ தன்மை வேணாமா? அட நம்மளை திட்டினாலும் பரவாயில்லய்யா , நம்ம அப்பா ஆத்தா கூட பொறந்தவங்க , பார்க்க வரவங்க , கூட வேலை செய்யறவங்க எல்லோரையுமா திட்டுறது, ச்சே.. மனுஷன் தின்ன முடியுதா, மத்தவங்க கூட பேச முடியுதா , பிடிச்ச டிரஸ் போட்டுக்க முடியுதா ... எல்லாத்துக்கும் இப்படி நாக்கை புடிங்குக்குற மாதிரி கேள்வியா கேட்டா நாங்க என்னதான் செய்யறது .


அட ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவாயில்லப்பா , அட ரெண்டு மூணு மாசம் , மிஞ்சி போனா ரெண்டு மூணு வருஷம்னாலும் பரவாயில்லை இப்படி வருஷகணக்கா திட்டின என்னதான் செய்யுறது? சூடு-சொரனையே இல்லைன்னாலும் கோவம் வரும், இப்படி கோவப்பட்ட ஒருத்தன் கோர்ட் வாசல் ஏறி இருக்கான் , (அதுக்கு என்ன திட்டு...) ஆனாலும் ஏறி இருக்கான் .. தெரியாமத்தான் கேக்குறேன், அப்படி வந்தவனை அந்த ஜட்ஜும் திட்டறதா.. அப்படி துணிவா , வீரமா, ஒரு தீர்மானமா,சாமர்த்தியமா, திடமா கோர்ட்டுக்கு போனவனுக்கு ஒரு நீதி வேணாமா,? ஒரு நியாயம் வேணாமா?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன் , இப்படியே திட்டு வாங்கிட்டே இருந்தா .. திட்டிகிட்டேதான் இருப்பாங்க..அதனால கேவலமா பேசறப்போ  ஒரு வரைமுறை இருக்கணும்னு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும், அப்புறம் சாப்புடும்போதோ, பெரிய மனுஷனா பேசிகிட்டு இருக்கும்போதோ, காலையில ஏழு மணிக்கு முன்னே, பக்கத்து வீட்டு சின்ன பசங்க முன்னாடியோ (நம்ம குழந்தைகளை விடுங்க ..எல்லாம் ஒரே குடும்பம்),வேலைக்காரி முன்னாடியோ,பொது இடத்திலயோ,ராத்திரி முக்கியமான நேரத்திலோயோ திட்டக்கூடாது அப்படின்னு ஒரு முறை வெச்சாதான் முடியும், மத்தபடி இந்த கோர்ட் ஜட்ஜ் இவங்க மேலே இருக்கற நம்பிக்கையெல்லாம் எனக்கு போயிடுச்சுங்க ..நீங்க என்ன சொல்றீங்க?

Friday 2 October 2009

காந்தி பற்றி ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாத்மா காந்தியை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார் , பொதுவாக காந்தியை பற்றி வாசகர் வைக்கும் விமர்சனகங்களுக்கு பதில் என்ற வடிவில் மிக அடர்த்தியான கட்டுரைகளை எழுதுகிறார். பல கட்டுரைகளுக்கு நடுவில் இன்று நான் வாசித்த இந்த கட்டுரை ஒரு அற்புதம்; காந்தி என்ற பிரம்மாண்டமான ஆளுமையை தமிழில் விளக்க ஜெயமோகன் போன்றவர்களுக்குதான் சாத்தியம் போலும்...

                                   காந்தியும் - மகாத்மாவும்

Thursday 1 October 2009

ரூ. 50,000

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சில வாரங்களுக்கு முன்பு வரை தங்கி இருந்த ஹோட்டல் அறை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 50,000.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் பருத்தி விவசாயிகள் கடன் தொல்லையால் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர் , அப்படி செய்து கொண்டவர்களில் சுமார் 80% பேரின் அதிகபட்ச கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.50,000.

இந்த படமெல்லாம் நீங்க பார்த்து இருக்கிங்களா...?

1.மதுரை சூரன்
2.மெட்ராஸ் வாத்தியார்
3.தீர்ப்பு ஏன் கையில்
4.வெற்றி
5.நூறாவது நாள்
6.வேங்கையின் மைந்தன்
7.குழந்தை இயேசு
8.வெள்ளைப்புறா ஒன்று
9.நல்ல நாள்
10.மாமன் மச்சான்
11.வீட்டுக்கொரு கண்ணகி
12.சபாஷ்
13.நாளை உனது நாள்
14.சத்தியம் நீயே
15.இது எங்க பூமி
16.வைதேகி காத்திருந்தாள் (இது பாடல்களால் சூப்பர் ஹிட்)
17.குடும்பம்
18.ஜனவரி-1


இதெல்லாம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் 1984-இல் நடித்த படங்கள் , சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு படம் .. இப்பவே  அப்பவே கண்ணை கட்டியாச்சு...

Tuesday 29 September 2009

விருதுகள்

சிறந்த ஊக்குவிப்பாளர் - கலைஞர் - (தமிழ் சினிமா விருதுகள் !)
சிறந்த தலைவலி குடுப்பவர் - ராகுல் காந்தி (மாயாவதிக்கு!)
சிறந்த காத்திருப்பாளர் - ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா)
சிறந்த பல்டி - சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
சென்னையின் சிறந்த ஏரியா - அசோக் நகர் (மாதம் ஒரு கொலை)
சிறந்த ஓய்வு பெறுபவர் - சரத் பவார் (உண்மையாய் இருந்தால்)
சிறந்த எதிர்ப்பார்ப்பு - ஜெயலலிதா (சனிப்பெயர்ச்சி முடிந்து விட்டது)

தமிழ் மன பதிவுலகுக்கு ஓவர்டைம் வேலை குடுத்து பல blogger-களின் கை நடுக்கத்தை தீர்த்ததற்காக சிறப்பு விருது - கமல்ஹாசன்

Monday 28 September 2009

முதிர்ச்சியின்மை

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட எந்த படத்தையும் நேற்று பார்க்கவில்லை. "சின்ன வயுசிலேயே எனக்கு சரஸ்வதி பூஜை ரொம்ப பிடிக்கும். லண்டன்ல மம்மி சரஸ்வதி பூஜைக்கு ஸ்வீட் பண்ணும்" என்று உளறிக்கொட்டும் நடிகைகளின் பேட்டிகளையும் பார்க்கவில்லை. பார்த்த ஒரே நிகழ்ச்சி ஸ்ருதி ஹாசன் அவர்களின் பேட்டி மட்டும் தான்.நல்ல தமிழ் பேசினார்.ஆனால் இந்த மாதிரி நபர்களை பேட்டி எடுக்க செல்லும் முன் தொகுப்பாளர்/தொகுப்பாளினி தங்களை கொஞ்சம் தயாராகிக் கொண்டு செல்வது நல்லது.முக்கியமாக லூசு மாதிரி எல்லாவற்றிற்கும் சிரிக்காமல் கொஞ்சம் முதிர்ச்சியாக இருப்பது போல் பாவனையாவது செய்யலாம். ஸ்ருதி தமிழில் பேசினார் ஆனால் கேள்வி கேட்ட தொகுப்பாளினி ஒரே "Peter" தான்.

நிகழ்ச்சியின் முடிவில் பேட்டி எடுத்தவர் ஒரு அபத்தமான கேள்வியை கேட்டார். "நான் உங்களை பேட்டி எடுக்க போகிறேன் என்றவுடன் எல்லாரும் நீங்கள் மூக்கில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை பற்றி கேட்க சொன்னார்கள்". ஸ்ருதி கொஞ்சம் கடுப்பாகி விட்டாலும் தான் செய்து கொண்ட அறுவை சிகிச்சை பற்றி விளக்கினார். அடுத்த அபத்தம், "வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆக ஆசை?". ஸ்ருதி சொன்னார், "I may walk on the moon. I don't know".அந்த பெண் இந்த நக்கலை புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புவோமாக.

P.S: நிகழ்ச்சியின் நடுவே ஸ்ருதி சொன்னார், "கடவுள் எனக்கு இசை, நடிப்பு என்று நிறைய வழிகளை கொடுத்திருக்கிறார்". "அப்பா கேட்டா திட்ட போறாரு செல்லம்" என்று சொல்ல தோன்றியது.

Friday 25 September 2009

English-Tamil Dictionary

எளிமையான முறையில் இலவசமாக ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கத்தை இதில் காணலாம்.

English to Tamil Dictionary

நன்றி: www.jeyamohan.in

Monday 21 September 2009

இரண்டு அக்கிரமங்கள்

நமது மத்திய அமைச்சர்களின் எம்.பிக்களின் பங்களாக்களுக்காக டெல்லியில் மத்திய அரசு செலவழித்த தொகை ரூ.100 கோடி (கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்).

மேலும் இன்னொரு செய்தி, இந்திய விமானப்படையின் அயோக்கியத்தனம். தனது முக்கியமான 15 விமானங்களை VVIP-எனப்படும் பிரதமர் / ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி ஆகியோர் பயன்களுக்காக மட்டும் என்று ஒதுக்கி இருக்கிறது (இது அரசின் அயோக்கியத்தனம்)

அதில் இதுவரை பிரதமரோ ஜனாதிபதியோ அல்லது உதவி ஜனாதிபதியோ பயணம் செய்யவேயில்லை , பயணம் செய்ததெல்லாம் விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்.

முக்கியமாக அதிகமாக பிரயாணம் செய்தது president of officer's wives association - உருப்படுமா இந்த தேசம்?

Sunday 20 September 2009

சக்ரா தொலேடி

சலங்கை ஒலி படத்தில் கமலை தப்பு தப்பாக படம் பிடிக்கும் குண்டு பையனை ஞாபகம் இருக்கிறதா? அந்த குண்டு பையன்தான் 'உன்னை போல் ஒருவன்' பட டைரக்டர் 'சக்ரா தொ லேடி' யாம் . காலம்.. தசாவதாரம் படத்தில் (அமெரிக்க கூரியர் காட்சியில் வருவதும் அவர்(ன்)தான்.

Friday 18 September 2009

கவுண்டமணி


நேற்று இரவு சன் டிவியில் ஆயுத பூஜை படத்தில் கவுண்டமணி காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பு வர வைக்கிறதோ அதே போல் தான் கவுண்டமணியும். மிகச் சிறந்த நடிகர். அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடிக்கும் அற்புதமான கலைஞன்.கொஞ்ச நேரம் அவர் நடித்த மற்ற காமெடி காட்சிகளை நினைத்துக்கொண்டு இருந்தேன்.ஒரு படத்தில் ரோட்டில் சாட்டையால் அடித்துக்கொள்ளும் கேரக்டர் செய்திருப்பார்.இன்னொரு படத்தில் அவர் மேல் கடுப்பில் இருக்கும் யாரோ ஒருவர் இவர் கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு பிச்சை எடுத்துக்கொண்டு வரும் ரோட்டில் நெறிஞ்சி முல்லை போட்டு விடுவார்கள். கவுண்டர் நடிப்பை பார்க்கவேண்டும். சும்மா பின்னி எடுத்திருப்பார்.(ஆமாம், முன்னெல்லாம் இது போல புரட்டாசி மாதத்தில் வருவார்கள். இப்போதெல்லாம் ரோட்டில் கோவிந்தா போட்டுக்கொண்டு உருண்டு வருபவர்களை பார்ப்பதே இல்லை. அது சரி, இப்போ இருக்கிற சென்னை போக்குவரத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டு வந்தால் நிஜமாகவே கோவிந்தா தான்).

அதே போல் ஒரு படத்தில் இவர் பாட்டை ஊரில் அனைவரும் கேட்க வேண்டும் என்று நடு நிசியில் ஒவ்வொரு வீடாக சென்று எழுப்பி "நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே?" என்று பாடி உயிரெடுத்து விடுவார்.இதை தவிர வடக்குபட்டி ராமசாமி காமெடி(படம் உத்தமராசா என்று நினைக்கிறேன்),ஆல் இன் ஆல் அழகுராஜா(வைதேகி காத்திருந்தாள்), நடிகன், பிரம்மா, மாமன் மகள்,சூரியன்,சேரன் பாண்டியன்,நாட்டாமை,உதய கீதம்,உள்ளத்தை அள்ளித்தா,மன்னன்,கோவில் காளை(இதில் வடிவேலு கவுண்டரிடம் நாயடி வாங்குவார்) என்று கவுண்டர் தமிழர்களை நிறைய சிரிக்க வைத்தார்.

முதல் முறை ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் வாங்கிய காமெடி நடிகர் கவுண்டமணி தான்.எத்தனையோ நடிகர்கள் இவருக்காக காத்திருந்து நடித்து கொடுத்ததுண்டு.அப்போது நிறைய பத்திரிக்கைகள் கவுண்டர் மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் எழுதின.கவுண்டர் சொன்னார், "இப்போ தான் நான் வாங்குற காசு இவங்களுக்கு பெரிசா தெரியுது. ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம நானும் என் நண்பர் பீலிசிவமும் ஒரு நாளைக்கு ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து வாய்ப்பு கேட்போம். இவங்களுக்கு அந்த கவுண்டமணியை தெரியாது என்றார்".அதே போல், அவர் நடித்த காலத்தில் எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளவில்லை.கவுண்டமணி செந்தில் இல்லாமல் சோலோ காமெடி செய்வார் ஆனால் செந்தில் சோலோ காமெடி செய்து பார்த்ததில்லை.

ஒரு படத்தில் லாட்டரி சீட்டில் பரிசு விழுந்து விட்டது என்று செந்தில் கூற கவுண்டர் செம்ம ரவுசு விடுவார். அதே போல் கப்பலில் வேலை(சேதுபதி IPS) என்று சொல்லி கவுண்டரை வேலையை விட செய்து விடுவார் செந்தில். திரும்ப அதே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும் கவுண்டருக்கு. ஒரு பம்மு பம்முவார் பாருங்கள். அசாத்தியமான நடிப்பு.

கவுண்டமணி சத்தியராஜ் ஜோடி சில நல்ல நகைச்சுவை படங்களை தந்தது. நடிகன், பிரம்மா, மாமன் மகள் போன்றவை உதாரணங்கள். இப்போதும் பிரம்மா படத்தில் குஷ்புவை பார்க்க விடுதிக்கு செல்லும் கவுண்டரையும் சத்தியராஜையும் அங்குள்ள காவலாளி கேள்வி கேட்க கவுண்டர் பண்ணும் ரவுசில் சத்தியராஜ் அந்த காட்சி முடிவில் திரும்பி சிரித்துக்கொண்டே செல்வதை நீங்கள் பார்க்கலாம். முகத்துக்கு எதனை அருகில் கேமரா இருந்தாலும் கவுண்டர் அலட்டிகொள்ளாமல் நடிப்பார். சில நடிகர்களுக்கு இது மிகக் கடினம்.

கவுண்டரின் முதல் படம் அன்னக்கிளி என்று நினைக்கிறேன். வெளிவந்த வருடம் 1976. கிட்டத்தட்ட பத்து படங்களில் கதாநாயகனாக நடித்தார். எஸ்.வி.சேகரை தவிர கதாநாயகனாக நடித்த ஒரே நகைச்சுவை நடிகர் கவுண்டர் தான் என்று நினைக்கிறேன். இவ்வளவு திறமையுள்ள கவுண்டரை கடைசியில் சிம்புவெல்லாம் நக்கல் செய்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், கவுண்டர் வாயை திறந்து எதுவும் சொல்லவே இல்லை. அமைதியாகவே இருந்தார்.இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி.கவுண்டரே, இன்னொரு ரவுண்டு வாருங்கள். வந்து தமிழ் சினிமாவை கலக்குங்கள்.

Thursday 17 September 2009

இது என்ன நியாயம்?

கடந்த ஆண்டு அண்ணாதுரை பிறந்தநாள் என்று சொல்லி 1400 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அது சரியல்ல என்று ஒரு பொது நல வழக்கு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியால் போடப்பட்டது. அதுவே இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் முடியாத நிலையில்,கடந்த செவ்வாய் அன்று கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பத்து அல் உம்மா தீவிரவாதிகளை அரசு "அண்ணாதுரை நூற்றாண்டு விழா" என்று மீண்டும் விடுதலை செய்துள்ளது.

கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். அங்கு வரவிருந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்த பத்து தீவிரவாதிகளும் அதில் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்காமல் இரட்டை ஆயுள் தண்டனை அளித்ததே பெரிய கருணை. இப்போது அதிலும் நாலு வருடம் தள்ளுபடி.

சென்ற முறை எந்த காரணமும் சொல்லாமல் 1400 கைதிகளை விடுவித்ததால் கொஞ்சம் சத்தம் எழுந்தது. இந்த முறை பிரச்சனை எதுவும் வர கூடாது என்று பத்து வருடம் சிறை தண்டனை முடித்தவர்களுக்கு மட்டும் விடுதலை என்கிறது அரசு. அது என்ன அல் உம்மா கைதிகள் மட்டும் தான் சிறையில் பத்து வருடம் முடித்தவர்களா? இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.முதல்வருக்கு இதில் கூட மைனாரிட்டி மக்களை திருப்திப்படுத்துவதில் ஒரு சந்தோஷம்.இன்னொரு பொது நல வழக்கு போடப்படும்.அதுவும் நீதிமன்றத்தில் இருக்கும்.அதற்குள் அடுத்த வருட அண்ணாதுரை பிறந்தநாள் வந்துவிடும்.மீண்டும் கைதிகள் விடுதலை.நானும் அதை வலையில் பதிவு செய்வேன்.நீங்களும் படிப்பீர்கள்.

Wednesday 16 September 2009

பால கனக மய

சில பதிவுகளுக்கு முன் அடானா ராகத்தை பற்றி எழுதியிருந்தேன்.அப்போது சலங்கை ஒலி படத்தில் வரும் பால கனக மய பாடல் அந்த ராகத்தில் அமைந்தது என்று சொல்லியிருந்தேன்.இந்த பதிவு அந்த பாடலை பற்றியது.இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கு இரண்டு கதைகள் உண்டு.

ஒரு மதிய வேளையில் திருவையாறு திருமஞ்சன வீதியில் ஸ்ரீராமரை பார்த்த தியாகராஜர் அந்த க்ஷணமே பாடிய பாடல் இது என்று கூறுவோர் உண்டு.ஹரிதாஸ் என்பவர் த்யாகராஜரை சில கோடி முறை ராமநாமம் உச்சரிக்குமாறு சொல்லியதாகவும் அதை சொன்ன பின் தன் இல்லம் சென்ற தியாகராஜரின் பூஜை அறையில் ராமர்,சீதை மற்றும் ஆஞ்சநேயர் தோன்றி தியாகராஜருக்கு ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளித்ததாகவும் அதை கண்ட தியாகராஜர் உடனே இந்த பாடலை பாடியதாகவும் கூறுவர்.

இந்த பாடலின் அனுபல்லவி தான் பால கனக மய என்ற வரி. பல்லவி ஏல நீ தய ராது என்பதாகும். இந்த வரியில் தான் பொதுவாக பாடலை பாட ஆரம்பிப்பார்கள்.முதலில் இந்த பாடலின் பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணத்தை பார்ப்போம்.அதன் பின் இந்த பாடலின் அர்த்தம் என்னவென்று பார்ப்போம்.

Pallavi:

Ela Nee Dayaraadu Paraaku Jese Vela Samayamu Gaadu

Anupallavi:

Baala Kanakamaya Chela Sujana Paripaala Shree Ramaalola Vidhruta Sharajaala
Shubada Karunaalavaala Ghananeela Navya Vana Maalikaa Bharana (Ela)

Charanam:

Raaraa Devaadi Devaa! Raaraa Mahaanubhaava Raaraa Raajeeva Netraa Raghuvara Putraa
Saaratara Sudhaa Pura Hrudaya Parivaara Jaladhi Gambheera Danuja
Samhaara Madana Sukumaara Budha Janavihaara Sakala Shrutisaara Naadupai
(Ela)

Meaning:

Lord! How ("ela") will you ("nee") not ("raadu") shower your grace ("daya") !
This is not ("gaadu") the time ("samayamu") to be careless ("paraaku jese") and forget me!

Baala kanaka maya chela sujana - One adorned ("chela") with rich golden ("kanaka maya") garments!
Protector ("paripaala") of the virtuous ("su-jana") !
joy ("lola") of Lakshmi ("Shree Ramaa")!

Wielder of arrows ("vidhruta sharajaala") !

The kind bestower ("karunaalavaala") of auspiciousness ("shubada")!

Treasure of companion! the one who has the color of the dark rain-bearing clouds ("Ghana-neela")!

adorned ("bharana") with the eternally new ("navya") garland ("vanamalikaa")!

O Deva among the celestials ("devaadi")! Come ("raara").

One with great reputation ("mahaanubhava")!

Lotus-eyed ("raajeeva-netraa")! Come ("raara").

One belonging ("putraa") to the solar race ("raghuvara")!

One who is surrounded ("saaratara") by family ("parivaara") whose whose hearts are filled with ("poora") nectar ("sudhaa")!

One who is as majestic ("gambheera") as the ocean ("jaladhi")!

Destroyer ("samhaara") of Asuras ("danuja")!

One as beautiful ("sukumaara") as Cupid ("madana")!

One who lives ("vihaara") with the wise ("budha") people ("jana")!

Essence ("saara") of all ("sakala") the Vedas ("sruti")!

Upon singing ("naadupai") your praises, how can you not shower your grace ("ela nee daya raadu") ?

Tuesday 15 September 2009

பார்க்க வேண்டிய நிகழ்ச்சி



ஏசியாநெட் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் Idea Star Singer கர்நாடக சங்கீதத்தில் விருப்பம் உள்ள அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. மிக திறமையான பாடகர்கள், கர்நாடக சங்கீதம் நன்கு அறிந்த நீதிபதிகள் என்று மிக அற்புதமான குழு கொண்ட நிகழ்ச்சி.

ஷிபு என்ற கண் பார்வை இல்லாத இளைஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார். மிக நல்ல குரல்வளம் இவருக்கு. நேற்று "பூமாலை வாங்கி வந்தான்" பாடினார். நன்றாக இருந்தது. ஜோத்சனா என்ற பெண் நேற்று தோடி ராகத்தில் செய்த ஆலாபனையும் பிரமாதம்.இவர் தான் நன்றாக பாடுகிறார் என்று எவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அனைவருமே சங்கீதத்தில் நல்ல பயிற்சி உள்ளவர்கள்.இந்த போட்டியில் வெல்பவருக்கு திருவனந்தபுரத்தில் ஒரு கோடி ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைக்கும்.நேரம் இருந்தால் நிகழ்ச்சியை அவசியம் பாருங்கள்.

Austerity Drive - Don't compromise on Security

Thanks to Pranab Da's austerity drive, the UPA ministers have all got into cost cutting mode. We see the UPA chairman Sonia Gandhi flying to Mumbai in Economy class from Delhi and her son Rahul Gandhi traveling to Ludhiana in Shatabdhi Express Chair car. On the other hand, we have S.M.Krishna traveling to Belraus in Economy class and also reducing the size of his accompanying team to 2 from 20.

Whether the reasons for adopting this lifestyle are legitimate or is a public stunt to impress the aam aadmi, it has definitely went down well with the masses. We see this lady in NDTV describing how she felt to see Rahul sitting close to her on the train. It all looks good but but but let us make sure that these actions do not result in elements with vested interests being empowered to access our leaders. S.M.Krishna and Shashi Tharoor may not be in the hitlist but the same may not be the case with Sonia and Rahul.So, let our leaders not compromise on security as part of their initiative to practice austerity.

Monday 14 September 2009

தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மேலே உள்ள தலைப்பின் எதிர்ப்பதம் மிக பிரபலம். எதை வைத்து அன்று வடக்கு வாழ்கிறது என்று சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால், இன்று என்னை போல தெற்கில் இருந்து வருபவர்களுக்கு வட மாநில மக்களின் வாழ்க்கைத்தரம் அதிர்ச்சியளிக்கிறது.

வட மாநிலங்கள் என்று நான் சொல்லும் போது டெல்லியை மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். தேசிய தலைநகரம் என்கிற வகையில் டெல்லி ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், டெல்லியை விட்டு சற்று தள்ளி உள்ள ஹரியானாவை எடுத்துக்கொள்வோம். ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேரம் இங்கு மின்சாரம் இருப்பதில்லை. போக்குவரத்து வசதிகளோ மிக மிக குறைவு. நான் இருக்கும் குர்கான் ஹரியானாவை சேர்ந்தது. டெல்லியிலிருந்து இருபத்தைந்து அல்லது முப்பது கிலோமீட்டர் இருக்கலாம். ஆனால், இங்கிருந்து டெல்லிக்கு நேரடி பேருந்து கிடையாது. சென்னையை எடுத்துக்கொள்வோம். எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்திருக்கும் மத்திய சென்னையை அடையலாம். நீங்கள் ஆவடியில் இருந்தாலும் சரி, தாம்பரத்தில் இருந்தாலும் சரி சென்ட்ரல் வருவதற்கு நேரடி பேருந்து வசதி உண்டு.

வார இறுதியில் ஆக்ரா சென்றிருந்தேன். உத்திர பிரதேசத்தை சேர்ந்தது. இங்கு ஊரை சுற்றிப்பார்க்க பேருந்து வசதி கிடையாது. எங்கு சென்றாலும் ஆட்டோ அல்லது ரிக்க்ஷாவில் தான் செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ் மகாலை காண ஆண்டு தோறும் வருகிறார்கள். இவர்கள் தங்க நல்ல விடுதிகளோ அல்லது பயணம் செய்ய பேருந்துகளோ கிடையாது. இங்கும் ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேர மின்சார வெட்டு. இந்த ஊரில் பலர் மின்சார கட்டணம் செலுத்துவதே இல்லை. இவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் வீட்டின் அருகில் ஒரு குழு அமைத்து மின்சார கட்டணம் கட்ட வாரீர் வாரீர் என்று அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்புக்கு செவி சாய்த்து மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் மிக சிலரே. வோட்டை மனதில் கொண்டு அரசு இவர்களின் மின்சார இணைப்பை துண்டிப்பதும் இல்லை.

வெளியூர்களிலிருந்து பிழைப்புக்காக உத்திர பிரதேசம் வரும் மக்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் குடிசை அமைத்து தங்குகின்றனர்.இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள வீடுகளின் மின் இணைப்புகளில் இருந்து எடுத்து கொள்கின்றனர். இவர்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.

கவுன்சிலர், நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் என்று பலரும் தங்கள் பாதுகாப்புக்கென்று நாட்டு துப்பாக்கி வைத்து உள்ளனர். ஜாதி பலம் காட்ட துப்பாக்கி வைத்திருப்பவர்களும் உண்டு. ஆக்ராவில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர் உள்ள ஜாதி சங்க தலைவர்களை காண்பது சர்வ சாதாரணம்.

தார் சாலை என்பதை உத்திர பிரதேசத்தில் பார்க்கவே முடியாது. எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இங்குள்ளவர்களை கேட்டால் இது பரவாயில்லை, தலைநகர் லக்நோ இதை விட மோசமாக இருக்கும் என்கிறார்கள்.உத்திர பிரதேச பேருந்துகள் வாய் இருந்தால் கதறி அழும்.அந்த அளவுக்கு மோசமான பராமரிப்பு.சென்னை பேருந்துகளின் தரத்தை நினைத்துக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்த பொது கழிப்பிடத்தில் சிறுநீர் செல்ல ஐந்து ருபாய். நாற்றமோ குடலை பிடுங்குகிறது.

சரி, பேருந்து தான் இப்படி இருக்கிறதே என்று ஆக்ராவில் இருந்து ரயிலில் டெல்லி செல்லலாம் என்று முடிவு செய்து ஆக்ரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன். விசாகப்பட்டனத்திலிருந்து அம்ரித்சர் செல்லும் ஹிரகுத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வர, அதில் ஏறிக்கொண்டேன். அவசரத்தில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியதால் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் மாட்டிக்கொண்டேன். முந்நூறு ருபாய் அபராதம் என்றார். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி பொது பெட்டியில் ஏறிக்கொள்கிறேன் என்றேன்.உங்களை பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறீர்கள், பொது பெட்டியில் உங்களால் பயணம் செல்ல இயலாது என்றார். ஏன் என்றேன்? அங்கே குழந்தைகள் பெட்டியிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்துள்ளன. டெல்லி சென்ற பின்பு தான் அதை சுத்தம் செய்வார்கள். இப்போது தான் அங்கிருந்து வருகிறேன் என்றார். ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் என்றார். ஆனால், இருக்கை கிடைக்காது. படிக்கட்டு அருகே நின்று கொண்டே வர வேண்டும் என்றார். சரி என்று சொல்லி ஐம்பது ரூபாய் தந்தேன். படிக்கட்டு அருகே ஏற்கனவே நிறைய பேர் இருந்தனர். பலர் அங்கேயே பீடி, சிகரெட் புகைத்தபடி இருந்தனர். பெண்கள் சிலர் இயற்கை உபாதைக்காக பாத்ரூம் வர, அவர்களை கண்டபடி கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பழக்கம் போலும். இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

எத்தனையோ முறை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், பெட்டியில் பயணிகள் புகைத்து பார்த்ததில்லை. மேலும், ரயிலையும் ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள். நான் சொல்வது குளிர் சாதன பெட்டியல்ல. சாதாரண பதிவு செய்யப்பட்ட பெட்டிகள். ரயிலில் பெண்களை கிண்டல் செய்வதெல்லாம் மிக மிக குறைவு. மருந்துக்கு கூட டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலான டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் ஆங்கிலம் பேசுவார்கள். இங்கே நம்மிடம், இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி, முடிந்தால் அதில் பேசு என்கிறார்கள். நான் இந்தியன்,என்னிடம் அவர்கள் இதை சொல்வது நியாயம் தான்,ஆனால் வெளிநாட்டு பயணிகளிடம் இதை சொல்லமுடியாதே.

தெரிந்த ஒரு நண்பரிடம், ஏன் வட மாநில மக்களின் வாழ்க்கைதரம் இப்படி இருக்கிறது? படிப்பறிவு இல்லை என்பதை மட்டும் இதற்கு காரணமாக சொல்லாதீர்கள், தமிழகத்திலும் படிப்பறிவு ஒன்றும் பெரிய அளவில் இல்லை, ஆனால் இங்குள்ள மக்களை விட அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் முதிர்ச்சி இருக்கிறதே என்றேன்? அவர் சொன்னார், "உங்க ஊர்ல அரசியல்வாதிகள் ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால் ஐம்பது ரூபாய்க்கு உங்களுக்கு எதாவது செய்கிறார்கள். ஆனால், இங்கே மக்களுக்கு அரசால் எந்த பயனும் இல்லை. அதே போல் மக்களுக்கும் அரசிடம் என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரசு நமக்கு செய்யும் பெரிய உதவி என்று நினைக்கிறார்கள். அரசும், இவர்கள் நம்மை இம்சை பண்ணாத வரை நிம்மதி என்று இருக்கிறார்கள். இது தான் இவர்கள் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார்.நல்ல வேளை தமிழ்நாட்டில் இருக்கிறேன் என்று நினைத்தேன்.

Wednesday 9 September 2009

சாப்ட்வேர் இன்ஜினியரும் கவிஞர்களும்

இன்று காலை கவலையின்றி சற்று இளைப்பாறலாம் என்று கழிப்பிடம் சென்ற போது தான் இந்த உன்னத சிந்தனை உதயமானது. இப்போ மென்பொருள் துறையில் உள்ளவர்கள் ஒரே மாதிரி வேலையை மறுபடியும் செய்ய நேர்ந்தால் உடனே என்ன செய்வார்கள்? ஏற்கனவே அடித்த கோடை எடுத்து காப்பி பேஸ்ட் செய்வார்கள்.

ஆனால், ஒரு கவிஞரை ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு இரண்டு படங்களில் பாட்டெழுத சொன்னால் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்? காப்பி பேஸ்ட் எல்லாம் அவர்கள் செய்ய முடியாது. உதாரணமாக,"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" எழுதிய வாலி தான் "காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" பாட்டையும் எழுதினர். அதே போல்,"முஸ்தபா முஸ்தபா" பாடல் எழுதிய வாலி "தோஸ்த் படா தோஸ்த் தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து" பாடலையும் எழுதினார்.

இதன் மூலமாக நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் மென்பொருள் பொறியாளர்களும் அதே கோடை காப்பி அடிக்காமல் கொஞ்சமாவது மாற்றி அடிக்க வேண்டும் என்பதே.

Monday 7 September 2009

டெல்லிக்கு ரயில் பயணம்

மீண்டும் அலுவல் காரணமாக டெல்லி பயணம். சரி, நம்ம ப்ராஜெக்ட் செலவை கொஞ்சம் குறைக்கலாமே என்று விமானத்தில் போகாமல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டியில் இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் சைடு லோயர் இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். சென்னையில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு கிளம்பி இன்று காலை டெல்லி வந்தடைந்தேன். வரும் வழியில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பற்றியது இந்த பதிவு.

பொதுவாக, குளிர் சாதன வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கம்பளி, போர்வை மற்றும் தலைக்கு வைத்துக்கொள்ள தலைகாணி கொடுப்பது வழக்கம். ஆனால், என் இருக்கையில் கம்பளியும் போர்வையும் மட்டுமே இருந்தன. சரி மறந்திருப்பார்கள் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். காலை பல் துலக்க சென்ற பொது அங்கே இருந்த கோச் பணியாளரிடம் கேட்ட போது சொன்னார், "நான் நேத்து நைட் உங்க பில்லோவும் சேர்த்து மேல் பெர்த்ல வெச்சேன் சார். போய் பாருங்க என்றார்". அப்பறம் தான் தெரிந்தது. மேல் பெர்த்தில் இருந்த நண்பர் ஒரு தலைகாணியை தலைக்கும் இன்னொன்றை காலுக்குமாக வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். சரி, அவர் உபயோகித்ததை நாம் கேட்டால் நன்றாக இருக்காதே என்று கோச் உதவியாளரிடம் இன்னொரு தலைகாணி கேட்க அவர், "தலைகாணி இல்ல சார். உங்க தலைகாணி சார் அது. சண்டைபோட்டு வாங்குங்க என்றார்.

கேவலம், ஒரு தலகாணிக்காக சண்டைபோட வேண்டுமா என்று ஞாயிறு இரவும் தலைகாணி இல்லாமல் தூங்கினேன். இதில் என்ன விசேஷம் என்றால், மேல் பெர்த்தில் இருந்த நண்பர் இரண்டாவது தலைகாணி எப்படி வந்தது என்று துளிக்கூட யோசித்ததாக தெரியவில்லை.

சரி, போனால் போகட்டும் தலைகாணி இல்லாவிட்டால் தூக்கமா வராது என்று படுத்தால் எதிர் பக்கம் மிடில் பெர்த்தில் இருந்து கர்ண கொடூரமான குறட்டை சத்தம். கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலை பார்த்து, "ஏன்டா காண்டாமிருகம் கக்கூஸ் போற மாதிரி சத்தம் போடற என்பார்". இது அதை விட மோசம். இரவில் மட்டுமல்லாது மனிதர் பகல் தூக்கத்திலும் அதே டெசிபெல் சத்தத்தில் குறட்டை விட்டார். அவர் எதிரில் உட்கார்ந்து இருந்த ஹிந்தி குடும்பம் ஒன்று அவரை பயங்கரமாய் கிண்டல் செய்து சிரித்துக்கொண்டு இருந்தது. ஆனால், மனிதர் அசரவில்லை.முப்பத்திமூன்று நேர பயணத்தில் இருபத்தைந்து மணி நேரம் தூங்கி கொண்டு வந்தார்.தூங்காத சமயத்தில் எதாவது கொறித்து கொண்டே இருந்தார். விளைவு, தூக்கத்தில் வாய், ஆசனவாய் இரண்டும் வேலை செய்தன.குளிர் சாதன பெட்டி, சொல்ல வேண்டுமா என்ன? எனக்கு மூக்கடைப்பு இருந்ததால் நான் தப்பித்தேன்.ஆனால், மற்றவர்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இப்படியாக வண்டி ஒருவழியாக போபால் வந்து சேர்ந்தது. அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பகல் உணவே பாடாவதியாக இருந்ததால் நான் இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். போபால் வந்தவுடன் இறங்கி நாலு சப்பாத்தி, பால் சாப்பிட்டுவிட்டு மீண்டும் என் இருக்கைக்கு வந்து உட்கார்ந்தேன். அப்போது தான் அம்பியை சந்திக்க நேர்ந்தது. ரயில் போபால் ஸ்டேஷன் தாண்டியவுடன் எனது அடுத்த இருக்கையில் இருந்த அம்பி(அந்நியன் பட புகழ்) சென்று கோச் உதவியாளரை அழைத்து வந்தார்.

சாம்பார்ல உப்பில்லை, பப்படம் ஒடஞ்சு இருக்கு, தயிர் புளிக்கிறது என்று குறை சொல்ல ஆரம்பித்தார். இரண்டு நிமிடம் கேட்டுவிட்டு உதவியாளர் இதற்கு தான் எதுவும் செய்யலாகாது என்றார். நம்ம அம்பி உடனே உணர்ச்சிவசப்பட்டு IRCTC அதிகாரிக்கு போன் போட்டார். எடுத்தவுடன், "நான் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்ல அஞ்சு வருஷமா போயிட்டு வரேன். "I am one of your loyal customers. How can you do this to me? என்றார். அந்த பக்கத்தில் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. அம்பி டீடைல்ஸ் சொல்ல ஆரம்பித்தார். "Food was provided on Tamilnadu Express in Bhopal. Pappadam Broken. No salt in Sambar. Pickle is old" என்றார். மறுபடியும் அந்த பக்கம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. இவர் உடனே, ஓகே சார், தேங்க்ஸ். Please take action. You need to meet the contractor and check the quality" என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அதே பந்தாவில் எங்கள் எல்லாரையும் ஒரு முறை பார்த்து "This is our right. We need to fight." என்றார். கோச் உதவியாளர் அங்கேயே நின்று கொண்டிருக்க அவரை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார். கோச் உதவியாளரோ, "போடா பொக்கி, உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன். நீ பண்ண போனை எடுத்ததே எவனாவது சமையல்காரனா இருப்பான்டா என்கிற மாதிரி பார்த்தார்".

இந்த கூத்தையெல்லாம் ரசித்துக்கொண்டு ஒரு வழியாக டெல்லி வந்து சேர்ந்தேன்.

Tuesday 1 September 2009

விஜய்-ராகுல் என்ன பேசி இருப்பார்கள்?


தமிழக அரசியலில் சென்ற வாரம் சூடு கிளப்பிய செய்தி இவர்கள் சந்திப்பு தான். வெறும் வாய்க்கு அவல் என்கிற மாதிரி என்ன செய்தி வெளியிட்டால் ஜட்டியை கிழித்துக்கொண்டு ஜனங்கள் அலைவார்கள் என்று சதா சர்வ காலமும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஏடுகளுக்கு கிடைத்தது சரியான தீனி. ஒரு பத்திரிக்கை தனது அட்டைப்பட செய்தியில் "விஜய்-ராகுல் சந்திப்பு, விஜயகாந்த்துக்கு பேதி" என்றது. இன்னொன்றில் "காங்கிரசில் சேர்ந்தார் விஜய். மன்மோகன் பதவிக்கு ஆப்பு" என்றது. இப்படியே செய்தி வெளியிட்டான்களே தவிர அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்க அப்படின்னு யாருக்குமே தெரியலை.

விஜய் அப்பா எஸ்.எ.சி கிட்ட கேட்டா "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்" என்கிறார். அவர் படம் எடுக்கறத நிறுத்திட்டார் அப்படின்னு வர செய்தியை விட எதாவது நல்ல செய்தி உண்டா என்ன? எது எப்படியோ, உண்மையிலேயே ரெண்டு பேரும் என்ன தான் பேசி இருப்பாங்க? நம்ம கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி விடுவோம்.

விஜய்: அண்ணா, வணக்கம்ணா. என் படம் ஓடி தமிழ்நாட்ல மூணு வருஷம் ஆகுது. ஜனங்க மறக்கற மாதிரி இருந்த சமயத்துல நம்மள கூப்பிட்டு விட்டீங்க. நல்ல வேளை தப்பிச்சேன்.
ராகுல்: உங்களை பத்தி நெறைய கேள்விப்பட்டேன். அதான் நேர்ல சந்திக்கணும் அப்படின்னு நினைச்சேன்.
விஜய்: என்னன்னா கேள்விப்பட்டீங்க?
ராகுல்: தமிழ்நாட்டு மக்கள் மனசை உங்களை விட நல்ல தெரிஞ்சவர் யாரும் இல்லேன்னு சொன்னாங்க. எவ்வளவு கேவலமா நீங்க படம் எடுத்தாலும் அவங்க பார்கறாங்கலாமே? உங்களை வெச்சு தான் தமிழ்நாட்ல காங்கிரஸ் கட்சியை வளர்க்கணும் அப்படின்னு முடிவு பண்ணேன். ஏன்னா, தமிழ்நாட்ல எங்க கட்சி உங்க படத்தை விட கேவலமா இருக்கு.
விஜய்: இவ்வளவு தானா? கண்டிப்பா செய்யலாம்னா.
ராகுல்: அப்படியா? உங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கா?
விஜய்: என்னன்னா இப்படி கேட்டுட்டீங்க? எங்க குடும்பமே வளர்ந்து கெட்ட குடும்பம்னா. எங்கப்பா என்னை வளர்த்து விட பட்ட கஷ்டத்தை நீங்க சங்கவி கிட்ட கேட்டுப்பாருங்கன்னா. அதே மாதிரி எங்க அம்மா பாடறேன் பாடறேன்னு அநியாயம் பண்ணும். அதை வளர்த்து விட நான் பட்ட கஷ்டம். இதுக்கு நடுவில என் கசின் விக்ராந்த் அப்படின்னு ஒருத்தன். அவனை வளர்த்து விட என் குடும்பமே போராடிச்சு. எங்களை பார்த்து கட்சியை வளர்க்க அனுபவம் இருக்கான்னு கேக்கறீங்க?
ராகுல்:(ஆச்சர்யத்துடன்) அப்படியா? சரி, உங்களை தமிழ்நாட்ல காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரா போட்டா நீங்க கட்சியை எப்படி வளர்ப்பீங்க?
விஜய்: அப்படி கேளுங்கண்ணா. இப்போ, எப்படி என் படத்துல ஓபனிங் சாங் இருக்கோ அந்த மாதிரி மொதல்ல நம்ம கட்சிக்கு ஒரு பாட்டு வேணும்ணா.உதாரணமா,

"ஏ, எருமை எருமை எருமை எருமை எருமை கிட்ட சாணியை கேட்டேன்.
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு குரங்கு கிட்ட பழத்தை கேட்டேன்
உங்க கிட்ட வோட்ட கேட்டேன், உங்க கிட்ட வோட்ட கேட்டேன்".
எப்படி இருக்கு?
ராகுல்: நல்லா தான் இருக்கு. சரி, அப்பறம்?
விஜய்: இந்த லல்லு, முலாயம் இவங்க எல்லாம் பயப்படற மாதிரி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லணும்னா.
ராகுல்: அது எப்படி?
விஜய்: ரோட்ல இருக்கற கல்லு என் கால்ல பட்டா நொறுங்குமே பாவம் அப்படின்னு பாத்து நடக்கிறவன் நான். நீ வெறும் லல்லு. உனக்கு என் கால் தேவையில்லை. என் பூ..
ராகுல்: ஐயோ வேணாம்.
விஜய்: என் புருவத்துல இருக்கற முடி போதும் அப்படின்னு சொல்ல வந்தேன்னா.
ராகுல்: சரி, முலாயம் சிங்கை எப்படி சமாளிப்பீங்க?
விஜய்: வெங்காயம், பெருங்காயம் ரெண்டும் செய்யும் சமையலுக்கு சகாயம். ஆனா முலாயம், உன்னால அமர் சிங்குக்கு மட்டும் தான் ஆதாயம்.எப்படி?
ராகுல்: இவங்க எல்லாம் கூட பரவாயில்ல, மாயாவதி இம்சை தான் தாங்க முடியல. அவங்களுக்கு எதாவது பஞ்ச் இருக்கா?
விஜய்: எனக்கு தல மாதிரி உங்களுக்கு மாயாவதி போல? அவங்க கிட்ட நேரடியா மோத வேண்டாம்.தேவைப்படும் போது உசுப்பேத்தி விடுவோம்.
ராகுல்: இதெல்லாம் சரி, கட்சியை எப்படி வளர்க்க போறீங்க?
விஜய்: பேரரசு,எங்கப்பா இவங்க ரெண்டு பேரையும் கொ.ப.செ அப்படின்னு அறிவிச்சுடுங்க.
என்னை வளர்த்த மாதிரியே கட்சியையும் வளர்த்துடுவாங்க.
ராகுல்: சரி, கட்சியை தமிழ்நாட்ல பெரிசா பண்றதுல உங்க பங்கு என்ன?
விஜய்: நம்ம கட்சி கொடில கை இருக்கற எடத்துல என் படத்தை போடறேன். ஒரு ஓரத்துல உங்க படம். எல்லா படத்திலயும் பிரகாஷ்ராஜ் நம்ம கட்சி கொடிய திருடற மாதிரி ஒரு சீன் வெச்சு அவரை பின்னி எடுக்கறேன். ஹீரோயின் டிரஸ் காணாம போற மாதிரி எல்லா படத்திலயும் ஒரு சீன் வெச்சு அவங்களுக்கு நான் நம்ம கட்சி கொடிய டிரெஸ்ஸா தர மாதிரி பண்ணறேன். வெளிநாட்ல பாடல் காட்சி எடுக்கும் போது ஹீரோயினோட பிக்கினி, பிரா ரெண்டுமே நம்ம கட்சி கொடி டிசைன்ல இருக்கற மாதிரி பாத்துக்கறேன்.
ராகுல்: இதெல்லாம் பண்ணா கட்சி வளர்ந்துடுமா?
விஜய்: என்ன இப்படி கேக்கறீங்க? தமிழ்நாடு ஜனங்களுக்கு சினிமா தான் வாழ்க்கை. ஹீரோயின் போடற டிரஸ் மாதிரியே போடுவாங்க. அதே பிரா, அதே உள்பாவாடை ஒன்னு விடாம அதே மாதிரி டிரஸ் பண்ணுவாங்க. எனக்கு தாய்க்குல ஆதரவு கொஞ்சம் ஜாஸ்தி வேற. கேக்கவே வேண்டாம். நம்ம கொடி செம ஹிட் ஆயிடும். அடுத்த தேர்தல்ல வாக்குபதிவு இயந்திரம் வெச்சாலும் சரி, இல்ல பேப்பர்ல எழுதி போட்டாலும் சரி, நம்ம கட்சிக்கு தான் அதிக ஒட்டு விழும். நம்ம கொடிய பார்த்த உடனே ஆம்பிளைங்க எல்லாருக்கும் ஹீரோயின் பிக்கினி போட்டுக்கிட்டு ஆடின டான்ஸ் ஞாபகம் வரும். அவங்க ஓட்டும் நமக்கு தான்.எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, ஹீரோயின் பிகினிக்கு இணையாகுமா? சந்தேகமே இல்லாம எல்லா தொகுதிலயும் நம்ம தான் ஜெயிப்போம்.இதை விட சிறப்பா கட்சியை எப்படி வளர்க்க முடியும்? சொல்லுங்க.
ராகுல்: ரொம்ப சந்தோஷம். நீங்க தான் இனிமே தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

Saturday 29 August 2009

விமர்சிக்க முடியாத பாலகுமாரன்


சமீபத்தில் பாலகுமாரன் பேசுகிறார் (http://balakumaranpesukirar.blogspot.com/) என்ற ப்ளாக்கில் பாலகுமாரனின் உடையார் நாவல் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது.அந்த நாவலை பற்றி மிகவும் உயர்வாக எழுதி பாலகுமாரனுக்கு ஒரு பெரிய பாராட்டு ஒன்றை வழங்கி இருந்தார் அந்த வாசகர்.

அதனை படிக்கும்போது, அந்த உடையார் என்ற 6 பாக நாவலை படிக்க வேண்டுமென்ற ஆவல் வந்தது, அதனை விட அந்த நாவலை பற்றி ஒரு தேர்ந்த விமர்சகர் விமர்சனம் செய்ய வேண்டும் , அந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அதனை ஒரு கடிதமாக எழுதி ஒரு பின்னூட்டம் இட்டேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
என்னதான் உடையார் நாவலை பற்றி வாசகர்கள் உயர்வாக சொன்னாலும், இந்த புகழ்ச்சிகள் அந்த வாசகர்கள் பாலகுமரான் என்ற எழுத்தாளர் மேல் இருக்கும் ஒரு பிரியம் காரணமாக வந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது, ஆகவே இந்த படைப்பை பற்றி தீவிர வாசகர்களும், மற்ற எழுத்தாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அந்த தீவிர வாசக மற்றும் சக எழுத்தாளர்களின் விமர்சனமே, அந்த புத்தகத்தின் உண்மையான் இடத்தை அடைய வைக்கும்.

இதுதான் நான் அந்த கடிதத்தில் எழுதியது, ஆனால் இந்த பின்னோட்டத்தை அந்த வலைமனை வெளியிடவே இல்லை...

இந்த கடிதத்தில், பாலகுமாரனை பற்றி நான் என்ன தவறாக எழுதி விட்டேன் என்று இன்று வரை புரியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் பாலகுமாரனின் ரசிகர்கள் ஒரு சிறு விமர்சன குரலையும் தாஙக முடியாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

Thursday 27 August 2009

வசந்தா

ராகங்கள் பற்றி பேசி ரொம்ப நாளாச்சு. சில நாட்களுக்கு முன் வித்யாசாகர் இசையில் பிரிவோம் சிந்திப்போம் படத்திலிருந்து "கண்டேன் கண்டேன் காதலை" அப்படின்னு ஒரு பாட்டு கேட்டேன். வசந்தா ராகத்தை முழுமையாக உபயோகப்படுத்தி இருக்கிற பாட்டு இது.

வசந்தா மாலை நேரத்தில் பாடுவதற்கு ஏற்ற ராகம். இளையராஜா அதனால தான் ராஜபார்வை படத்துல வர "அந்தி மழை பொழிகிறது" பாடலை வசந்தால அமைத்திருக்கார் என்று நினைக்கிறேன்.ராஜரிஷி படத்தில் வரும் "மான் கண்டேன் மான் கண்டேன்", கூட வசந்தா தான். இதை தவிர வேறு பாடல்கள் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. உன்னால் முடியும் தம்பி படத்துல "ராகம் வசந்தா நானும் குடித்து பார்க்க ரசம் தா" அப்படின்னு ஒரு வரிக்கு வசந்தா உபயோகப்படுத்தி இருப்பார் இசைஞானி. இந்த பாடல் கூட அவர் எழுதியது அப்படின்னு கேள்விப்பட்டேன். உறுதியாக தெரியவில்லை.

எனக்கு தெரிஞ்சு ஏ.ஆர்.ரகுமான் வசந்தால இசையமைச்ச பாடல் படையப்பா படத்துல வர "மின்சார பூவே". இதை தவிர வசந்தா ராகத்தை அவர் வேறு பாடல்களில் அங்கங்கே பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், மின்சார பூவே கலப்படம் இல்லாத வசந்தா. சங்கீதம் கற்றுக்கொண்டவர்கள் நிச்சயம் "நின்னே கோரி" என்ற வசந்தா ராக வர்ணத்தை தாண்டாமல் கீர்த்தனைகளுக்கு பிரயாணம் செய்திருக்க முடியாது. சீதம்மா மாயம்மா என்ற தியாகராஜர் கீர்த்தனையும் வசந்தா ராகத்தில் பிரபலம்.

Tuesday 25 August 2009

உங்க மூட நம்பிக்கையில தீயை வைக்க..


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன மாசம் சூரிய கிரகணம் நடக்கும் போது பிஸ்கெட் சாப்பிட்டதால தான் பீகார்ல வறட்சி நிலவுதாம். இதை சொல்லியிருக்கறது நம்ம லல்லு. இந்த ஆளையெல்லாம் பீகார்ல எப்படி உசிரோட விட்டு வெச்சு இருக்காங்க?

நன்றி: தினமலர்

P.S: நம்ம கவலை எல்லாம், கலைஞர் இதை படிச்சிட்டு தமிழகத்துல வறட்சி ஏற்பட காரணம் ஜெயலலிதா குளிக்கறது தான் அப்படின்னு சொல்லிட கூடாது. கிரகணம் பத்தி கலைஞர் பேச மாட்டாரு ஏன்னா அவர் தான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே.

Thursday 20 August 2009

This Day That Age

Regular readers of "The Hindu" newspaper would have come across the column "This Day That Age" which tracks back exactly 50 years from the current date and highlights any significant speech/happening during that day. I was curious to know what our leaders spoke on August 15th 1959 and hence headed straight to "This Day That Age" section as soon as i got the newspaper on August 15th 2009. Here is what the section had:

dated August 15, 1959: Eradication of corruption

Prime Minister Nehru said at a meeting of the Congress Parliamentary Party in New Delhi on August 13 that he welcomed suggestions made for rooting out corruption in the country. The real difficulty, with regard to corruption cases, Mr. Nehru said, was their getting a convincing case.


Following is the president's message on the same day

dated August 15, 1959: President’s message

The President, Dr. Rajendra Prasad, in his message to the nation on the 12th anniversary of India’s Independence, called for the mobilisation of all the national resources and the full and willing co-operation of all people to solve the post-Independence problems facing the country. Dr. Prasad said that, in a sense, freedom opened the floodgates of problems. A host of new tasks had to be undertaken for the betterment of the people. Freedom provided the opportunity and the necessary incentive to take up such tasks in hand and devise ways and means to surmount the difficulties in accomplishing them. “We have to learn by working and it is immaterial if mistakes are committed, provided we have the sagacity and the large-heartedness to learn from them”, he added. In a word of cheer to the Indian nationals abroad, the President said: “I am glad they are giving a good account of themselves and are conscious that they belong to a great republic whose honour and fair name they must ever try to keep high.” He wished all of them good luck and happiness


Ultimately, it helped me understand what this section will contain on August 15th 2059.

Monday 17 August 2009

காத்தாடி

சென்னையில் இப்போதெல்லாம் காத்தாடி தென்படுவதே இல்லை. சென்னையில் மட்டும் தான் இந்த நிலையா அல்லது தென் மாவட்ட சிறுவர்கள் கூட இப்போது Jetix, Power Rangers என்று மூழ்கி காத்தாடி, கில்லி போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை.

என் சிறு வயதில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு விளையாட்டு உண்டு. காத்தாடி விட ஏப்ரல்/மே மாதங்கள். எப்படி மென்பொருள் துறையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த SDLC உள்ளதோ அதே போல காத்தாடி உருவாக KDLC(Kaaththaadi Development Lifecycle) ஒன்று உண்டு. Requirements Gathering, Design, Development, Testing and Maintenance காத்தாடிக்கும் பொருந்தும்.

Requirements Gathering என்பது காத்தாடி உருவாவதில் இன்றியமையாத பகுதி. இதை நல்ல காத்தாடி செய்பவரிடம் outsource செய்து வாங்கிக்கொள்ளும் சிறுவர்கள் உண்டு. இல்லை நேராக கடையில் சென்று வாங்குபவர்களும் உண்டு. ஆனால், பலர் in house development செய்வதையே விரும்புவார்கள். தங்கள் அளவுக்கு யாரும் requirement என்னவென்று புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பது இவர்கள் கருத்து.

காத்தாடியின் Design என்பது அதன் சூஸ்திரமே. சரியான இடத்தில் துளையிடப்பட்டால் தான் காத்தாடி நாம் நினைப்பது போல் பறக்கும். Design கோளாறு ஏற்பட்டால் காத்தாடி காலி. சூஸ்திரம் போடுவதற்கு முன் சாமிக்கு தேங்காய் உடைப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள்.

காத்தாடியின் development என்பது குச்சி வைத்து ஒட்டப்படும் பகுதி. மிக கவனத்துடன் கையாளப்பட வேண்டிய விஷயம் இது. Development பிசகினாலும் கஷ்டம் தான் ஆனால் முதலுக்கு மோசமில்லை. அப்படி இப்படி எதாவது செய்து சமாளிக்கலாம்.

Test செய்யாமல் பொதுவாக காத்தாடி கோதாவில் இறங்காது. இரண்டு அல்லது மூன்று முறை பறக்கவிட்டு ஓனர் திருப்தி ஆன பின்பு தான் "லைவ்" போகும்.

காத்தாடியின் maintenance என்பது, பல வெற்றி வாகைகளை சூடிய காத்தாடியை சில ஆண்டுகள் பராமரிப்பதை பற்றியது. எதாவது பீரோவின் அடியிலோ அல்லது வீட்டிலுள்ள வேறு யாரும் வந்து போகாத ஒரு இடத்திலோ இந்த காத்தாடி பராமரிக்கப்படும்.

காத்தாடி என்ன தான் நன்றாக இருந்தாலும் மாஞ்சா இல்லாமல் அது சோபிக்காது. காத்தாடியும் மாஞ்ஜாவும் சக்தியும் சிவனும் போல. சக்தியின்றி சிவன் இல்லை, அது போல் நல்ல மாஞ்சா இன்றி காத்தாடி இல்லை. நல்ல மாஞ்சா உருவாக கடும் உழைப்பு தேவை. வெட்கம்,மானம் இதையெல்லாம் துறந்து, வீட்டில் உள்ளவர்களின் திட்டு,அடி தாங்கும் சக்தியுள்ள ஒருவானால் தான் நல்ல மாஞ்சா உருவாக்க முடியும். உடைந்த பாட்டில், பிளேடு துண்டுகள், வஞ்சிரம், நாய் பீ என்று தெருத்தெருவாக சுற்றி எடுத்து வந்து அடுப்பில் போட்டு காய்ச்சி அதில் நூல்கண்டை போட்டு மாஞ்சா செய்ய வேண்டும்.

ஒரு வேளை, இந்த உழைப்புக்கெல்லாம் அஞ்சி தான் சிறுவர்கள் இப்போது காத்தாடி விடுவதில்லையோ?

Thursday 13 August 2009

இது தேவையில்லாத ஆணி புடுங்குற வேலை



1500 போலீஸ், 10000 பேர் அமரக்கூடிய திடல், ஐந்து நுழைவு வாயில்களில் மெட்டல் டிடக்டர் சோதனை, ஏர்போர்ட் முதல் அயனாவரம் வரை கொடி,தோரணம்,அலங்கார மின் விளக்குகள் என்று குறைந்த பட்சம் ஒரு ஐந்து கோடி ருபாய் செலவில் சர்வக்ஞர் என்ற கன்னட மகானின் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது.

அடுத்த முறை கன்னடர்-தமிழர் பிரச்சனை ஏற்பட்டால் தமிழகத்தில் முதல் பலி இந்த சர்வக்ஞர் சிலை தான். கன்னடர்கள் என்ன கேனையர்களா? சமீபத்தில் தமிழக முதல்வர் பெங்களூரில் திறந்த திருவள்ளுவர் சிலை அவர்களுக்கு இருக்கிறதே. இதெல்லாம் தேவையா? கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பல குவிந்து கிடக்க, இரு மாநில முதல்வர்களும் இது போன்ற சின்ன விஷயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க என்ன அவசியம் இருக்கிறது என்று புரியவில்லை.

Wednesday 5 August 2009

மறதி மன்னார்சாமிகளுக்கு

சில நாட்கள் / வாரங்கள் / மாதங்கள் முன்பு நாம் கடந்து வந்த செய்திகளை பார்ப்போம் ,
சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் - ஒரு மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது - அதன் முதலாளி தலைமறைவாகிவிட்டார் - அந்த வழக்கின் கதி என்ன? தீ.விபத்து தொடர்பாக ஏதாவது செய்தார்களா? புது விதிகள் அல்லது அந்த ரங்கநாதன் தெருவில் உள்ள மற்ற கட்டிடங்கள் எல்லாம் தீயணைப்பு துறை விதிப்படி கட்டப்பட்டதா என்று சோதனை செய்து யாரையாவது கைது செய்தார்களா? எந்த கடையை பூட்டினார்கள்? ஏதாவது தகவல் உண்டா?


அந்த வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து இருப்பார் , ஆக அந்த file பற்றி தகவல் இல்லை.அடுத்த வருஷம் சுமார் ஐநூறு பேர் தீயிலும், நெரிசலிலும் சாவார்கள் - அது வரை பிரச்சினை இல்லை-ஜாலி!

swiz பாங்கில் உள்ள கோடிக்கணக்கான கருப்பு பணம் - என்ன ஆனது? இந்திய அரசு அதை தொடர்ந்து என்ன செய்தது? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?

சட்டக்கல்லூரி மாணவர் அடிதடி பிரச்சினை - அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏதோ விசாரணை கமிஷன் போடப்பட்டதாக கேள்வி - அந்த கமிஷனின் சிபாரிசை அரசு அமல் படுத்தியதா? இல்லையா?

சரி விடுங்க கந்தசாமி எப்போ ரிலீஸ்?

கதை வாங்கலையோ கதை

தமிழ் திரையுலகில் இன்று பெரிய பிரச்சனையே கதை பஞ்சம் தான். உலக மொழியில் எல்லாம் படம் பார்த்தாலும் நம் இயக்குனர்களுக்கு கதை கிடைக்கிற பாடாய் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கு உதவ நாம் ஒரு கதை தந்தால் அதை தமிழ் இயக்குனர்கள் திரைக்கு ஏற்றபடி எப்படி அமைப்பார்கள்? ஒரு சிறிய கற்பனை. இதற்காக நாம் தேர்ந்தெடுத்த இயக்குனர்கள், பாலா, கவுதம் மேனன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார். இப்போது கதை:

"பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு செல்லும் வழியில் நம் ஹீரோ ஹால் டிக்கெட்டை தொலைத்து விடுகிறார். அதை எப்படி அவர் தேடி கண்டுப்பிடித்து சென்று ஒரு வழியாக பரீட்சை எழுதுகிறார் என்பது தான் கதை".

முதலில் இயக்குனர் பாலா:

நாம்: சார், கதை சொல்லிட்டோம். இப்போ நீங்க இதை எப்படி திரைக்கதையா மாத்தப்போறீங்க?

பாலா: இந்த படம் எடுத்து முடிக்க அஞ்சு வருஷம் ஆகும். ஹீரோ மொதல்ல யோகா கத்துக்கணும். அப்பறம் பிணங்களோட வாழ கத்துக்கணும். பிணங்களை சாப்பிட கத்துக்கணும். உச்சி வெயில்ல நிர்வாணமா நின்னு மர்ம பாகங்கள் கலரை எல்லாம் மாத்தணும். இதையெல்லாம் அவர் செஞ்ச ஒடனே ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிதான்.

நாம்: சார், தப்பா நினைக்காதீங்க, இந்த கதைக்கு எதுக்கு சார் இதெல்லாம்?

பாலா: நீங்க ஏன் இதை வெறும் கதையா பாக்கறீங்க? ஹால் டிக்கெட் தேடல் என்பது தத்துவ விசாரணை செய்யற விஷயம். நான் தான் பெரியவன் அப்படின்னு நினைக்கிற ஒருத்தனுக்கு ஹால் டிக்கெட் தொலையும் போது தான் தன்னோட அகந்தை புரியுது. ஹால் டிக்கெட் தான் பெரிசு தான் ஒண்ணுமே இல்லை அப்படின்னு அவன் புரிஞ்சுக்கிற நேரம்.

நாம்: சரி சார், படத்துக்கு டைட்டில் என்ன?

பாலா: வாழ்க்கை சிறுசு, டிக்கெட் பெரிசு. சைடுல "எக்ஸாம் தத்வமசி" அப்படின்னு ஒரு லைன். மியூசிக் இளையராஜா. கிளைமாக்ஸ்ல அஞ்சாயிரம் வயலின் யூஸ் பண்ணி ஒரு பாட்டு வெக்கறோம்.

நாம்: படம் அஞ்சு வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா நல்லா இருக்குமா சார்?
பாலா: சினிமா தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ செய்யற முறுக்கோ, அதிரசமோ இல்ல கெட்டு போறதுக்கு. நல்ல படத்த ரசிகன் அம்பது வருஷம் கழிச்சி ரிலீஸ் பண்ணா கூட பார்ப்பான்.

நாம்: படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் யாரு சார்?
பாலா: நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தரு தேனி கிட்ட இருக்காரு. கை, கால், கண், வாய், மூக்கு கிடையாது ஆனா ரொம்ப நல்லா நடிப்பாரு. ஹீரோயினா கரீனா கபூர் இல்லேன்னா ஐஸ்வர்யா ராய் போடலாம். ஆனா, அவங்க ஒரு வருஷம் பெரியகுளம் சந்தைல பிச்சை எடுத்து பழகிக்கணும்.


இப்போது நாம் சந்திக்க இருப்பது கவுதம் மேனன்.

(கவுதமுக்காக அவர் அலுவலகத்தில் நாம் காத்திருக்கிறோம்)

"மாதா சொத், பேகன் சொத், f*** the damn bitch என்று கூறியபடி உள்ளே நுழைகிறார் கவுதம்".
நாம்: என்ன சார், கோவமா இருக்கீங்க?
கவுதம்: நோ நோ, I am fine. It's just that i have been dubbing for my upcoming tamil movie and i still haven't got over with it. Yeah, tell me, wass up?
நாம்: நேத்து உங்க உதவியாளர் கிட்ட கதை கொடுத்துட்டு போனோம், அது விஷயமா..
கவுதம்: அது நீங்கதானா, real good story mate...but u see we need to make some changes when it comes to the story treatment looking at it from a movie viewpoint.
நாம்: அதான் சார், உங்க கிட்ட பேசிட்டு போலாம் அப்படின்னு வந்தோம். எப்படி திரைக்கதை எழுத போறீங்க?
கவுதம்: படம் யு.எஸ்ல நடக்கற மாதிரி மாத்துவோம். அங்க எல்லாம் ஹால் டிக்கெட் கிடையாது. Let's say that our man takes the exam from home and he is all alone during that time. திடீர்னு ரெண்டு Psychos அவன் வீட்டுக்குள்ள வராங்க. ஒரு பொண்ணு அண்ட் ஒன் பாய். அவங்க ரெண்டு போரையும் ஏமாத்தி அவன் எப்படி எக்ஸாம் எழுத போறான் அப்படிங்கறது தான் ஸ்டோரி.
நாம்: சரி சார், படத்துக்கு யார் ஹீரோ? விஜய் நடிச்சா நல்லா இருக்குமா?
கவுதம்: No No, அவர் திருப்பாச்சி, சிவகாசி ரெண்டும் கலந்து இந்த கதையை மாத்த சொல்வாரு. Let's have Surya. அவரு தான் கேள்வி கேட்காம நடிப்பாரு. Daniel Balaji ஒரு Psycho, female psycho ஜோதிகா.
நாம்: படம் எப்போ சார் ஸ்டார்ட் பண்ணலாம்?
கவுதம்: Give me 10 days time. I need to watch a few english movies and get the scenes ready
நாம்: படத்துக்கு பட்ஜெட் எவ்வளோ சார் வரும்?
கவுதம்: கிளைமாக்ஸ் சண்டை வேளச்சேரி மார்கெட்ல நடக்கும்.அதுக்கு அமெரிக்கால செட் போட்டுடலாம். சூர்யா அமெரிக்கால இருக்கற வீட்டோட செட், i guess we can have it in West Indies. Overall 200 crores should be fine but have a backup of 100 crores.

இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார்

நாம்: சார், கதை எப்படி இருக்கு?
கே.எஸ்: கமல் சார் தான் ஹீரோ. அப்படி இருந்த நான் டைரக்ட் பண்றேன்.
நாம்: சார், படம் ஸ்கூல் பையன் பத்தி சார்??
கே.எஸ்: கமல் ஸ்கூல் பையனா நடிக்க முடியாது அப்படின்னு சொல்றீங்களா?
நாம்: சார், அவர் பண்ணாத பாத்திரமா?
கே.எஸ்: அப்பறம், வேற என்ன பிரச்சனை? அவர் ஸ்டுடென்ட், ஹால் டிக்கெட், அது தொலஞ்சு போற தெரு, எல்லா ரோலும் பண்ணிடுவாரு. உங்களுக்கு செலவு மிச்சம்.
நாம்: சரி சார், அதெல்லாம் விடுங்க, திரைக்கதை எப்படி?
கே.எஸ்: ஒரு தீவிரவாதி கைல அந்த ஹால் டிக்கெட் கெடைக்குது. அவன் அதை ஒரு பாட்டில் உள்ள போட்டு வாஷிங்டன் அனுப்பறான். கமல் அதை தேடிட்டு போறாரு. அங்க வாஷிங்டன் ஊர்ல ஒரு நாட்டாமை இருக்காரு. அது தான் விஜயகுமார். அவர் அந்த பாட்டில் உள்ள என்ன இருக்கு அப்படின்னு தெரியாம வெத்தல கொதப்பி துப்பராரு. இப்போ கமல் சாருக்கு ரெண்டு வேலை. ஹால் டிக்கெட் கண்டு பிடிச்சு கழுவி அதை இந்தியாக்கு எடுத்துட்டு வரணும்.கழுவறதுக்கு சாதா தண்ணி அமெரிக்கால கெடைக்கல. அதுக்காக கமல் சிதம்பரம் வராரு. அங்க ஹீரோயின் காலைல வாசல் தெளிக்க தண்ணிய பக்கெட்ல வெச்சு இருக்காங்க. அதை கமல் சார் எடுத்து யூஸ் பண்ணிடறாரு. கமல் சாருக்கும் ஹீரோயினுக்கும் லவ் வருது. அது ஹீரோயின் பாட்டிக்கு புடிக்கல. கமலும் ஹீரோயினும் லிப் கிஸ் பண்ணும் போது பாட்டி அந்த ஹால் டிக்கெட் இருக்கற பாட்டில்லை ஒளிச்சு வெச்சிடறாங்க. இப்படி போகுது கதை.

நாம்: எப்போ சார் படம் முடியும்?
கே.எஸ்: கமல் சார் போதும் அப்படின்னு சொன்ன ஒடனே நிறுத்திட வேண்டிதான்.

நாம்: படத்துக்கு பட்ஜெட் என்ன சார்?
கே.எஸ்: பட்ஜெட் அப்படின்னு எதுவும் இல்ல. நீங்க கோமணம் ஒன்னு வாங்கிகிட்டு பாக்கி எல்லா சொத்தையும் வித்துடுங்க.