Sunday, 20 November 2011

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத் துவக்கவிழா தேனியின் அல்லிநகரத்தில் நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். வைரமுத்து பேசும் போது தான் எழுதிய "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" புத்தகத்தில் பாரதிராஜா பற்றிய பகுதியை நினைவுகூர்ந்தார். படித்து வெகு நாள் ஆயிற்றே என்று அதை கையில் எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை திறக்க அது யேசுதாஸ் பற்றி வைரமுத்து எழுதியது. வைரமுத்துவின் சொல்லாட்சியில் ஆட்கொள்ளப்பட்டேன். இதோ அந்த வரிகள்.

அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று அவருக்கே தெரியாது. ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். என்னோடு அவர் அடிக்கடி சண்டை பிடிக்கிறார். அதனால் அவரோடு நானும் அடிக்கடி சண்டை பிடிக்கிறேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கும் அளவுக்கு அவர் என்னை நேசிக்கவில்லை என்பதை அறிவேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். அவரை நான் ஒரு பங்கு நேசிக்கிறேன்;அவர் என்னை அரைப் பங்கு நேசிக்கிறார். எனவே எங்களுடையது ஒருதலைக் காதல் அல்ல;ஒன்றரைத்தலைக் காதல்.

சூரியன் தன்னை நேசிக்கிறதா என்பது தாமரைக்கு முக்கியமில்லை. சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம். ஆகையால், அவரை நான் நேசிக்கிறேன்.பள்ளிப் பருவத்திலிருந்தே நான் யேசுதாசின் காதலன்.

அவர் குரல் - சோகமான காந்தம்; காற்றை காயப்படுத்தாமல் பரவுகிற அருவ நதி; காது மடலோரம் தென்றலின் கச்சேரி;மனசை நனைக்கின்ற மர்ம மழை;இந்த எந்திர வாழ்வின் ஆறுதல் மந்திரம்.

கலையும் கலைஞர்களும் வற்றிவிடாமல் இருப்பதால் தான் இந்த வறண்ட நூற்றாண்டு வாழ்க்கையில் கூட இன்னும் ஈரம் இருக்கிறது. வாழ்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டும் அடையாளங்கள் கலைகளும், இலக்கியங்களும் தாம். நம் தலைமுறையில் அந்த அடையாளங்களுள் ஒன்றாய் யேசுதாசின் குரலை நான் குறிப்பிடுவேன்.

அவர் உச்சரிப்பை பற்றித் தமிழ்நாட்டில் சச்சரவு உண்டு. தமிழர்களே தமிழை தமிலாக உச்சரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிற மொழிக்காரர் தமிழை பிறழ உச்சரிப்பதில் ஆச்சர்யமில்லை.

'திருக்கோயிலே' என்று எழுதிக் கொடுத்தால் 'தெருக்கோயிலே' என்று பாடுகிறார்கள் என்று கவியரசு கண்ணதாசன் இவரை ஒருமுறை கண்டித்தார். 'ஒலிப்பதிவின் போது எழுதிக் கொடுத்தவர் வந்து திருத்தவேண்டியது தானே' என்று யேசுதாஸ் திருப்பிக் கேட்டார்.கவியரசு கண்ணதாசனுக்கு யேசுதாஸ் வழங்கிய உரிமையை அவர் எடுத்துக் கொண்டாரோ இல்லையோ நான் எடுத்துக் கொண்டேன். அந்த உரிமையை தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சிறுகச் சிறுகக் கண்டு கொண்டேன்.

யேசுதாஸ் குரல் மீது எனக்கு எவ்வளவு மயக்கமோ தமிழ் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் எனக்கு அவ்வளவு இருக்கும். பிரசவ அறைக்கு வெளியே நிற்கும் புருஷனின் கவலையெல்லாம் பெற்றவளும் இறந்துவிடக் கூடாது பிள்ளையும் இறந்துவிடக் கூடாது என்பதுதான். கர்ப்பமே குழந்தைக்கு கல்லறையாகிவிட்டால்...? பிறக்கும் குழந்தை கையில் கொள்ளியோடு பிறந்தால்..? அந்தக் கணவனின் கவலை தான் இந்தக் கவிஞனின் கவலை.

அவ்வளவு பெரிய சங்கீத மேதையால் இந்தச் சின்ன விஷயத்தை செரித்துக் கொள்ள முடியவில்லை. திருத்துவதை அவர் தன்னை வருத்துவதை நினைக்கிறார். ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நான் பிரம்போடு வருவதாக ஒரு பிரமை இருக்கிறது அவருக்கு. ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ரோஜாக்களாய்த் தான் கைகுலுக்கிக் கொள்கிறோம். குலுக்கிய கைகள் பிரிகிற போது கையில் ரத்தமே கசிகிறது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன்.

'ஈரமான ரோஜாவே' ஒலிப்பதிவாகிக் கொண்டிருந்த போது 'தண்ணீரில் மூள்காது காற்றுள்ள பந்து' என்றே பாடிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரமாய் தமிழ் மூழ்கிக் கொண்டிருந்தது. மயிலிறகால் மருந்திடுவது மாதிரி நளினமாய்ச் சொன்னேன்;திருத்திக் கொண்டார்.

'வெள்ளைப்புறா ஒன்று' பாட வந்தபோதும்
'முதல் எளுத்து தாய்மொளியில்
தலை எளுத்து யார்மொளியில்'
என்று தான் சோகமாய்ப் பாடிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு பாடல்களை நான் சொல்லச் சொல்ல அவர் தன் தாய்மொழியில் எழுதிக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினோம்.நாமெல்லாம் சிறப்பு 'ழ' கரம் என்று கருதிக் கொண்டிருக்கிற 'ழ' கரம் தான் பிற மொழியாளர்களுக்கு 'வெறுப்பு ழகரமாக' இருக்கின்றது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். லதா மங்கேஷ்கரும் ஆஷா போன்ஸ்லேயும் கூட மராட்டியின் மூலமாகத் தான் இந்த 'ழ' கரத்தைப் புரிது கொள்கிறார்களே தவிர இந்தியில் சுட்டுவதற்கு எழுத்தே இல்லை. 'அ' கரம் தமிழுக்கு சிகரம் என்பதைக் கூட நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

'அ' கரம் தமிழுக்கு அஸ்திவாரம் தான்
'ழ' கரம் தான் தமிழுக்கு சிகரம்.

அந்தச் சிகரத்தில் ஏற முடியாமல் தான் பலருக்கு சிராய்ப்புகள்.

அடிக்கடி திருத்துகிற ஆசிரியர் உத்தியோகம் பார்க்க கூடாது தான் என்பதை அறிவேன் நான். ஆனாலும் கோடிக்கணக்கான தமிழர்கள் கேட்கும் பாடு, கொச்சையாகி விடக் கூடாது என்பதற்காகவே, அவர் புண்படுத்தப்படுவாரே என்று புரிந்தும் கூட பண்படுத்தப்பட வேண்டிய பணியைப் பண்பாட்டோடு செய்ய வேண்டியிருக்கிறது.

கலைஞன் மேன்மையானவன் தானே! சற்றேண்டு பற்றிக் கொள்ளும் கற்பூரம் தானே!
பறவையினத்தில் இருந்தாலும் பறக்க முடியாத கோழி கூட, பருந்தைக் கண்டால் பறக்கும்வரை பறக்கப் பரபரக்கிறதே!

கோழிக்கே இந்த குணம் என்றால், ராஜாளிக்கு...! யேசுதாஸ் ஒரு ராஜாளி.

யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்த ஓர் ஒலிப்பதிவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அடிக்கடி திருத்தங்களை அடுக்கிக் கொண்டேயிருந்தாராம்.

'ரெடி..டேக்..' என்றதும் குரலே வரவில்லையாம். உள்ளே போய்ப் பார்த்தால் ஆளே இல்லையாம். அவர் காரை சாலையில் பார்த்ததாய் சிலர் அடையலாம் சொன்னார்களாம். இவையெல்லாம் கலைஞனின் குணங்கள். கலைக்காகத் தன்னை அழுத்தி வைத்து அடக்கிவைப்பதால் கலைக்கு வெளியே புறப்பட்டு வரும் போர்க் குணங்கள்.

அண்மையில் நடந்ததொரு சம்பவம். ஒளிப்பதிவுக்கு சற்றே தாமதமாய்ப் போனேன். யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார்.

"ஆண் அழுவது பிழையானது
பெண் அழுவது கலையானது"

என்ற என் வரிகளில் வழக்கம்போல் "ழகர" விவகாரம் வந்தது.

ஒளிப்பதிவை நிறுத்தச் சொல்லி திருத்தினேன். உள்ளேயிருந்த யேசுதாஸ் உஷ்ணப்பட்டுவிட்டார்.

"சாகிறவரைக்கும் திருத்திக் கொண்டு தான் இருப்பீர்களோ?" என்றார். "யார் சாகிறவரைக்கும்?" என்றேன். "நாம் ரெண்டு பெரும் சாகிறவரைக்கும்" என்றார். "இல்லை. தமிழ் சாகாத வரைக்கும்" என்றேன். பிறகு அவரிடம் விடைகொள்ளாமல் வீடு வந்தடைந்தேன். இரவெல்லாம் அடையாளம் தெரியாத சோகம், இருதயத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன்.

யேசுதாஸ் ஒரு சுதிவிலகாத ராகம்; ஆனால், அடிக்கடி ஊடல் கொள்ளும் ஒரு பாடல். அவரது ஆடையைப் போலவே அவர் மனத்திலும் எந்தக் கரையும் இல்லை என்பதை நானறிவேன். அவர் அழகான தாளில் தான் எழுதுவார். அந்தத் தாளே ஒரு பவளச் செதுக்கலாயிருக்கும்.

"நல்ல தாள் இது. எங்கே கிடைக்கும்?" என்று கேட்டேன்.

அவ்வளவுதான்!

மறுநாள் ஒரு பெரிய காகிதக்கட்டு என் வீட்டுக் கதவு தட்டியது. என் மனைவி தன் 'டாக்டர்' பட்டத்துக்கான ஆய்வை அந்தத் தாளில் தான் எழுதி முடித்தாள்.

யேசுதாஸ் ஒரு மனிதாபிமானி.