Thursday, 22 October 2009

உலக வெப்பமயமாதல்

சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். ஆனால், இந்த முப்பது வருடங்களில் இப்படி ஒரு வெப்பத்தை ஐப்பசி மாதத்தில் பார்த்ததில்லை.பொதுவாக, சென்னைக்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.சென்னையில் பருவ மழை என்று ஒன்று கிடையாது.புயல் சின்னம் சென்னைக்கருகே எங்காவது தோன்றினால் தான் சென்னையில் மழை.மற்றபடி, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை எல்லாம் சென்னைக்கு பொருந்தாது.இருந்தாலும், ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இப்படி வெய்யில் காயாது.

ஆனால், இந்த வருடம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் மழை இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார், உ.பி போன்ற வட மாநிலங்களில் கூட மழையில்லை. இதெல்லாம் உலக வெப்பமயமாதலின்(Global Warming) ஒரு பகுதி என்றே தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மனித குலத்தின் செயல்களே என்கிறது தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) மற்றும் NASA போன்ற அமைப்புகள். காடுகளை அழிப்பது, புதைவடிவ படிமங்களை எரிப்பது, மரங்களை வெட்டுவது போன்றவை புவி சூடாக முக்கிய காரணங்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இமயமலை உருக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

சரி, நம் அளவில் புவி சூடாவதை தவிர்க்க என்ன செய்யாலாம்:
1. உங்கள் ஊரில் உள்ள ஒரு நல்ல அமைப்பில் சேர்ந்து மரக்கன்றுகளை நடுங்கள்.
2. தேவைப்பட்டாலொழிய காகிதங்களை பிரிண்ட் செய்யாதீர்கள்.(ஒரு புத்தகம் உருவாக சில மரங்கள் வெட்டப்பட வேண்டும். புத்தகங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் அதற்காக வெட்டப்படும் மரத்தை போல இரு மடங்கு மரங்கள் நடப்பட வேண்டும்)
3. டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காதீர்கள். எரிப்பவர்களை கண்டால் புவி சூடாதல் பற்றி எச்சரியுங்கள்.
4. நமக்கு நேராத வரை பிரச்சனை இல்லை என்ற எண்ணத்தை முதலில் ஒழியுங்கள். வருங்கால சந்ததி வாழ வழி செய்யுங்கள்.

Wednesday, 21 October 2009

இருபத்தியொரு நாட்களில் தமிழ் சினிமா பாடலாசிரியர் ஆவது எப்படி?

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளவரா நீங்கள்?சங்க இலக்கியம், உலக இலக்கியம் இதெல்லாம் படிக்காமல் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக உருவெடுப்பது கடினம் என்கிற பீதி உங்களை பீடித்திருக்கிறதா? கவலை வேண்டாம் நண்பரே. வேட்டைக்காரன்,கந்தசாமி பட பாடல்களை இரண்டு முறை கேளுங்கள். நீங்களும் கவிஞராகலாம்.உங்களுக்காக சில சாம்பிள் இதோ:

"நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்ட
மோதிப் பாரு முழுசா வூடு போய் சேர மாட்ட"

மேலே உள்ள வரிகள் வேட்டைக்காரன் படத்திலிருந்து. அதே படத்தின் ஒபெனிங் சாங் வரிகள் இதோ:

"புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடிக்குது வேட்டைக்காரன் வராண்டா"

எவ்வளவு கருத்தாழம் கொண்ட வரிகள்? புலி உறுமும், இடி இடிக்கும் என்று தமிழனை ஆதி மனிதனாய் கற்பனை செய்து அவனுக்கு கற்றுத் தருகிறார் கவிஞர்.அற்புதம்.இப்போது கந்தசாமி பாடல் வரிகள் சிலவற்றை பார்ப்போம்:

"மியாவ் மியாவ் பூனை மீசை இல்ல பூனை
திருடி தின்ன பாக்கிறியே திமுசு கட்ட மீனை"

அடுத்த ஆண்டு கீழ்பாலர்(LKG) வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தில் இதை கண்டிப்பாக "Rhymes" பகுதியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு தகப்பனாக நான் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதே படத்திலிருந்து மற்றுமொரு பாடல்

Hey excuse me ms subulakshmi
ur activites are தப்பு லக்ஷ்மி
உன் பேச்சும் தோற்றம் ரொம்ப குப்ப லக்ஷ்மி
போடா போடா

ஏய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விடமாற்றியே
நீ படிச்ச பொண்ணு தானா
உன்ன படிக்க முடியலையே
ஏய் தள்ளி போ
என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு
ரொம்ப மூடு
ஐயையையோ

இது சாம்பிள் தான். இந்த படங்களின் எல்லா பாடல்களையும் நீங்கள் இரண்டு முறை கேட்டால் நீங்கள் பாடலாசிரியர் ஆவது உறுதி. இந்த படத்தின் பாடல்களை கேட்ட பின் நான் எழுதிய பாடலை கீழே பாருங்கள்.

Situation: காதலன் காதலியிடம் தன் ஆண்மை பற்றி கூறுகிறான்

ஏய் நீ Maruti Swift டி
நான் Hyundai Santro டி
நீ டீசல் வண்டி டி
நான் பெட்ரோல் வண்டி டி
உன் என்ஜின் எப்போவென பிரச்சனை பண்ணும் டி
என் என்ஜின் ரொம்ப soft and smooth டி
நம்ம ரெண்டு என்ஜின் ஒன்ன சேர்ந்த மத்த காருக்கெல்லாம் பீதி டி
நீ மேற்கு வங்காளம்னா நான் நக்சல் டி
உன்னை சின்னாபின்னமாக்க வந்த ஆம்பள சிங்கம் டி

இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. உடனே எடுங்கள் பேனாவை...

Tuesday, 20 October 2009

தமிழ் சினிமாவில் ஊர்திப் பாடல்கள்

தமிழ் சினிமா எழுபத்தைந்து ஆண்டுகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்களில் மன்னர் மரபை சேர்ந்த கதைகளே பெரிதும் படமாக்கப்பட்டன. அதன் பின் கால மாற்றத்திற்கு ஏற்ப கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரைப்படங்களாக மாற்றப்பட்டன.

இந்த மாற்றங்களின் பின்னணியில் முக்கியமான ஒரு அம்சம் பாடல்கள் படமாக்கப்படும் விதம். முதலில் சினிமா அரங்குகளில் படமாக்கப்பட்ட பாடல்கள் பின்னர் வெளியுலகில் எடுக்கப்பட்டன. நிஜமான மலை,அருவி,தடாகம் போன்றவை படங்களில் இடம்பெற்றன. செட்டுக்களில் சுற்றிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் என்று பாரதிராஜாவை பற்றி சொல்வார்கள். இவர் வந்த பின்பு தான் வெளிப்புற படபிடிப்பு அதிகம் நடைபெற்றது. இருந்தாலும் எம்.ஜி.யார் தான் அன்பே வா, உலகும் சுற்றும் வாலிபன் போன்ற படங்களின் வாயிலாக இதை முதல் முதலில் முயற்சி செய்தார் என்று நினைக்கிறேன்.அதே போல் பாடல்கள் பல்வேறு ஊர்திகளில் படம் பிடிக்கப்பட்டன. மலைக்கள்ளனில் குதிரையில் பாடிய எம்.ஜி.ஆர், பின்னாளில் ரிக்க்ஷாகாரனாக மாறி பாடினார். இப்படி ஊர்திகளில் படமாக்கப்பட்ட பாடல்களை பற்றியதே இந்த பதிவு.

எம்.கே.டி, பி.யு.சி கால படங்கள் பெரும்பாலும் ஆன்மிகம், மன்னர் கால கதைகள் போன்றவற்றை சார்ந்தே இருந்தன. ஆகையால், இந்த காலகட்டத்தில் படமாக்கப்பட்ட பாடல்கள் பெரிதும் குதிரை சார்ந்தவை. இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் இளமைக்கால படங்களில் கூட குதிரை, படகு போன்றவை தான் பாடல்களில் பிரதான பங்கு வகித்தன. இவர்கள் பின்னாளில் நடித்த படங்களில் தான் கொஞ்சம் கொஞ்சமாக சைக்கிள், பைக், கார் என்று தமிழ் சினிமா ஊர்திகளின் பரிணாம வளர்ச்சியை கண்டது.

இதற்கு முன் சைக்கிள், கார் போன்றவை தமிழ் சினிமாவில் காட்டப்படவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு பாடலை முழுவதுமாக ஒரு ஊர்தியில் படம் எடுக்க ஆரம்பித்தது 1960 பிறகு தான் என்று எண்ணுகிறேன்.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாடல், "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" என்னும் பாவமன்னிப்பு படத்தின் பாட்டு. முழுப்பாடலையும் சிவாஜி சைக்கிள் மேல் அமர்ந்து பாடியிருப்பார். அந்த சைக்கிளில் எதோ "வைத்தியசாலை" என்று பெயர் கூட இருக்கும். என்ன பெயர் என்று இப்போது நினைவில்லை.

கப்பலையே காட்டாமல் கப்பலில் நடப்பதாக எடுக்கப்பட்ட பாட்டு புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்,உண்மை சொல்ல வேண்டும்" பாடல். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் "வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்" பாடலில் கப்பல் வரும் என்று நினைக்கிறேன்.நினைவில்லை.இதை படிப்பவர்கள் உறுதி செய்யுங்கள்.

ஊர்தியில் படமாக்கப்பட்ட மற்றுமொரு அழகான பாடல், "அழகிய மிதிலை நகரினிலே" என்று காரில் சென்னை நகரை சுற்றி எடுக்கப்பட்ட பாடல். படப்பெயர் தெரியவில்லை. சிட்டுக்குருவி படத்தில் வரும் "என் கண்மணி உன் காதலி" பாடல் மற்றுமொரு முக்கியமான ஊர்திப் பாடல். அந்த கால பல்லவன் பஸ்சில் படமாக்கப்பட்டது. இதில் கண்டக்டர் சொல்லும் வசனங்கள் மிகப் பிரபலம். ஆனால், பாடல் முழுதும் பஸ்சில் படமாக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. ஒரு வழியாக, சைக்கிள், கார், பஸ்ஸை தாண்டிய தமிழ் சினிமா "பறந்தாலும் விடமாட்டேன்" என்கிற பாடலின் மூலம் தன் பறக்கும் இச்சையை தீர்த்துக்கொண்டது. பாடல் இடம் பெற்ற படம் குரு. பாடல் முழுதும் விமானத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளிவந்த நேரத்தில் நிச்சயம் இந்த பாடல் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும். இன்று வரை இந்த மாதிரி ஒரு விமானப் பாடல் எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ரயில் பாடல்கள் நிறைய உண்டு. "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது(பச்சை விளக்கு) ஆரம்பித்து ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்(5 ஸ்டார்)" வரை எத்தனை பாடல்கள். சொல்ல ஆரம்பித்தால் கணக்கே இல்லை. இன்னும் சில பிரபலமான ஊர்திப் பாடல்கள்:

பாரப்பா பழனியப்பா(பெரிய இடத்து பெண்) - மாட்டுவண்டி
ஓஹோ எந்தன் பேபி(தேன்நிலவு) - இது ஊர்தி பாடல் என்று சொல்ல முடியாது ஆனால் வித்தியாசமான விதத்தில் படமாக்கப்பட்ட பாடல்
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு(குங்குமச்சிமிழ்) - கூட்ஸ் ரயில்
ஆஹா, இன்ப நிலாவினிலே(மாயாபஜார்) - படகு
சின்னத்தாயவள்(தளபதி) - கூட்ஸ் ரயில்
தாலாட்டும் காற்றே வா( பூவெல்லாம் உன் வாசம்) - ரயில்
அந்த நாலு பேருக்கு நன்றி(நம்நாடு) - ரயில்
ஸெந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்(முள்ளும் மலரும்)- ஜீப்
என்னை கொஞ்சம் மாற்றி(காக்க காக்க) - ஜீப்

நீங்களும் கொஞ்சம் யோசித்து நான் மறந்த பாடல்களை கொஞ்சம் பின்னூட்டம் இடுங்களேன்.