Thursday, 8 December 2011

பாதகம் செய்பவரை கண்டால்...

நேற்றைய ஹிண்டு நாளிதழில் வந்த இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. இரண்டுமே கேலி, கிண்டலால் நடந்த கொலை சம்பவங்கள். ஒன்றில் கொலையுண்டவர் ஆண் மற்றொன்றில் பெண்.

சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் இரண்டு பேர் சில மாதம் தங்கியுள்ளனர். அதில் விகாஸ் என்ற நபர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ராஜேஷ் என்னும் இன்னொரு நபருக்கு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி. விகாசின் தோற்றத்தை சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராஜேஷ். ஒரு கட்டத்தில் இது தினமும் நடக்க, பிரச்சனை பெரிதாகி விகாஸ் ஆகஸ்ட் மாதம் ரூமை காலி செய்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டார்.

ஆனால், விகாசின் மனதில் ராஜேஷை கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. ராஜேஷை தேடி இரண்டு முறை லாட்ஜிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. செவ்வாய் அன்று மீண்டும் ஒரு மண்ணெண்ணெய் டின், சிகரெட் லைட்டர் மற்றும் சென்னை பர்மா பஜாரில் மூன்றாயிரம் ரூபாய்க்கு வாங்கிய கத்தி சகிதமாக ராஜேஷை தேடிச் சென்றிருக்கிறார் விகாஸ். தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயற்சிக்க லைட்டர் வேலை செய்யாததால் சில நொடிகள் தாமதமாகி இருக்கிறது. இதற்கிடையே முழித்துக் கொண்ட ராஜேஷ் விகாசை பார்த்து பயந்து பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் ரூமில் ஓசை எதுவும் இல்லாததால் விகாஸ் போய்விட்டார் என்று நினைத்து பாத்ரூமை திறந்து கொண்டு வந்த ராஜேஷை பல முறை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார் விகாஸ். சத்தம் கேட்டு மாடிக்கு வந்த லாட்ஜ் மேனேஜர் கத்தியை சுத்தம் செய்து கொண்டிருந்த விகாசை பார்த்து பயந்து ரூமை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீசை அழைத்திருக்கிறார்.

வெறும் கிண்டல் பேச்சு ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். கொலையாளி விகாசின் இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். நல்ல குடும்பப் பின்னணி உள்ள நபர் கோபத்தால் செய்த செயல் இது. ஒரு கல்லூரி இளைஞன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான். பர்மா பஜாரில் அவனுக்கு எப்படி அந்த கத்தியை விற்றார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒருவர் இப்படி ஒரு ஆயுதத்தை வாங்கும் போது கடைக்காரர் உஷாராகி காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாமா? அயல்நாடுகளில் நீங்கள் இருபத்தியொரு வயதுக்கு மேற்ப்பட்டவர் என்று புகைப்பட அடையாளத்துடன் நிரூபித்தால் தான் காய் நறுக்கும் கத்தி கூட கிடைக்கும்.

இரண்டாவது சம்பவம் திருநெல்வேலியில். சென்னையில் மருத்துவம் படிக்கும் பத்தொன்பது வயது மாணவன் மொனேஷ் ராஜெர் தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார். அங்கு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மைமூன் ஷர்மிளாவை சென்னைக்கு வரும் முன் ஏற்கனவே பலமுறை பைக்கில் அவர் பள்ளிக்கு சென்று வழிமறிப்பது, வேகமாக பைக்கை ஒட்டி அவரை பயமுறுத்துவது என்று ஆட்டம் போட்டிருக்கிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்துள்ளது ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப் படவில்லை.

செவ்வாய் அன்று தன் நண்பனின் புதிய காருடன் சென்று படு வேகமாக ஷர்மிளாவை இடிப்பது போல் அருகில் சென்று நகர்ந்துவிடலாம் என்று நினைத்தவர் வேகத்தை அடக்க முடியாமல் ஷர்மிளா மீது மோதி அவரை கொன்றுவிட்டார். காவல்துறையோ கொலை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் விபத்து என்று பதிவு செய்ய கொந்தளித்த பள்ளி மாணவர்களும் பொது மக்களும் சாலையில் போராட்டம் செய்ய ஆரம்பிக்க அதன் பின் காவல்துறை கொலை என்று வழக்கு பதிவு செய்துள்ளது.

1998 ஆம் ஆண்டு சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா மரணம் நிகழ்ந்த விதம் நம் நெஞ்சை விட்டு இன்னும் கூட விலகாத நிலையில் இப்போது மைமூன். இது கூட மரணம் என்பதால் வெளி வந்துள்ளது. ஈவ் டீசிங் என்கிற கொடுமைக்கு தினமும் ஆளாகும் எத்தனையோ பெண்களுக்கு எப்போது விடிவுகாலம்? ஒரு பெண்ணை முதல்வராக கொண்டுள்ள இந்த மாநிலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எப்போது களையப் போகிறது? ஈவ் டீசிங் செய்தாலே பத்து வருடம் கடுங்காவல் என்று சட்டம் எழுதுவதில் என்ன சிக்கல்? என்று மாறும் இந்த நிலை?


பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம்
கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா