Wednesday 1 January 2014

அர்விந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகி விட்டார். 'டில்லியில் உள்ள, ஒவ்வொரு வீட்டுக்கும், தினமும், 667 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்' என, நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து , 50 சதவீதம் வரை மின் கட்டணத்தை குறைத்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திண்டுக்கலில் இருந்து திருச்சி வரும் வழியில் ATM ஒன்றில் பணம் எடுக்க காரை நிறுத்தினேன். டீ கடைக்காரரும் டீ குடிக்க வந்த ஒருவரும் கெஜிரிவாலை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். "ஊழலை ஒழிக்க ஒருத்தன் வந்துட்டான்யா" என்ற சொல் காதில் விழுந்தது. கெஜிரிவாலை இந்த நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்து சொன்னதை எல்லாம் நிறைவேற்றினார் என்றால் இனி எந்த அரசியல்வாதியும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது. ஊழலற்ற ஆட்சி சாத்தியமே என்று இந்திய மக்கள் நம்பக்கூடும்.

இதற்கிடையே நாம் என்ன செய்யலாம்? லஞ்சம் கேட்பதை/கொடுப்பதை நிறுத்த கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். அரசியல்வாதிகளை மட்டுமே லஞ்சம் வாங்கும் வில்லன்கள் என்று சித்தரித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நமக்கும் பெரும் பங்கிருக்கிறது. நாடெங்கும் நல்லாட்சி அமைய நாம் எடுத்து வைக்கும் முதலடி இதுவாக இருக்கலாம். கெஜிரிவாலுக்கும் அவர் அமைச்சர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்.