Saturday 31 December 2011

2012 - நான் கொல்ல விரும்பும் நபர்கள்

"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும், அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது, இருக்கின்ற போதே வா வா வா வா"

வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஒரு பாடலை விட்டுச் சென்ற அந்த காவிய கவிஞனை 2012 தொடங்கவிருக்கும் நிலையில் இந்த பாடலின் வாயிலாக நினைவு கூர்கிறேன்.

கடந்து சென்ற வருடத்தில் எனது செய்கைகளை அசை போட, அதில் தவறுகளே அதிகம் தெரிகின்றன. அடடா, அந்த நண்பனிடம் இப்படி பேசியிருக்கலாமே, அவன் மனம் புண்படும்படி அல்லவா சொல்லிவிட்டேன், அவனை அழைத்து மன்னிப்பு கேட்கலாமோ என்று நினைக்கும் போதே "நான்" என்கிற அந்த எண்ணம் தலைதூக்கி "அவனும் தானே பேசினான், அவனுக்கு மன்னிப்பு கேட்கனும்னு தோணிச்சா? நீ ஏன் கேக்கணும்?" என்கிறது. ஒரு விஷயத்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது உன்னை விட இதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதாய் அவரை முந்திக் கொண்டு பேசும் போது, மீண்டும் "நான்" என்கிற அந்த கிருமி படருவதை நன்றாகவே உணர்கிறேன். இப்படி தோன்றுகிற அந்த "நான்" என்கிற எண்ணத்தை வரும் புத்தாண்டில் கொலை செய்ய விரும்புகிறேன்.

"உங்களுக்கு கோபமே வராதா சார்?" என்று அலுவலகத்தில் கேட்கும் நண்பர். "எல்லா விஷயத்துக்கும் எப்படி உடனே கோபம் வரது?" என்னும் மனைவி. பணியின் சுமையை பணிபுரியும் இடத்தில் வெளிக்காட்டாமல் வீட்டில் பகிர்ந்து கொள்ளும் நான். யோசித்து பார்க்கையில் இந்த கோபம் நிச்சயமாக ஒரு பயங்கர நோய். கோபமே இல்லாமல் இருப்பது நல்லதா என்று தெரியவில்லை, ஆனால் என்னைப் போன்ற முன்கோபிகள் இந்தச் சமூகத்திற்கு சாபமே. கோபம் என்கிற அரக்கனை கொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது எனக்கு, இல்லையேல் அவன் என்னை விழுங்கக் கூடும்.

"க்ஷண பித்தம்; கண பித்தம்" என்று சொல்வார்கள், நிலையான புத்தி இல்லாமல் தடுமாறுவதற்கு அப்படி சொல்வார்கள்.இந்த பழமொழி அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு மிகப்பெரிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு நிச்சயமாக நிறைய பொறுமை வேண்டும் என்பதை நான் அறிவேன். தடக் தடக்கென்று முடிவுகள் எடுக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள விழைகிறேன். என் கருத்தை ஸ்தாபிதம் செய்ய நினைக்காமல் பிறர் கருத்தை முழுதும் கேட்டு பின்னர் ஒரு முடிவெடுக்க வரும் புத்தாண்டில் சங்கல்பம் செய்து கொள்கிறேன். இதற்கு இடையுறாக இருக்கும் "அவசரம்" என்னும் எதிரியை சம்ஹாரம் செய்ய சபதம் எடுக்கிறேன்.

"உன் தாய் இருந்திருந்தால் நீ இப்படி வளர்ந்திருக்க மாட்டாய்" என்று முகத்திற்கு நேரே சில காலம் முன் கூறிய அவருக்கு மானசீகமாய் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நான் திரும்பிப் பார்க்க ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை அந்த வார்த்தைகள் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆண் வளர்த்த பிள்ளை என்பதால் அன்பு, கருணை, தியாகம், பரிவு போன்றவை என்னிடம் சற்றுக் குறைவே. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை சார்ந்தே என் முடிவுகள் உள்ளன. "பிறர்க்காக" இதைச் செய்வோம் என்று இம்மியளவு கூட நினைத்ததில்லை. இந்த முப்பத்திநான்கு என்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். "ஐந்தில் விளையாதது முப்பதில் விளையுமா?" என்று என்னை கேட்டுக்கொள்கிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மேலே சொன்ன உணர்வுகளை பயிற்சிக்கும் பொழுது ஏற்படும் சோதனைகளை களைய உறுதி கொள்கிறேன்.


"அடர்ந்து இருள்படர்ந்து
அழகாய் இருக்குது காடு
கடந்து வெகுதூரம் செல்லவேண்டும்
கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு
காப்பதற்கு" - ராபர்ட் பிராஸ்ட்