
இரண்டு வாரங்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவு வீடு திரும்பும் போது ஏதோ ஒரு எப்.எம் அலைவரிசையில் டி.எம்.எஸ் உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டிருந்தார்.
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
ஏழு வயது சிறுவனாக தாயின் சிதைக்கு எரியூட்ட நின்ற அந்த கணங்கள் கண் முன் வந்து போனது. ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் தொண்டை குழியை அடைத்தது. இந்த நிமிடம் என்னை மரணம் தழுவினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன். வெறும் சடலமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாய் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கழுத்தை கட்டிக்கொள்ளும் குழந்தை அதே பாசத்துடன் என் சடலத்தை கட்டிக்கொள்ளுமா என்று யோசித்தேன்.
இரண்டு நாட்களுக்கு இந்த பாடலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக இதையெல்லாம் மறந்து அன்றாட பிரச்சனைகளுக்கள் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் போது அதெப்படி நீ என்னை மறக்கலாம் என்று மரணம் என்னை கோபித்துக் கொள்வது போல் இருந்தது நான் படித்த அந்த செய்தி.
"பாடகி சித்ரா அவர்களின் மகள் துபாய் நீச்சல் குளம் ஒன்றில் மரணம்".
உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பது நியதி. ஆனால், தன் குரலால் உலகை எல்லாம் மயங்க செய்த சித்ரா, அடக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்கும் சித்ரா, எப்போதும் இறைவன் நாமம் சொல்லும் சித்ரா, கடுகளவும் பிறர்க்கு தீது நினைக்காத சித்ரா, அவருக்கா இந்த தண்டனை?
அன்பே சிவம் படத்தில் சொல்வது போல், "என்ன மாதிரி கடவுள் இது?" பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் துயரப்பட்டு அதன் பின் பிறந்த குழந்தை. அதுவும் "autism" குறைபாடுள்ள குழந்தை. எதற்கு பத்து வருடங்கள் அவரை துன்புறுத்தி, பின்னர் குறையோடு ஒரு பிள்ளையை கொடுத்து அதையும் எட்டு வயதில் பிடுங்கிக் கொள்ள வேண்டும்? பூமியில் இருந்து கொண்டு செல்ல ஆட்களுக்கா பஞ்சம்?
உறவை பிரிந்து வாடும் சித்ரா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு நம் அனுதாபங்கள்.