Thursday, 20 September 2012

காசி - 1

காசி சென்று வந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. திரும்பி வந்த உடனே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், எதைப் பற்றி எழுதுவது என்று தெரியவில்லை. காரணம், காசி பற்றி மட்டுமே எழுத அதிகம் ஒன்றும் இல்லை. மணிகர்ணிகா மற்றும் ஹரிச்சந்திரா காட்டில் சிதை எரிவதை பார்த்ததும், கங்கையில் வெள்ளம் சுழலோடு கரைபுரண்டோட, அதனூடே அஸ்தியும், எறிந்த விறகும், மாலைகளும் சென்ற வண்ணம் இருந்த காட்சிகளும், கங்கையின் விஸ்தாரமும், நவீன உலகின் மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாத காசி நகரும் என்னை பாதித்தன என்றாலும், அதை விட முக்கியமாக நான் கருதுவது காசி சென்று சென்னை திரும்பும் வரை கிடைத்த அனுபவங்களைத் தான்.

சென்னையிலிருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, ம.பி வழியாக உ.பியில் உள்ள முகல்சராய் சென்று அங்கிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாரனாசி எனப்படும் காசி நகரை சென்றிந்தேன். கயா எக்ஸ்பிரஸ் என்னும் அந்த ரயில் சென்னையில் காலை ஏழு மணிக்கு கிளம்பி மறுநாள் மாலை 6:30 மணிக்கு முகல்சராய் செல்கிறது. ரயில் முழுதும் சென்னை பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள். பெட்டி முழுதும் நடக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு சாமான்களை அடைத்து ஊருக்கு செல்கிறார்கள். இவர்களில் தொண்ணூறு சதர்விகிதம் பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். என் பெட்டியில் இருந்த நான்கு வாலிபர்களும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு கணினி நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார்கள். மாத சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். பீகாரில் இருந்தால் நாலாயிரம் தாண்டாது என்றார்கள். அதுவும் கையில் வந்து சேரும் வரை சொல்லமுடியாது. சென்னையில் அந்த பிரச்சனை இல்லை. மாதம் தவறாமல் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்றார்கள்.

பெட்டியில் இன்னொரு வட மாநில இளம்பெண் அவள் பாட்டியுடன் இருந்தாள். மத்திய பிரதேசத்தில் ஏதோ ஒரு கிராமத்திற்கு பாட்டியை அழைத்து செல்கிறேன் என்றாள் ஹிந்தியில். பாட்டி கையில் பெரிய புண் இருந்தது. அவ்வப்போது அதற்கு மருந்து தடவி கட்டுப் போட்டாள். ஒரு கட்டத்தில் அவள் தூங்கி விட, பாட்டிக்கு அம்பத்தூர் நண்பர்கள் பாட்டிக்கு அந்த சேவையை செய்தார்கள். ம.பியில் அவர்கள் இறங்கி விட, என்னுடன் பேசிக்கொண்டு வந்த அந்த இளைஞர்களில் ஒருவன், அந்த பாட்டிக்கு புற்றுநோய், ஆனால் மருத்துவரிடம் செல்லாமல் தானே ஏதோ ஆயுர்வேத மருந்துகளை உபயோகிக்கிறாள் என்றான். உனக்கு எப்படி தெரியும் என்றேன்? அந்த பெண் சொன்னாள். பாட்டிக்கு புகையிலை மற்றும் புகை பிடிக்கும் பழக்கமும் உள்ளது என்றான்.

இடார்சி வரை வறுமை பெரிதாக தென்படவில்லை. இடார்சி தாண்டி ம.பியில் நுழைந்து ஜபல்பூரை அடைந்தது ரயில். ஜபல்பூர் ரயில் நிலையத்தில் மனிதர்களை விட அதிகமாக மாடுகளும், நாய்களும் இருந்தன. பெட்டியில் பாம்பாட்டிகள் ஏறிக் கொண்டார்கள். பாம்பாட்டிகள் என்று கூட சொல்ல முடியாது. மிஞ்சி போனால் பதினைந்து வயதிருக்கும். ஒவ்வொருவர் கையிலும் ஆறடி கரு நாகப் பாம்புகள். இரண்டு ரூபாய் கொடு, தலையில் ஆசிர்வதிக்க செய்கிறேன் என்றார்கள். இருந்த பயத்தில் நான் பெட்டியின் கடைசிக்கு சென்று விட்டேன். ம.பி தாண்டும் வரை இப்படி பலரை பார்த்தேன். இடார்சி தாண்டிய பின் பயணச்சீட்டு பரிசோதகர் கண்ணில் படவே இல்லை. வேர்கடலை, மசாலா பொரி, பழம், கூடை விற்பவர்கள் என்று வந்து கொண்டே இருந்தார்கள்.

ம.பி, உ.பி இரண்டு இடங்களிலுமே நான் பார்த்த வரை, எந்த இடத்திலும் ஆடம்பரமான வீடுகளோ, சுத்தமான தெருக்களோ தென்படவே இல்லை. உ.பியில் பத்து மணி நேர மின்வெட்டு சர்வ சாதாரணம் போலும். சாலை என்பது பெயருக்கு கூட இல்லை. கடைகள் பலவற்றில் காடா விளக்கில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. தமிழகம் எண்பதுகளில் அப்படி இருந்திருக்குமா என்பது கூட சந்தேகம். முகல்சராய், வாரனாசி போன்ற ஊர்களில் தான் இந்த நிலை என்று நினைத்த எனக்கு அலகாபாத் நகரும் அதே போல் இருப்பது அதிர்ச்சி அளித்தது. திரிவேணி சங்கமம் செல்லும் சாலை முழுதும் குண்டும் குழியுமாக இருந்தது.

(தொடரும்)