Friday 8 August 2008

தோரணத்து மாவிலைகள்

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் தோரணத்து மாவிலைகள் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். திரு.சுஜாதா அவர்களின் அறிவியல் ஞானம் நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும், கோவை கம்பன் கழக விழாவில் அவர் ஆற்றிய உரை பற்றிய கட்டுரை அவரது அறிவியில் மற்றும் பொது அறிவுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ:

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பலவென்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளதென்றுஉரைக்கின் உளதே ஆம்

போன்ற வரிகள் நவீன க்வாண்டம் இயற்பியலின் இறுதி சிந்தனையாக வெளிப்படும் எதிர்மறைகளின் ஒருமைப்பாடாக வெளிவரும் கடவுள் தத்துவத்திற்கு ஒத்துப் போகிறது என்கிறார்.

அதே போல், "தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை தன்னுளே நின்றுதாம் அவற்றுள் தங்குவான் பின்னிலன் முன் இவன் ஒருவன் பேர்கிலன்" என்று கம்பர் சொல்வது நவீன இயற்பியல் கருத்துகளுக்கு மிக அருகில் உள்ளது என்கிறார் சுஜாதா.

கம்பராமாயணத்தில் அன்றாட அறிவியில் செய்திகளும் உள்ளன என்று கூறும் சுஜாதா, அதற்கு உதாரணமாக கம்பர் அயோத்தி நகரத்து மதில்களை பற்றி "நால்வகை சதுரம் விதி முறை நாட்டிய" என்று வர்ணிப்பதை மேற்கோள் காட்டுகிறார்.

ஆரண்ய காண்டத்தில் "மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடெல்லாம் மாய்ந்து விண்ணின் ஓங்கியது ஒரு நிலை" என்று ராவணன் தேர் சென்ற விதத்தை சுஜாதா இன்றைய ஏரோப்ளேன் டேக் ஆஃப் ஆவதற்கு இணையாக ஒப்பிடுகிறார்.

கம்பராமாயணத்தில் வேதியியல் இருக்கிறது என்று கூறும் சுஜாதா,
"துள்ளியின் ரதம் தோய்ந்து தொல்நிரம் கரந்து வேறாய் வெள்ளிபோல் இருந்தசெம்பும் ஆம் என வேறுபட்டார்"
என்று கம்பர் கூறும் போது, பாதரசத்தின் ஒரு துளிபட்டால் வெள்ளியும் செம்பும் வேறுபடுத்தி விடலாம் என்ற ரசாயன செய்தி வருகிறது என்கிறார்.

தசரதனுக்கு வந்தது ஹார்ட் அட்டாக் என்று நம்ப இடம் இருக்கிறது என்று சொல்லும் சுஜாதா அதற்கு பின்வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.
"வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் போயினன் என்றான்
என்ற போழ் தத்தே ஆவி போனான்".

ராமன் உபயோகித்த புஷ்பக விமானத்தில் பல பேருக்கு இடம் இருந்தது என்றும் அது இன்றைய போயிங் 747ஐ விட பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் சுஜாதா.
"சூரியன் மகனும் மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் கன்னி
மாமதில் இலங்கை மண்ணோடு கடற் படையும் துன்னினார் நெடும் புட்பக மிசை ஒரு சுழல்"

இறுதியாக, நாங்கள் எல்லாம் இப்போது என்னதான் சயின்ஸ் பிக்க்ஷன் கதைகள் எழுதினாலும் கம்பன் தான் தமிழின் முதல் சயின்ஸ் பிக்க்ஷன் எழுத்தாளன் என்று கூறி முடிக்கிறார் சுஜாதா.

2 comments:

Gokul said...

Super vasu, indeed a very nice one. Amazing to see sujatha's view on kamba ramayanam, really a genius!

Vijai said...

Vasu,

I read the "Aah" novel last week and started hearing sound from that day :)

Sujatha kalakittaar.