Tuesday 6 October 2009

நவீன கொள்ளையர்கள்

நீங்கள் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படித்திருக்கிறீர்களா? அதில் "திண்ணா" என்று ஒரு கதை வரும், நினைவிருக்கிறதா? அதில் சுஜாதா சொல்வார், "எனது மூதாதையர்களில் ஒருவரான குவளக்குடி சிங்கமையங்கார் ஏழை தென்கலை ஐயங்கார் பையன்களுக்கு உதவ ஒரு பாடசாலை நிறுவினார். அங்கு விஷிஷ்டாத்வைதம், புருஷ சுக்தம் போன்றவை சொல்லி தரப்பட்டன. இதெல்லாம் எப்படி அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார் என்று தெரியவில்லை".

என்னை பொறுத்த வரை,குவளக்குடி சிங்கமையங்கார் போன்றவர்கள் வருங்காலத்தை யூகித்தே இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனக்கு ஐயங்கார் பாடசாலைகள் பற்றி அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் பொதுவாக பாடசாலைகள் பற்றி உண்டு. என் தஞ்சை வீட்டை பற்றி முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். நான் சிறுவனாக விடுமுறைக்கு அங்கு செல்லும் போது எதிர்வீட்டில் ஒரு பாடசாலை இருந்தது. இது ஏழை ஐயர் (Preferably Vadamal) பசங்களுக்கு என்று உருவாக்கப்பட்டது.பொதுவாக, இப்படி பாடசாலை நடத்துபவர்களுக்கு பல வழிகளில் நிதி உதவி கிடைக்கும்.இந்த பாடசாலைக்கு காஞ்சி மடம் நிதி உதவி செய்தது.

பிராமணர்களுக்கு வேத அத்த்யயணம் மிக முக்கியம். இந்த வேத அத்த்யயணம் என்பது சில ஆண்டுகள் ஒரு பாடசாலையில் தங்கி கற்க வேண்டிய ஒரு விஷயம். அந்த காலத்தில் பிராமணர்களுக்கு வேதம் ஓதுவதை தவிர வேறு தொழிலும் கிடையாது. அரசன் செத்தாலும் வேதம் ஓத வேண்டும், அவன் போரில் வென்றாலும் வேதம் ஓத வேண்டும், அவன் கிணறு வெட்டினாலும் வேதம் ஓத வேண்டும், அவன் யாகம் செய்தாலும் வேதம் ஓத வேண்டும் என்ற நிலை இருந்ததால் பிராமணர்கள் வேதம் ஓதுவதை தொழிலாக கொண்டார்கள். காலங்கள் மாற மாற, இந்த நிலை மாறியது.அரசர்களின் ஆட்சி முடிந்தது.அதற்கு பின்னால் வந்த வெள்ளையர்கள் ஆட்சியில் வேதம் தெரிந்தவர்கள் தேவைப்படவில்லை. வேறு தொழில் செய்தால் தான் "புவ்வா" கிடைக்கும் என்ற நிலை ஏற்பட, பிராமணர்கள் இந்த தொழிலில் இருந்து விலகத் தொடங்கினார்கள்.

மீண்டும் பாடசாலைக்கு வருவோம். எனக்கு தெரிந்த வரை பாடசாலை படிப்பு ஏழு ஆண்டுகள். இந்த ஏழு ஆண்டுகளில் பொதுவான விஷயங்கள் சொல்லித்தரப்படும். பொதுவான என்பது ரிக்/யஜுர்/சாம/அதர்வண வேதங்கள் போன்றவை. இதற்கு பின் அந்த மாணவர்கள் hands on செய்து திருமணம், ஸ்ரார்தம், உபநயனம் போன்றவற்றிற்கு தேவையான மந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த ஏழு ஆண்டுகள் படிப்பை சொல்லிக்கொடுக்க மாயவரம், கும்பகோணம் என்று பல ஊர்களில் பாடசாலைகள் உண்டு.

எப்படி, இரண்டு பெரிய மனிதர்கள் சந்தித்தால் "நீங்கள் எங்கு படித்தீர்கள், ஐ.ஐ.டியா? நானும் அங்கு தான். எந்த வருடம்?" என்று கேட்டுக் கொள்வார்களோ அதே போல இரண்டு சாஸ்திரிகள் சந்தித்தால் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வி "எந்த பாடசாலைல படிச்சேள்? செம்பனார் கோயிலா? அது சந்திரசேகர கனபாடிகள் தான நடத்திண்டு இருந்தார்? நான் ஆங்கரை பாடசாலை. ஜாமாதா நடத்திண்டு இருந்தார். இப்போ முன்னே மாதிரி எல்லாம் இல்லை ஒய். நான் தான் பார்கறேனே.பசங்க மந்திர பிரயோகமே சரி இல்ல.போன வாரம் ஆங்கரை பாடசாலை பையன் ஒருத்தன் கல்யாணத்துல ஸ்ரார்த மந்திரம் சொல்லிண்டு இருந்தான். நமக்கேன் வம்புன்னு கண்டுக்காம விட்டுட்டேன்.கிருஷ்ணா கிருஷ்ணா" என்பார்கள்.

மீண்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் மாதிரி சொல்ல வந்ததை சொல்லாமல் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே இருக்கிறேன். ஒரு வேலை இது தான் "non linear" எழுத்தோ என்னவோ? யார் கண்டது? அடச்சே, மீண்டும் விஷயத்திற்கு வருவோம். ஆக, நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்த பாடசாலை என்ற அமைப்பை நிறுவியவர்கள், வேதம் ஓதும் தொழிலுக்கு மிகப் பெரிய Demand ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தார்கள். சொல்லப்போனால் இன்று,"Supply doesn't meet Demand".

பாருங்களேன், இன்று ஒரு விஷேசத்திற்கு சாஸ்திரிகளை வீட்டிற்க்கு அழைக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது? அவர் வீட்டுக்கு நாலு தடவை நடையாய் நடந்து, அவர் மனைவி, குழந்தைக்கு எல்லாம் சலாம் போட்டு "மாமா வந்தா நான் வந்ததா சொல்லுங்கோ" என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, அவர் குழந்தைக்கு ரெண்டு சாக்லேட் கொடுத்து என்று நாய் படாத பாடு பட்டு அவரை அழைக்க வேண்டி இருக்கிறது.சரி, வேறு சாஸ்திரிகளை அமர்திக்கொள்வோம் என்றால் நல்ல ஞானம் உள்ள ஒருவரை தேடி கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.

மேலும், ஒரு காலத்தில் வேதம் ஓதும் பிராமணர்கள் என்ன கொடுத்தாலும் யத்கிஞ்சிதமாக வாங்கிக் கொள்வார்கள். இன்று அந்த நிலை கிடையாது. ஒவ்வொரு விஷேசத்திர்க்கும் தகுந்த மாதிரி ஒரு அமௌன்ட் உண்டு. கிட்டத்தட்ட Prepaid ஆட்டோ மாதிரி. சரி, கொடுத்த பணத்திற்கு மதிப்பு உண்டா என்றால் அதுவும் இல்லை. எவ்வளவு சமரசம் செய்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? பசு மாட்டு எரு கிடைக்கவில்லை என்றால் அவசரத்திற்கு வறட்டியில் தண்ணீர் கலந்து அதை சாணம் என்கிறார்கள்(Reverse Engineering). இறந்தவருக்கு காரியம் செய்துவிட்டு அப்படியே திருமணம் செய்து வைக்க வருகிறார்கள். மரணம் நடந்த வீட்டில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் "பதினைந்து நாள் காரியத்திற்கும் நான் தான் Contract. அப்படி இருந்தால் இன்று நான் காரியம் செய்வேன்" என்று பணத்திற்கு நாயாய் அலைகிறார்கள்.

பணம் எல்லாருக்கும் தேவையாய் இருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை விட தர்மத்தை கடைப்பிடிப்பதில் இவர்களின் பங்கு அதிகம். மேலும், வேதம் எதையெல்லாம் பாவம் என்று சொல்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், சிறிது கூட மனசாட்சிக்கு பயமில்லாமல் இவர்கள் நடப்பது நல்லதல்ல.

2 comments:

ஸ்ரீராம். said...

யதார்த்தம்..எல்லாம் உண்மை. மதுரையில் இதற்கும் சங்கமே வைத்து விட்டார்கள். சங்கத் தலைவர் யாரை சொல்கிறார்களோ அவர்கள்தான் குறிப்பிட்ட இடத்தை attend செய்ய வேண்டும். எவ்வளவு Fees கொடுத்தாலும் எவ்வளவு மந்திரங்கள் விழுகின்றதோ, அதுதான்... அது அவர்கள் அடுத்த Commitment ஐப் பொறுத்தது! அது சரி தஞ்சையில் ஜாகை எங்கே?

Vasu. said...

ஸ்ரீராம்,

வருகைக்கு நன்றி. நான் வசிப்பது சென்னையில். தஞ்சையில் மேல வீதியில் வீடு இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு வருவேன்.