Saturday 17 October 2009

மதுரையில் சிவாஜி சிலை திறப்பு விழா- அழகிரி பேச்சு

மதுரையில் சமீபத்தில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பேச்சு, சில பகுதிகளில் சிவாஜி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அழகிரிக்கு முன்னால் பேசிய கமல் தன்னை நடிகர் திலகத்தின் மூத்த மகன் என்றார். இதை சிவாஜி தான் முதலில் சொன்னதே. இது கமலின் நடிப்பின் காரணமாக சொல்லப்பட்டது.

இதற்கு பின் பேச வந்த அழகிரி, "கமல் சொன்னது தவறு என்றும் சிவாஜியின் மூத்த மகன் அவர் தான் என்றும் கூறினார்". சிவாஜியை வெகுவாக புகழ்ந்த அழகிரி, தன் திருமணத்திற்கு சிவாஜி வராததால், அவரை சில நாட்கள் பார்க்கும் இடத்தில் எல்லாம் அலட்சியப்படுத்தியதாகவும் பின்னர் சமாதானம் அடைந்ததாகவும் சொன்னார்.

பராசக்தி படத்தில் சிவாஜி நடித்த சில காட்சிகளை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், "என்ன நடிகர் இவர்? இவரை மாற்றுங்கள்" என்று சொன்னதாகவும், அப்போது பெருமாள் முதலியாரும், கருணாநிதியும் தான் சிவாஜிக்கு குரல் கொடுத்து, அவர் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் குறிப்பிட்ட அழகிரி, அன்று என் தந்தை மட்டும் போராடியிருக்கா விட்டால் தமிழகத்துக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருப்பாரா? இன்று நாம் தான் அவருக்கு சிலை வைக்க முடியுமா என்றார்.பாவம், சிவாஜி ரசிகர்கள். இதையெல்லாம் கேட்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, இந்த செய்தி உண்மை என்றால் கூட பரவாயில்லை. பிரபல சினிமா செய்தியாளர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" அவர்களிடம் துக்ளக் நிருபர் இது பற்றி கேட்ட போது, "அண்ணா அவர்கள் தான் செட்டியாரிடம் இது பற்றி பேசியதாகவும், சிவாஜி கொஞ்சம் மெலிந்து காணப்பட்டதால் செட்டியார் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த தயங்கியதாகவும் கூறுகிறார். பெருமாள் முதலியார் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.வி.எம்.செட்டியார் தான் நிதியுதவி. அதனால், செட்டியாரை சமாதானப்படுத்த பெருமாள் முதலியாரும் அண்ணாவும் நாடக நடிகரான சிவாஜி கணேசனுக்காக வாதாடியதாகவும் கூறுகிறார் ஆனந்தன்.கலைஞரை பற்றி ஒரு வார்த்தை கூட இதில் இடம்பெறவில்லை.

கலைஞர் என்னும் திருதிராஷ்ட்ரன் தன் மகன்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் மௌனம் சாதிப்பது நமக்கு புதிதல்ல.

பின்குறிப்பு: நிகழ்ச்சிக்கு வந்த பலர், அழகிரி காலில் விழுந்து ஆசி பெற்றனர். அதே போல், பேச்சிலும் அழகிரி புகழ் நெடி தூக்கலாகவே இருந்தது. கமல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

3 comments:

Gokul said...

வாசு,

வல்லான் வகுத்ததே வாய்க்கால். இன்றைய தேதியில் அழகிரி தான் திரைத்துறையில் புகுந்து இருந்தால் சிவாஜியை விட நன்றாக நடித்து இருப்பேன் என்று சொன்னாலும் அதை மற்றவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை,

தான் சிவாஜியின் மூத்தபிள்ளை என்று சொன்னதால் சிவாஜி சொத்தில் தனக்கும் பங்குண்டு என்று அழகிரி சொல்லாமல் விட்டதே ராம்குமாருக்கும், ப்ரபுவிற்கும் பெரும் நிம்மதியாக இருந்து இருக்கும்.

ஜோ/Joe said...

முக அழகிரி பேசியதை கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள் ..இங்கே அவர் பேசிய விடயங்களை மட்டும் எடுத்து அவரை குறை சொல்வதற்கு ஏற்ற மாதிரி திரித்து கூறியிருக்கிறீர்கள் .

என் கண்டனங்கள்.

Vasu. said...

நண்பர் ஜோ அவர்களுக்கு,

நான் அழகிரியின் பேச்சு சில பகுதிகளில் சரியில்லை என்று தான் சொல்லியிருக்கிறேன். மேலும், அவர் சிவாஜியை வெகுவாக புகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன். தவறான தகவல் தந்தார் என்பது தான் என் குற்றச்சாட்டே ஒழியே வேறு எதுவும் இல்லை.