சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். ஆனால், இந்த முப்பது வருடங்களில் இப்படி ஒரு வெப்பத்தை ஐப்பசி மாதத்தில் பார்த்ததில்லை.பொதுவாக, சென்னைக்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.சென்னையில் பருவ மழை என்று ஒன்று கிடையாது.புயல் சின்னம் சென்னைக்கருகே எங்காவது தோன்றினால் தான் சென்னையில் மழை.மற்றபடி, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை எல்லாம் சென்னைக்கு பொருந்தாது.இருந்தாலும், ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இப்படி வெய்யில் காயாது.
ஆனால், இந்த வருடம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட பெரிய அளவில் மழை இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார், உ.பி போன்ற வட மாநிலங்களில் கூட மழையில்லை. இதெல்லாம் உலக வெப்பமயமாதலின்(Global Warming) ஒரு பகுதி என்றே தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் மனித குலத்தின் செயல்களே என்கிறது தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) மற்றும் NASA போன்ற அமைப்புகள். காடுகளை அழிப்பது, புதைவடிவ படிமங்களை எரிப்பது, மரங்களை வெட்டுவது போன்றவை புவி சூடாக முக்கிய காரணங்கள். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இமயமலை உருக தொடங்கும் என்று கூறப்படுகிறது.
சரி, நம் அளவில் புவி சூடாவதை தவிர்க்க என்ன செய்யாலாம்:
1. உங்கள் ஊரில் உள்ள ஒரு நல்ல அமைப்பில் சேர்ந்து மரக்கன்றுகளை நடுங்கள்.
2. தேவைப்பட்டாலொழிய காகிதங்களை பிரிண்ட் செய்யாதீர்கள்.(ஒரு புத்தகம் உருவாக சில மரங்கள் வெட்டப்பட வேண்டும். புத்தகங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் ஆனால் அதற்காக வெட்டப்படும் மரத்தை போல இரு மடங்கு மரங்கள் நடப்பட வேண்டும்)
3. டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காதீர்கள். எரிப்பவர்களை கண்டால் புவி சூடாதல் பற்றி எச்சரியுங்கள்.
4. நமக்கு நேராத வரை பிரச்சனை இல்லை என்ற எண்ணத்தை முதலில் ஒழியுங்கள். வருங்கால சந்ததி வாழ வழி செய்யுங்கள்.
No comments:
Post a Comment