பக்கத்து வீட்டில் இருந்த வயதான பெண்மணி இறந்துவிட்டார். இறந்தவரின் குடும்பத்தினர் வெளியூருக்கு தகவல் சொல்வதிலும் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பேசுவதிலும் மும்முரமாக இருந்ததால், அருகில் உள்ள மயான பூமிகளுக்கு போன் செய்து எத்தனை மணிக்கு சடலத்தை எரிப்பதற்கு எடுத்துக்கொண்டு வரலாம் என்று விசாரிக்கும் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். முதலில் பேசியது பெசன்ட் நகர் மின்சார மயான பொறுப்பாளரிடம்.
நான்: சார், வீட்ல பாட்டி இறந்துட்டாங்க. எப்போ எடுத்துட்டு வரலாம்?
பொறுப்பாளர்: இன்னிக்கு ஏற்கனவே பத்து பேர் புக்கிங் செஞ்சிருக்காங்க. நாளைக்கு தான் சார் முடியும்.
நான்: இல்ல சார், நாளைக்கு கஷ்டம் சார். இன்னிக்கு விடியகாலைல போனது. நாளைக்கு வரைக்கும் வீட்ல வெச்சுட்டு இருந்தா கஷ்டம் சார்.
பொறுப்பாளர்: அதுக்கு நான் என்ன சார் பண்றது? நாளைக்கு கூட ரெண்டு மூணு பேரு புக் பண்ணி இருக்காங்க. டைரியை பாக்கணும். (அதெப்படி ஒரு நாள் முன்பாக புக் செய்ய முடியும் என்று கேட்க நினைத்தேன். கேட்க பயமாக இருந்தது)
நான்: அப்போ இன்னிக்கு முடியாதா சார்?
பொறுப்பாளர்: வேணா எடுத்துண்டு வந்து இங்க வெயிட் பண்ணுங்க. ஆறு மணிக்கு மேல பாக்கலாம். ஆனா, எக்ஸ்ட்ரா செலவாகும்.
நான்: சரி சார், வீட்ல கேட்டுட்டு சொல்றேன்.
மின்சார மயானம் வேண்டாம் சாதாரண மயானமே போதும் என்று முடிவு செய்யப்பட, மீண்டும் வீட்டுக்கு அருகில் இருந்த மயான பூமி காப்பாளரை தொடர்பு கொண்டேன்.
நான்: சார், வீட்ல டெத் சார். இன்னிக்கு எரிக்க முடியுமா?
மறுபக்கம்: எரிக்கலாம் சார். என்ன ஏஜ் இறந்தவங்களுக்கு? போலீஸ் கேசா?
நான்: இல்ல சார். தொண்ணுறு வயசு பாட்டி.
மறுபக்கம்: போலீஸ் கேசுன எக்ஸ்ட்ரா சார். அதுக்கு தான் கேட்டேன். சரி எடுத்தாங்க.
நான்: எப்போ?
மறுபக்கம்: வாங்களேன் ஒரு மூணு மூன்ற மணிக்கு. எவ்வளோ பேர் குளிக்க போறீங்க இங்க? தண்ணி எல்லாம் ரெடி பண்ணனும். பைப்ல தண்ணி வரல.
நான்: வீட்ல கேட்டுட்டு உங்களுக்கு திரும்ப போன் பண்றேன் சார்.
மறுபக்கம்: புக் பண்ணாம எடுத்துட்டு வரதால எக்ஸ்ட்ரா ஆகும் சார்.
நான்: இப்போ பண்றது புக்கிங் இல்லையா?
மறுபக்கம்: இன்னிக்கே எரிக்கணும்னு சொல்றீங்களே? எப்படி புக் செய்யறது?
நான்: சரி சார், நான் வீட்ல கேட்டு சொல்றேன். எக்ஸ்ட்ரா அப்படின எவ்வளோ ஆகும்?
மறுபக்கம்: ஒரு மூவாயிரம் ஆகும்.
நான்: சரிங்க
கவுண்டமணி ஒரு படத்தில் கிராமத்தில் வெட்டியானாக இருப்பார். அந்த ஊரில் இருப்பவர்களிடம் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் இறந்த பின் நல்ல விதமாக புதைப்பேன்/எரிப்பேன் என்று கூறி மரணத்திற்கு பணம் வசுலிப்பார்.அந்த பணத்தை எடுத்துக்கொண்டு துபாய் சென்று விடலாம் என்று திட்டமிடுவார்.அதை செந்தில் கெடுத்து விடுவார். இரண்டு மயான பூமி ஆட்களிடம் பேசி முடித்தவுடன் கவுண்டமணி ஐடியா தான் தோன்றியது. இது மாதிரி திட்டங்கள் அயல்நாடுகளில் உண்டு. ஆயுள் காப்பீடு மாதிரி இது ஆயுள் இழப்பீடு திட்டம்.
கீழே உள்ளது போல ஒரு விளம்பரத்தை கூடிய விரைவில் நமது தினசரிகளில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நீங்கள் புதைக்கப்படும் இடத்தை உயிரோடு இருக்கும் போதே பாருங்கள். உங்களுக்காக கல்லறையின் மலர்கள் சூழ்ந்த இடத்தில் இடம் வைத்திருக்கிறோம். இப்போதே மாதம் ஐந்நூறு ரூபாய் செலுத்தி திட்டத்தில் சேருங்கள். இந்த விளம்பரத்தை எடுத்துக்கொண்டு எங்கள் அலுவலகம் வருபவர்களுக்கு முன்பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது. இந்த சலுகை சில நாட்களுக்கு மட்டுமே. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
புதைக்கப்படுபவர்களுக்கு:
1. வீட்டிலிருந்து ஏ.சி காரில் மயனத்திற்கு பயணம் செய்யுங்கள். மயான காரியங்கள் முடிந்த பின் உங்கள் உறவினர்கள் மீண்டும் அதே காரில் வீடு சென்றடையலாம்.
2. பெற்ற பிள்ளை ஒரு நாள் தான் பாலூற்ற வருவார். நாங்கள் மாதம் ஒரு முறை நல்ல பசும்பால் ஊற்றுவோம்.
3. புழு, பூச்சி அண்டாமல் நீங்கள் படுத்திருக்கும் இடத்தை சுத்தம் செய்வோம்.
4. ஆறு மாதத்திற்கு ஒரு முறை பூமாலை சாற்றப்படும். திவச தினத்தன்று சிறப்பு சாப்பாடு படைக்கப்படும்.
எரிக்கப்படுபவர்களுக்கு:
1. இறந்த அன்றே நீங்கள் எரிக்கப்படுவீர்கள். நீங்கள் நாறாமல் தப்பிக்கலாம். இது குறித்து வெட்டியானிடம் நேரில் தொடர்பு கொண்டு பேச வசதி செய்து கொடுக்கிறோம்.
2. எரிக்கும் போது சூடு தாங்காமல் எழுந்து கொண்டால், தேக்கு மாற கட்டையால் உதைக்கப்படுவீர்கள்.
3. உங்கள் உறவினர்கள் சிதைக்கு எரியூட்டி சென்ற பின் நெருப்பை அணைத்து உங்கள் வேட்டி, சட்டை,ஜட்டி போன்றவை உருவப்பட மாட்டாது என்று உறுதியளிக்கிறோம். மானத்தோடு சொர்க்கம்/நரகம் சென்று சேர எங்கள் திட்டத்தில் சேருங்கள்.
4. யாரோ ஒருவர் சாம்பலை உங்களுடையது என்று உங்கள் உறவினர்களிடம் தர மாட்டோம்.
பொது:
1. ஒப்பந்த பத்திரம் எங்களிடம் உண்டு. அதை படித்த பின் நீங்களும் வெட்டியானும் கையெழுத்திடலாம். முன் பதிவு மற்றும் மாத சந்தா செலுத்த கிரெடிட் கார்டு வசதி உண்டு.
2. நீங்கள் விரும்பும் மயான பூமியில் தகனம்/புதைப்பு. நெத்திக் காசு ஐந்து ரூபாய் எங்கள் செலவு.
மேலும் விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
1 comment:
அவலமாக இருந்தாலும் செம காமெடி..!
Post a Comment