நம்மில் பலர் உணவு, உடைக்கு அடுத்தபடியாக ஆர்வம் காட்டுவது நமது தோற்றத்தில் தான். அதுவும் குறிப்பாக நமது சிகை அலங்காரத்தில். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீடு மாற்றும் போது கூட பிள்ளைகளின் பள்ளி அருகில் இருக்கிறதா, மனைவி அவரசமாக எதாவது வாங்க வேண்டுமென்றால் கடைகள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கும் போதே நமக்கு ஏற்ற ஒரு முடி திருத்தும் நிலையம் இருக்கிறதா என்றும் பார்ப்போம். ஒரு நல்ல முடி திருத்தகம் அமைவதும் அங்கு நம் வசதிக்கு ஏற்ற மாதிரி ஒரு சிகை அலங்கார நிபுணர் கிடைப்பதும் அதிர்ஷ்டம் தான் என்று நினைக்கிறேன்.
நான் மடிப்பாக்கம் வந்த புதிதில் இரண்டு மூன்று முடி திருத்தும் நிலையங்களில் நுழைந்து அவர்களை "evaluate" செய்து இறுதியாக அதில் ஒன்றை தேர்வு செய்து என் ஆஸ்தான முடி திருத்தகமாக ஆக்கிக் கொண்டேன். கடந்த எட்டு வருடங்களாக அங்கு தான் செல்கிறேன். பொதுவாக, அங்கு மூன்று சிகை அலங்கார நிபுணர்கள் இருப்பார்கள். ஆனால், நான் அதில் குறிப்பிட்ட ஒரு நபர் தான் எனக்கு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று கூறி விடுவேன். அந்த நபர் வேறு வேலையாக இருந்தால் கூட அவர் முடித்து விட்டு வரும் வரை காத்திருப்பேன். அவரும் எனக்குத் தனி மரியாதை கொடுப்பார். எட்டு வருடங்களாக பழக்கம் என்பதால் நான் ஒரு மாதம் வராவிட்டாலும் அவருக்கு தெரியும். மீண்டும் வரும் போது "என்ன சார் காணோம்?" என்பார். நானும் வெளிநாடு சென்றிருந்தேன் என்பேன். எந்த ஊருக்கு சென்றேன் அங்கு என்ன பார்த்தேன் என்பதெல்லாம் கேட்பார். நானும் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்.
இப்படியாக இருந்த எங்கள் உறவு சமீப காலமாக குரங்காட்டி-குரங்கு உறவு போல் ஆகிவிட்டது. நம்மை விட்டால் இவனுக்கு நாதியில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை, இப்போதெல்லாம் நான் கடைக்கு செல்லும் போது அவர் வேலையாக இருந்தால், "சார், பத்து நிமிஷம் ஆவும் எனக்கு. அது வரைக்கும் நீங்க லண்டன் போனதை பத்தி சொல்லுங்க என்கிறார்". பக்கத்தில் இருப்பவர்களிடம் "சார் லண்டன், அமெரிக்கா எல்லாம் போய் இருக்காரு. கதை சொல்வாரு கேளுங்களேன், குஜாலா இருக்கும்" என்பார். எனக்கு ஒரு கட்டத்தில் " ஜனம் பாக்குது பாரு, ஆடுறா ராமா, குட்டி கரணம் போடுறா ராமா" என்று அவர் சொல்வது போல் தோன்றியது.
இது போதாது என்று கிரிக்கெட் மேட்ச் நடக்கும் தினங்களில் போனால் ஒவ்வொரு பந்தையும் எனக்கு விவரிப்பார். "என்னத்த ஆடறானுங்க, ரைட் சைடுல ஆட வேண்டிய பந்து சார் இது. இதோ இந்த மாதிரி ஆடணும்" என்று சவரக் கத்தியை இரண்டு முறை முகத்துக்கு அருகில் வைத்து காற்றை வெட்டுவார்."தில்" படத்தில் வரும் ஆஷிஸ் வித்யார்த்தி போல முகத்தில் கத்தி பட்டு மடிப்பாக்கத்தில் "வெட்டு வாசு" என்று பிரபலமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நினைத்துக் கொள்வேன்.
ஒரு நாள் கடையில் இருந்த போது நண்பர் ஒருவர் கைத் தொலைபேசியில் அழைத்து ஏதோ பேசிக்கொண்டே சுந்தர ராமசாமி புத்தகம் பற்றி ஏதோ சொன்னார். நானும் பதில் சொல்லும் போது சுந்தர ராமசாமி என்று சொல்லிவிட, போனை வைத்தவுடன் இவர், "அவரு நல்ல தான் மனுஷன் சார், ஆனா கடைசி காலத்துல சின்ன பொண்ணை கட்டிக்கிட்டு கெட்ட பேரு வாங்கிட்டாரு இல்ல", என்றார். எனக்கு உண்மையிலேயே அது பற்றி எதுவும் தெரியாததால், "அப்படியா" என்றேன்.என்ன சார், படிச்சவரு நீங்க, சத்யராஜ் சம்சாரமா குஷ்பூ நடிச்சாங்களே சார், அவங்க பேரு என்ன என்றார்.அப்போது தான் புரிந்தது அவர் பெரியாரை பற்றி சொல்கிறார் என்று.
எத்தனையோ இடங்களில் தைரியமாக பேசும் என்னால் ஏன் இவரிடம் "மூடிட்டு வேலையை செய்" என்று சொல்ல முடியவில்லை என்று யோசிக்கிறேன். சுஜாதா அடிக்கடி தன புத்தகங்களில் சொல்வது போல் "இதற்கெல்லாம் Sigmund Freud ஒரு காரணம் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment