பொதுவாக நானும் என் தந்தையும் அரசியல் குறித்து நிறைய விவாதிப்பதுண்டு. அவர் அம்மா விசுவாசி. எனக்கு கட்சி சார்பெல்லாம் இல்லை. இன்றைக்குள்ள பெரும்பாலான இளைஞர்களை போல கொஞ்சமாக சாப்பிட்டு மக்களுக்கும் எதோ சுமாராக செய்கிற யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிற ரகம்.
வழக்கம் போல் ஞாயிறு மதிய உணவின் போது சாதாரணமாக பேச ஆரம்பித்த இருவரும் அரசியலுக்குள் நுழைந்தோம். என் தந்தை, "கலைஞர் குடும்பத்தை போல சினிமாவை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. எந்த படம் வெளியானாலும் அது அவர் பேரன்கள் நடத்தும் தயாரிப்பு நிறுவன முத்திரையோடு தான் வெளியாகிறது. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் கூட தங்களுக்கு சம்பளம் வந்தால் போதும் என்று இதை எல்லாம் கண்டுக்கொள்வதில்லை. ஆனால், சோ போன்றவர்களிடம் தங்கள் மனக்குமுறலை கொட்டுகிறார்கள்(சோ துக்ளக் ஆண்டுவிழாவில் பெரிய நடிகர்கள் தன்னிடம் கலைஞர் குடும்ப ஆதிக்கம் குறித்து புலம்புகிறார்கள் என்று சொல்லியிருந்தார்). கார்த்திக், சரத்குமார், அஜித், விஜய் என்று திரையுலகினர் பலர் அ.தி.மு.க விற்கு இந்த முறை ஆதரவு தெரிவிப்பது கூட அந்த கோபத்தில் தான் என்றார்."
அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்றாலும் கலைஞர் குடும்பம் தான் இப்படி ஒரு முன்னுதாரணம் அமைத்துள்ளது என்று என்னால் ஏற்க முடியவில்லை.கலைஞர் குடும்பம் நேரடியாக செய்வதால் இந்த பழி. மேலும் கலைஞர் குடும்பம் பணம் மட்டுமே குறியாக கொள்கிறதே தவிர என் படத்தில் நடித்தாக வேண்டும் என்றெல்லாம் நடிகர்களை இம்சை செய்வதில்லை என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர் தன காலத்தில் திரையுலகில் என்ன அட்டகாசம் எல்லாம் செய்தார். தனக்கு இருந்த செல்வாக்கை கொண்டு எத்தனை நடிகர், தயாரிப்பாளர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்? வண்டிக்காரன் மகன் படத்திற்கு பிறகு வெகுநாள் நடிகர் ஜெய்ஷங்கர் திரையில் இடம் பெறவில்லை. சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள் எம்.ஜி.ஆரை சில காலம் பகைத்துக்கொண்டு அதற்கான விலையை கொடுத்தனர். ரஜினி வாத்தியாரிடம் "ஸ்பெஷல்" சிகிச்சை பெற்றார். நேற்று இன்று நாளை படம் தயாரித்த நடிகர் அசோகன் அந்த படத்தை முடிக்க முடியாமல் இழுத்தடித்தார் எம்.ஜி.ஆர். கடைசியில் கடனாளியாகவே ஆனார் அசோகன். இதைத் தவிர எஸ்.எஸ்.ஆர், மஞ்சுளா, லதா (தன் படங்களில் தான் ஐந்து வருடங்கள் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம்) என்று பலரை படுத்தி இருக்கிறார் பொன்மனச் செம்மல்.
வேலை மெனக்கெட்டு இதையெல்லாம் என் தந்தைக்கு ஒரு மணி நேரம் செலவு செய்து சொல்லிய பிறகு அவர் சொன்னது, "தலைவர் தனக்கு கெடுதல் பண்ணவங்கள தானே பழி வாங்கினாரு?" இந்த அவமானம் உனக்கு தேவையா என்று உள்ளுர கேட்டபடி நடையை கட்டினேன்.
No comments:
Post a Comment