Sunday 14 August 2011

டப்பிங் படங்கள்

டப்பிங் படங்கள் என்னை பொதுவாகவே வியப்பில் ஆழ்த்துபவை. குறிப்பாக டப்பிங் பட பாடல்கள். ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் தெலுங்கிலும் பிரபலம். இவர்களின் படங்கள் தமிழில் தயாராகும் போதே தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. இப்படி மொழிமாற்றம் செய்யப்படும் போது அந்த மொழியின் கவிஞர்கள் பாடலின் கருத்தை உள்வாங்கி அதற்கேற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.

தெலுங்கிலிருந்தோ அல்லது மலையாளத்திலிருந்தோ தமிழுக்கு வரும் படங்களுக்கும் இதே சவால் உண்டு. ஆனால், அப்படி வரும் படங்களின் எண்ணிக்கை குறைவு. எத்தனை சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் படங்கள் நமக்கு தெரியும்? ஆகையால் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும் படங்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறேன்.

டப்பிங் படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் போது ஏற்படும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைப்பது காட்சிக்கு ஏற்றபடி அமைக்கும் விதம். உதாரணமாக, "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி" என்ற வரிகளுக்கு இயக்குனர் ஷங்கர் ரஜினி தன் தொடையை தட்டி ஏற்படும் அந்த புழுதியை தவிடுபொடி என்று காட்டியிருப்பார். சிவாஜி மற்ற மொழிகளுக்கு டப் செய்யப்பட்ட போது அந்த மொழி கவிஞர்கள் எப்படி இதைக் கையாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

அதே போல் நீ, நான், மழை, முத்தம், இசை, காற்று, இடை, நடை போன்ற சொற்களை மற்ற மொழிகளில் கையாள்வது சுலபம். இப்போது புதியமுகம் படத்தின் இந்த பாடலை எடுத்துக்கொள்வோம்:

விடிகாலை விண்ணழகு, விடியும் வரை பெண்ணழகு(வைரமுத்து இதையெழுதி சர்ச்சையில் சிக்கிக் கொண்டது ஒரு கதை)
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு "ழ" அழகு, தலைவிக்கு நானழகு

இந்தப்படம் டப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், இந்த வரிகளை டப் செய்யப்படும் மொழிக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமே இல்லை. வைரமுத்து அவர்களிடம் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது "ராவணன்" பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. "உசிரே போகுது" பாடலுக்கு குல்சார் ஹிந்தியில் உபயோகித்துள்ள வார்த்தைகள் தமிழின் உக்கிரத்தை வெளிக்கொண்டு வரவில்லை என்றார் பேட்டி கண்டவர். வைரமுத்து சொன்னார், "குல்சார் என்னை விட சிறந்த கவிஞர், என்னை விட மூத்தவர். ஆனால், தமிழ் மொழி ஹிந்தியை காட்டிலும் வீரியம் கொண்டது. மொழியின் பலம் காரணமாக பாடல் சிறப்பாக அமைகிறது என்றார்". எவ்வளவு உண்மை.

ரீமேக் என்று வரும் போது இந்த பிரச்சனை இல்லை.இயக்குனர் மூல படத்திற்கு மாற்றங்கள் செய்வார். காட்சி படமாகும் விதம் மாற்றம் செய்யப்படும். அது குறித்து பாடலாசிரியரிடம் சொல்லப்படும். அவர் அதற்கு ஏற்ற மாதிரி பாடல் தர, காட்சி அதற்க்கேற்றவாறு ஒளிப்பதிவு செய்யப்படும்.

ஒரு தமிழனாக தமிழின் செழுமையை பறைசாற்ற எழுதவில்லை இந்த பதிவை. மற்ற மொழியினருக்கும் தங்கள் மொழி பாடல்கள் தமிழாக்கம் செய்யப்பட்ட போது அவை தங்கள் தாய்மொழியில் தந்த உணர்வை தரவில்லை என்ற குறையிருக்கலாம். இதை படிக்கும் தெலுங்கு அல்லது வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே.

6 comments:

Unknown said...

எனக்கு ஹாலிவூட் படங்களை தமிழில் டப் செய்தால்.பிடிக்கும். அவற்றின் வசனங்கள் வேடிக்கையாகவும், ரசிக்கும்படியும் இருக்கும்.

Anitha said...

மிக அருமையான பதிவு வாசு. தெலுங்கில் பொம்மரில்லு படம் சந்தோஷ் சுப்ரமணியமாக ரீமேக் ஆனது. ஆனால் பொம்மரில்லு பாடல்களில் இருந்த உணர்வு சந்தோஷ் சுப்ரமணியத்தில் இல்லை. தமிழில் இத்தனை சொல்வளம் இருந்தும் "அப்புடோ இப்புடோ எப்புடோ" என்ற வாக்கியத்திற்கு "அடடா அடடா அடடா" என்று எழுதியுள்ளார்கள். இதற்கும் இந்தப் படம் ரீமேக் தான் செய்துள்ளார்கள் பாடலை தமிழில் வேறு விதமாக அழகாக எழுதி இருக்கலாம்.

Anitha said...

மிக அருமையான பதிவு வாசு. தெலுங்கில் பொம்மரில்லு படம் சந்தோஷ் சுப்ரமணியமாக ரீமேக் ஆனது. ஆனால் பொம்மரில்லு பாடல்களில் இருந்த உணர்வு சந்தோஷ் சுப்ரமணியத்தில் இல்லை. தமிழில் இத்தனை சொல்வளம் இருந்தும் "அப்புடோ இப்புடோ எப்புடோ" என்ற வாக்கியத்திற்கு "அடடா அடடா அடடா" என்று எழுதியுள்ளார்கள். இதற்கும் இந்தப் படம் ரீமேக் தான் செய்துள்ளார்கள் பாடலை தமிழில் வேறு விதமாக அழகாக எழுதி இருக்கலாம்.

Vasu. said...

Thanks for the comments Sai Prasad and Anitha..

A Blip said...

நல்ல பதிவு வாசு!
நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை.தமிழிற்கு dub செய்ய படும் தெலுங்கு அல்லது மலையாள மொழி படங்கள் மிக குறைவு.ஆனால் தமிழில் இருந்து தெலுங்கு மொழிக்கு dub செய்ய பட்ட படங்கள் ஏராளம்.எனக்கு தெரிந்து சும்மார் 90 % படங்களை dub செய்கிறார்கள்.சமிபத்தில் ரிலீஸ் ஆன கோ படம் அதற்கு ஒரு சான்று."என்னமோ ஏதோ" பாடல் தெலுகுவில் "எந்துகோ எமோ".கேட்க நன்றாகவே இருந்தது.இருந்தாலும் something missing என்று தோன்றியது.

தமிழ் போலவே தெலுங்கு மொழி கூட மிக அழகான மொழி.சுந்தர தெலுங்கு என்று பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது! மாவீரன் படம் தெலுங்கு படமான மகதீராவின் dubbing.ஒரு படத்தை dubbing செய்வதால் அந்த படத்தின் தரம் தாழ்ந்து விடுகின்றது என்பதற்கு சிறந்த சான்று இப்படம்.அருமையான பாடல்கள் கீரவாணி இசையில்.அதில் வந்த "தீர தீர தீரா" மற்றும் "பஞ்சதர போம்மா" பாடல்களை dubbing என்ற பெயரில் குத்தி கொலை செய்து விட்டார்கள்!

Be it dubbing or remake it cant do justice to the original version.காக்க காக்க வின் ரீமேக் ஆன force உம் இதற்கு ஒரு உதாரணம்.

Viji said...

quite there is an airtel ad being aired... origin is Hindi and later it was done in tamil... "appadi oovuru friend um thevai machan" :) not going to elaborate further... good post asusual...