Sunday, 6 November 2011

முதல்வருக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு முதல்வர் அவர்களே,

சில மாதங்களுக்கு முன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது "ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற இயலாது. ஐந்தாண்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற இன்னொரு ஐந்தாண்டுகள் தேவை. கடன் சுமையில் இருந்த தமிழகத்தை நான் 2001 ஆம் ஆண்டு ஆட்சி ஏற்ற பின் செப்பனிட்டு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், ஆம் ஆண்டு 2006 ஆட்சி மாறியதால் மீண்டும் தமிழகம் பின் தங்கி விட்டது" என்றீர்கள்.

சரி, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் அல்லது எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று மீண்டும் மீண்டும் திராவிட கழகங்களுக்கே ஓட்டளிக்கும் மாங்காய் மடையனான குடிமகன் எனக்கு புரியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் சூப்பர் சுப்பு என்று பெயரில் அரசியல்வாதியாக வருவார். தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசின் நிதி மற்றும் மற்ற நன்மை தரும் திட்டங்கள் கிடைப்பதில்லை என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு, "தமிழகம் இந்தியாவின் அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே தூக்கி டெல்லி அருகே வைத்து விட்டால் நமக்கு எல்லா நன்மையையும் கிடைக்கும்" என்பார்.

அந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாமல் ஹாஸ்யம் உள்ளது உங்கள் திட்டங்களில். விழி பிதுங்கும் பிரச்சனைகள் பல இருக்க, அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு. இதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? ஆசியாவின் பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் ஜி.ஹெச் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு தெரியாதா? அங்கு சென்று வைத்தியம் பெற்றுக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு உள்ளதா? மக்கள் மக்கள் என்று உருகும் நீங்கள் ஒரு முறை நேரம் கிடைத்தால் யாருக்கும் சொல்லாமல், யாரையும் அழைத்துச் செல்லாமல் ஜி.ஹெச்சின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்று பாருங்கள். மக்கள் வாழும் நிலை என்று நன்றாகவே புரியும். இப்போது நீங்கள் அறிவித்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனை அதே நிலையை தான் அடையும். ஏற்கனவே எழும்பூரில் உள்ள தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் உட்பட சகல அலங்கோலங்களுக்கும் அரங்கேறுவது நான் அனைவரும் அறிந்ததே.

ஆட்சியேற்ற ஆறு மாதத்தில் ஆறு அமைச்சர்கள் மாற்றம். என்ன அவசியம் ஏற்பட்டது இந்த மாற்றம் கொண்டு வர? எப்போது தனக்கு வேலை போகும் என்ற நினைப்பிலேயே இருக்கும் ஒரு அமைச்சர் தன் வசம் உள்ள துறையின் நிர்வாகத்தை எப்படி சிறப்புடன் செய்ய முடியும்? அப்படி ஒருவர் தகுதியானவர் இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது?

தி.மு.க அரசின் திட்டங்களை ஒழிப்பதும், தி.மு.கவினரை சிறையில் அடைப்பதும் மட்டுமே இந்த ஆறு மாதங்களில் அரசின் சாதனையாக மக்களாகிய எங்கள் கண்களில் தெரிகிறது. ஒரு வேளை வேறு எதாவது நல்ல திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மேலே சொன்ன தி.மு.க விஷயம் அதை மழுங்கடித்துவிட்டது. சென்ற ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் அதை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதுடன் இந்த அரசின் கடமை நிறைவு பெறுகிறது. முழு நேரமும் யாரை கைது செய்யலாம், யார் வீட்டில் சோதனை போடலாம் என்று யோசிப்பதால் என்ன பயன்?

கோடிக்கணக்கில் செலவழித்து மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். பெய்து வரும் மழையின் விளைவாக காலரா, வாந்தி, பேதி என்று நோய்கள் வரிசை கட்ட ஆரம்பிக்குமே, அதை கையாள தமிழக மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா என்று உங்கள் சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டீர்களா? அது சரி, சுகாதாரத் துறை அமைச்சர் யார்?

நீங்கள் தினமும் செல்லும் போயஸ் கார்டன் - தலைமை செயலகம் சாலையை தவிர சென்னை நகரின் மற்ற சாலைகளில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பை பெற்றீர்களா? ஒரு முறை பெரும்பாக்கம் ஆரம்பித்து போயஸ் கார்டன் சென்று பாருங்கள். ஆஹா, என்ன ஒரு அனுபவம் அது? தினம் ரூபாய் 35 சுங்கச்சாவடியில் செலுத்தி அந்த சாலையை பயன்படுத்தும் எங்களை போன்றவர்கள் பாக்கியசாலிகள்.

பெருகி வரும் சென்னை மற்றும் தமிழக போக்குவரத்து நெரிசலை சமாளிக்க என்ன செய்வதாக உத்தேசம்? இன்று எதாவது திட்டம் போட்டால் தான் ஐந்து வருடத்திற்கு பின் அந்த நெரிசலை சமாளிக்க இயலும். சென்னை சுற்றுப்புறங்களில் உங்கள் அல்லக்கைகள் செய்யும் அட்டூழியங்கள் தெரியுமா உங்களுக்கு? தெருவோர வியாபாரிகளிடம் உங்கள் பேரை சொல்லி வசூல் வேட்டை, உங்கள் கட்சிக்கொடியை காரில் மாட்டிக்கொண்டு சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் செல்வது, கவுன்சிலர் போன்ற கட்சியின் கடைநிலை ஆட்கள் ஆடு, மாடுகளை சாலைகளில் அலைய விட்டு போக்குவரத்தை பாதிப்பது, இதை தட்டிக் கேட்பவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது என்று பல.

வெளிநாட்டினர் தினம் வந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட ஓவர்ப்ரிட்ஜ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதை இடித்துவிட்டு உபயோகப்படும் வகையில் ஒன்றை உருவாக்கலாம். அண்ணா நூலகத்தை மூடும் அக்கறையில் ஒரு பத்து சதர்விகிதம் இதற்கெல்லாம் செலவழித்தால் நன்றாக இருக்கும்.

மக்கள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சனைகள் பல உள்ளன. அவை உங்கள் கவனத்திற்கு வர நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மக்களை காப்பேன் என்று சூளுரைப்பது எந்தப் பயனும் தராது.

இப்படிக்கு,
தமிழகம் என்றாவது வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பும் ஒரு சராசரி குடிமகன்

2 comments:

meenakshi said...

தற்பொழுதைய முதல்வருக்கு எனக்கு பெரு மதிப்பும் மரியாதையும்
உண்டு.

இருந்தபோதிலும், தங்களது சில கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்.

தூங்குக தூங்கிற் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

என்பார் வள்ளுவர்.

இன்றைய தமிழகத்தில், குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில், உன்னிப்பாக, மிகவும்
துரிதமாக, அவர்கள் சொல்லதிகாரச் சொல்படி போர்கால அடிப்படையில் கவனிக்கப்பட‌
வேண்டிய ஒன்று சுத்தம், சுகாதாரம்.

நகரத்தின் பெரும் பகுதிகள் சாக்க்டை நீரினாலும், பெரு நாட்களாக அகற்றப்படாத குப்பைகளாலும்
சூழ்ந்து இருக்கிறது.

நமக்கு வேண்டியது சுத்தமான ரோடுகள், குடியிருப்புகளுக்கு சுத்தமான தண்ணீர், மாசுபடாத காற்று.
இவை குறித்து நாம் செயல்படவேண்டியது இன்றைய கட்டாயம். அடுத்தது மின்சாரம், போக்குவரத்து நெரிசலைக்
குறைப்பது, ஆங்காங்கே கட்டட விதிகளைப் புறக்கணித்துவிட்டு, கட்டப்படும், அல்லது கட்டப்பட்டு இருக்கும்
கட்டடங்களை ஒரு முறைப்படுத்துவது, ..

இதையெல்லாம் விடுத்துவிட்டு, மற்ற செயல்கள் இப்பொழுது தேவை தானா ?

சென்னை நகருடன் இணைக்கப்பட்ட புற நகர் பகுதிகளின் சுத்தம், சுகாதாரம், ரோடுகளைச் சுத்தப்படுத்துதல்
இவற்றிற்கு செயல் பட ஆணையிட்டால்,

முதியவர் பலரின் ஆசிகள் இவருக்கு .

மீனாட்சி.
http://Sury-healthiswealth.blogspot.com

Vasu. said...

மீனாக்ஷி,

எனக்கும் முதல்வர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. நீங்கள் சொல்வது போல நாம் கேட்பது அடிப்படை வசதிகள் தான். நம்மூரில் போர்க்கால நடவடிக்கை சராசரி சமயங்களிலேயே தேவைப்படுகிறது. :)

வாசு