Sunday, 1 July 2012

என் ஜன்னலின் வழியே

வைரமுத்து அவர்களின் "என் ஜன்னலின் வழியே" படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் முதல் பதிப்பு வெளி வந்தது 1984ல். சங்கீத சமுத்திரம் என்கிற தலைப்பில் இளையராஜா பற்றி சொல்கிறார்.

"அண்மையில் திரு.இளையராஜாவின் சங்கீத ஒலி கேட்கும் "சலங்கை ஒலி" என் உறக்கத்தில் கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இளையராஜாவின் இசை யாருக்கும் சிக்காத சிகரங்களில் சிம்மாசனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன். என்னடா இது, இந்த ஊமை வாத்தியம் இந்த மனிதனின் உத்தரவுக்கு மட்டும் கட்டுப்பட்டு இதனை உற்சாக மொழிகளைப் பேசுகிறதே!"

இந்த கம்பீரமான இசை வெள்ள்ளத்திற்கு இடையில் வரும் சின்னச் சின்ன மௌனங்களுக்குமல்லவா அர்த்தகனம் வந்து விடுகிறது.

"நாத வினோதங்கள்" என்ற பாடலில் அவர் நிகழ்த்தியிருக்கும் கீத வினோதங்கள் மனதுக்குள் ஒரு பிரபஞ்சப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தவஞானிகள் சொல்லும் அத்வைத நிலையை நான் பாடல் ஆரம்பிக்கும் போதே அடைந்துவிடுகிறேன்.

ஒன்றன் மேல் படரத் துடிக்கும் இரு மனசுகள்.

நெருப்பு கங்குகளை முடிந்து வைத்திருக்கிற பட்டுத் துணி மாதிரி அவர்கள் காதலை மறைக்க முடியவில்லை. மொழியை துணைக்கழைக்காமலேயே அவர்கள் இமைகளின் அசைவுகளாலும், இதழ்களின் நெளிவுகளாலும், அவர்களின் விலாசம் சொல்லும் வெட்க ரேகைகளாலும், தங்களின் பாஷையை பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஓர் இரவில் விரல்களின் எதிர்பாராத ஸ்பரிசத்தில் அதிர்ந்து, மௌனித்துப் போகிறார்கள். பாடல், அந்த மன்மத வினாடிகளில் ஆரம்பமாகிறது.

"மௌனமான நேரம் - இள மனதிலென்ன பாரம்?
மனதின் ஓசைகள், இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்"

பல்லவி அவர்களின் மன உணர்ச்சிகளை சுருக்கிச் செல்கிறது. சரணம் அதற்கு உரை எழுதுகிறது.

"இளமைச் சுமையை மனம்
தாங்கிக் கொள்ளுமோ?
புலம்பும் அலையை கடல்
மூடிக் கொள்ளுமோ?
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
கூதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி."

என்னைப் பொறுத்தவரை இந்த பாடலுக்கு இரு சிறப்புகள் இருக்கின்றன. திரு.இளையராஜா அவர்கள் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்த பிறகு மட்டுமல்ல- சங்கராபரணம் திரு.கே.விஸ்வநாத் அவர்களால் இந்தப் பாடலுக்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு எழுதப்பட்ட பாடல் இது. இந்த பாடலின் தொடக்கத்தில் ஆடம்பரமாக ஆரம்பித்த புல்லாங்குழல் சற்று நேரத்தில் மெல்ல மெல்லத் தேய்ந்து தன்னை குறுக்கிக் கொள்ளும்.

காதலர்கள் உள்ளத்தில் உற்பத்தியான வார்த்தைகள், நாவுக்கு வரும் போது கரைந்து விடுகின்றன என்பதற்கான குறியீடு அது. இளையராஜாவின் கற்பனைக்கு நாம் கைதட்டத் தான் வேண்டும்."

இந்த பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன். "நீ வந்து ஆதரி" என்ற அந்த வரியை ஜானகி அவர்கள் குரலில் விரகதாபத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், "கூடலான மார்கழி" என்று நினைத்திருந்தேன். இப்போது தான் "கூதல்" என்றறிந்தேன். அதென்ன கூதல்? கூதல் என்றால் குளிர் என்று அர்த்தமாம். "கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன்" என்று கூதல் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தை துழாவிய போது படித்தேன்.

இளையராஜா, வைரமுத்து என்ற இரு ஜாம்பவான்களும் இன்னும் பல காலம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். நமக்கு கொடுப்பினை இல்லை.

3 comments:

Gokul said...

வாசு,
ஒரு 2-3 வாரங்களுக்கு முந்தைய ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு சிறுகதையே வந்து இருந்தது, ஒரு சிறுகதை...... வைரமுத்து - இளையராஜா இனையாததை நினைத்து வருந்தி... எழுதியவர் நினைவில்லை...

BTW,2 விஷயங்கள் ,

ஒன்று மௌனமான நேரம் ஒரு அற்புதமான மெலடி..Picturization அபாரம்.

இரண்டு பாடல் வரி பற்றி சற்று கூட நினைவு கொள்ளாத ஒரு குப்பையான தலைமுறையில் வாழ்ந்து வருகிறோம் (Exceptions are always there..)

Vasu. said...

கோகுல்,

நீ சொல்வது முற்றிலும் சரி. ஆனால், நினைவில் வைத்துக்கொள்வது போல் வரும் பாடல்களே இப்போது குறைவு தான். மேலும் இந்த தலைமுறை தமிழே அதிகம் அறியாதது. இவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? என் நண்பன் ஒருவன் சொன்னான், வைரமுத்து என்னமா பிகரை வர்ணிச்சிருக்காரு, "புன்னாக மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்ணை சமைத்து விட்டான்" அப்படின்னு எழுதியிருக்காரு பாத்தியா, சூப்பர் என்றான். அதே பாடலில் அற்புதமான சில வரிகள் உண்டு. "அழகு என்பது ஆண் பாலா பெண் பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது, அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா" போன்ற வரிகள் நமக்கு நினைவுக்கு வருவதில்லை. :)

Gokul said...

கரெக்ட் வாசு, ஆனால் இப்போதும் நல்ல பாட்டுக்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு, ஆனால் சுத்தமா,வார்த்தை,அது அந்த scene context-இல் எப்படி பொருந்தி வருகிறது அப்படின்னு எல்லாம் யாரும் ரசிக்கிறதே இல்லை,In other words ரசிக்கிறவங்க became very minority.

கொஞ்ச வருஷம் முன்னாடி வைரமுத்து அவரது பாடல்களை பற்றி அவரே ஒரு பேட்டி கொடுத்து இருந்தார் I think its in Doordarshan,அதில் மின்சார கனவு படத்தில் வர்ற வெண்ணிலவே பாட்டை பற்றி சொல்லி இருந்தாரு,அதில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் அரும்பும் தருணம் ஆனால் மலர்ந்து விடவில்லை அதில் இருவருக்கும் குழப்பம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக "இது இருளல்ல , இது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் " என்று ஆரம்பித்து மேலும் சில வரிகள் இதே போல் அந்த குழப்பமான மனநிலையை குறித்து சொன்னதாக சொன்னார்.I felt pity on him, இது ஒரு ஹிட் பாடல் , இதை பற்றி வேறு யாரவது சொல்லி இருக்கணும்... உண்மையிலேயே தமிழின் திரை இசை பாடல்கள் எழுதுபவர் பாவம்தான்.

ஒரு மன எழுச்சி தரும் காதல் பாட்டை எழுதுவவர் எவ்வளவு நுண்ணிய ரசனை உடையவராக இருக்க வேண்டும்? அதற்கு உவமையும் , மெட்டிற்கான வார்த்தைகளையும் சேர்த்து எழுத எவ்வளவு கற்பனை வேண்டும் ஒரு Passion வேண்டும் ஆனால் அதெல்லாம் யாருக்காக, இந்த தமிழறிவே இல்லாத, ஒரு Mechanical ரசனை உள்ள மக்களுக்காக.

வார்த்தையை ரசிக்காமல் வெறும் பாட்டை ரசிப்பவர்களே , Shame on you!