Sunday 20 January 2013

டி.எம்.கிருஷ்ணா

என் மகள் படிக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தனி பிரிவொன்று உள்ளது. அந்த அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் ஒரு வாரம் பிரபல கர்நாடக சங்கீத வித்வான்களை அழைத்து கச்சேரிகள் நடத்துவார்கள். அந்த வகையில் நேற்று எனக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர் திரு.டி.எம்.கிருஷ்ணா வந்திருந்தார். மனைவி அதே பள்ளியில் ஆசிரியை என்பதால் அவர் புண்ணியத்தில் முன்வரிசையில் இடம் கிடைத்தது.

ஏதோ வந்தோம் பாடினோம் என்று இல்லாமல் கிருஷ்ணா அங்கிருந்த மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் பற்றி நிறைய கற்றுத் தந்தார். அது கூட தனக்கு தெரிந்ததை சொல்லாமல் மாணவர்களை நிறைய கேள்வி கேட்டு அவர்களுக்கு சுலபமாக புரியும் வகையில் ஆலாபனை, ராகம், நிரவல் பாடுவது ஆகியவை பற்றி விளக்கினார். முதல் பாடலாக ரவிச்சந்திரிகா ராகத்தில் தியாகையர் இயற்றிய "மா கேளரா விசாரமு" எடுத்துக்கொண்டு அதில் கல்பனாஸ்வரங்கள் ஆரம்பிக்கும் முன் நிறுத்திவிட்டு அவர் எப்படி improvise செய்ய போகிறார் என்பதை விவரித்தார். பொதுவாக கச்சேரிகளில் பாடுபவரும் வயலின் வாசிப்பவரும் எப்படி ஸ்வரங்களை exchange செய்து கொள்கின்றனர் என்பதையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் கூறினார்.

அதன் பின் கல்யாணி ராகத்தில் நிரவல் ஒன்றை செய்து காட்டி அப்ப்ளாசை அள்ளினார். "நீ என் சங்கீதத்தை விரும்புவதும் விரும்பாததும் உன் இஷ்டம், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஓரளவு இதை புரிந்துகொண்டு அந்த கருத்துக்கு நீ வர வேண்டும் என்பதே என் கவலை" என்றார். இறுதியாக பாருக்குள்ளே நல்ல நாடு, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, இங்கிலீஷ் நோட்ஸ், மங்களம் என்ற வரிசையில் பாடி முடித்தார்.

1 comment:

Gokul said...

ரவிச்சந்திரிகா அப்படின்னு ஒரு ராகமா?