தமிழ் சினிமா ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எத்தனையோ மாறுதல்களை பார்த்து விட்டது. ஆனால், இன்றும் மாறாமல் இருக்கும் விஷயங்களில் முதன்மையானது "தாய் அல்லது அம்மா சென்டிமெண்ட்". பல தயாரிப்பாளர்கள் இன்றும் இயக்குனர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "படத்துல அம்மா சென்டிமெண்ட் இருக்கா?". இப்படி அம்மா சென்டிமெண்டை நம்பி வாழும் தமிழ் சினிமாவில் அப்பாவிற்காக எடுக்கப்பட்டுள்ள இரண்டாவது படம் "வாரணம் ஆயிரம்". முதல் படம் "தவமாய் தவமிருந்து" என்பது என் அபிப்பிராயம்.
இராணுவத்தில் மேஜராக உள்ள கதாநாயகன் ஒரு முக்கிய பணிக்காக செல்லும் போது தனது தந்தை இறந்த செய்தி கேட்டு அவரை பற்றிய நினைவுகளில் மூழ்குகிறான். சிறுவனாக, இளைஞனாக வெவ்வேறு கால கட்டங்களில் தனது வாழ்கையில் நடந்த நிகழ்வுகளையும் அதன் பின்னணியில் தனது தந்தையையும் நினைவு கூறுகிறான். இது தான் படத்தின் கதை.
கௌதமின் படங்கள் பொதுவாக "நோ நான்சென்ஸ்" தன்மை கொண்டவை. படம் பார்க்கும் பார்வையாளனிடம் ஒரு முதிர்ச்சியை எதிர்பார்க்கிறார் என்று கூட எனக்கு தோன்றும். வாரணம் ஆயிரம் பார்த்த பின் அந்த எண்ணத்தை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன். சூர்யாவின் நடிப்பு அபாரம். கமலுக்கு பிறகு விக்ரம் என்கிறார்கள். அந்த இடத்திற்கு விக்ரம் சூர்யாவுடன் கடுமையாக போட்டியிட வேண்டி இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் பிரமாதம். இனி, கௌதமும் ஹர்ரிசும் இணைய மாட்டார்கள் என்பது வருத்தமான விஷயம்.
படத்தின் குறை என்று நான் நினைப்பது அதன் வேகத்தன்மை. வேகம் என்று இங்கே நான் சொல்வது, பார்வையாளன் ஒரு விஷயத்தை உள்வாங்குவதற்குள் மற்றொன்று வந்து விடுகிறது. உதாரணமாக, சூர்யா கல்லூரி மாணவன் என்று நினைத்து கொண்டு இருக்க, அவர் கம்பெனி ஆரம்பித்து, வீடு கட்டி, காதலில் தோல்வி அடைந்து போதைக்கு அடிமை ஆகிறார். சரி, அவர் போதையில் இருந்து எப்படி மீள்கிறார் என்று புரிவதற்குள் அவர் இராணுவத்தில் மேஜர் ஆகி விடுகிறார். மற்றொரு மைனஸ் பாயிண்ட், சொற்ப நேரமே வரும் சிம்ரன்-சூர்யா கல்லூரி பருவம். இன்னும் சில காட்சிகள் சேர்த்து இருக்கலாம். திவ்யா ஸ்பந்தனா எதற்காக இந்த ரோலை ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. பொதுவாக, படம் பார்த்த பலர் கூறும் மற்றொரு குறை, "படத்தில் பல வசனங்கள் ஆங்கிலத்தில் உள்ளது". இன்றைய கால கட்டத்தில் நாம் சாதாரணமாக பத்து வார்த்தை தமிழில் பேசினால் அதில் நான்கு ஆங்கிலத்தில் உள்ளது. அதனால், அதையெல்லாம் மன்னித்து விடலாம்.
மொத்தத்தில், வாரணம் ஆயிரம் is watchable in parts.
No comments:
Post a Comment