Tuesday, 26 May 2009

கோடை விடுமுறை, ரயில் பயணம்

கோடை விடுமுறை பற்றி சில பதிவுகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. உடனே, தெனாலி கமல் மாதிரி மனதிற்குள்ளேயே வளையம் சுற்றி நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து எனது பள்ளி நாட்களுக்கு சென்றது. பெரும்பாலும் கோடை விடுமுறைக்கு நான் தஞ்சைக்கு சென்று விடுவேன். அங்கு தான் என் பாட்டி(அப்பாவின் அம்மா) இருந்தார். என் தந்தையுடன் பிறந்தவர்கள் எட்டு பேர் என்பதால் பெரியப்பா/சித்தப்பா பிள்ளைகள் என்று குறைந்தது ஒரு பத்து பேர் தஞ்சையில் ஆஜராகிவிடுவோம்.

எங்களை சென்னையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து செல்ல என் பாட்டியும் அத்தையும் சென்னைக்கு வருவார்கள். அப்போது, சென்னையிலிருந்து தஞ்சை செல்ல "சோழன் எக்ஸ்பிரஸ்" என்று ஒரு ரயில் உண்டு. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. காலை 9:00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு தஞ்சை போய் சேரும். அந்த காலத்தில் ரயில்களுக்கு எல்லாம் சம்பந்தப்பட்ட ஊர்காரர்கள் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பார்கள்.

உதாரணமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாயவரம்,கும்பகோணம்,தஞ்சை வழியாக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என்று ஒரு ரயில் உண்டு. என் நினைவு சரி என்றால் அந்த வண்டி எண் 6701. இந்த வண்டிக்கு செல்லப்பெயர் "தனுஷ்கோடி boatmail". இந்த ரயிலை பற்றிய குறிப்பு தில்லான மோகனாம்பாள் கதையில் வரும்(சினிமாவில் அல்ல) என்று நினைக்கிறேன். கொத்தமங்கலம் சுப்பு அழகாக வர்ணித்திருப்பார். இந்த வண்டி நாலு மணிக்கு காலை தஞ்சை வரும் என்றும் அந்த நேரத்திலேயே தஞ்சை ஆனந்தா லாட்ஜில் சுடச்சுட இட்லி மிளகாய் பொடி நல்லெண்ணையோடு கிடைக்கும் என்று எழுதியிருப்பார்.அதே போல் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு பாசெஞ்சர் ரயில் தஞ்சை வழியாக செல்லும். அந்த வண்டியை 110 என்பார்கள். ஏனென்றால் அந்த வண்டி எண் 6110. அதன் உண்மையான பெயர் என்னவென்றே தெரியாது. அதே போல், மேலே நான் சொன்ன சோழன் எக்ஸ்பிரஸ் வண்டிக்கு செல்லப்பெயர் "Day Express". பெயர் காரணம் ஏன் என்று சொல்ல தேவையில்லை.

பாட்டி ஒரு அடுக்கு நிறைய நல்லெண்ணையில் மிளகாய் பொடி போட்டு ஊற வாய்த்த இட்லியையும் அதே போல் இரண்டு அடுக்குகளில் ஒன்றில் புளிசாதமும், மற்றொன்றில் தயிர் சாதமும் எடுத்துக்கொண்டு தான் ரயில் ஏறுவார். புளிசாதத்திற்கு தொட்டுக்கொள்ள வடாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மாங்காய் தொக்கு,மாவடு,புளிமிளகாய் என்று ரெண்டு மூன்று ஐட்டம் இருக்கும்.ரயிலில் விற்கும் எதையும் வாங்கக்கூடாது.சுகாதாரம் மண்ணாங்கட்டி எல்லாம் இல்லை.பாட்டியிடம் காசு இருக்காது.

ரயில் விழுப்புரம் வந்தவுடன் சோத்து மூட்டை திறக்கப்படும். என்ஜின் மாற்ற ரயில் அரை மணி அங்கு நிற்கும். அதற்குள் சாப்பிட்டு ஸ்டேஷனில் இறங்கி கை கழுவ வேண்டும். தண்ணி வேண்டும் என்றால் ஸ்டேஷனில் உள்ள குடிநீர் குழாய்க்கு சென்று பாட்டிலில் பிடித்து கொண்டு வர வேண்டும். இதை யார் செய்வது என்று ஒரு பெரும் போட்டி வரும். கூட வரும் கொஞ்சம் வயதில் பெரிய கசின் யாராவது எங்களை ரெண்டு தட்டு தட்டி உட்கார வைத்துவிட்டு இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். ரயிலில் இருந்து இறங்கி ஏறுவதில் ஒரு குஜால்.

எங்கள் வீடு இருந்தது தஞ்சை மேல வீதியில். தெருவின் பெயர் காமாக்ஷி அம்மன் கோயில் அக்ரஹாரம். மொத்தமே இருபது வீடுகள் தான் இருக்கும். எல்லா வீட்டிலும் எங்களை போலவே விடுமுறைக்கு வரும் குழந்தைகள் உண்டு. இதை தவிர அங்கேயே இருக்கும் பிள்ளைகளும் உண்டு. மொத்தத்தில் ஒரு விளையாட்டு என்றால் நாற்பது முதல் ஐம்பத்து பிள்ளைகள் ஈடுபடுவார்கள். கண்ணாமூச்சி எல்லாம் விளையாட ஆரம்பித்தால் முடியவே முடியாது.

காலை ஏழு மணிக்கு எழுந்தவுடன் நல்ல திக்கான பாலில் காபி. ஏழரை அல்லது எட்டு மணிக்கு தெருவில் இருக்கும் மற்ற வாண்டுகளுடன் திண்ணையின் கொஞ்ச நேரம் அரட்டை கச்சேரி.ஒன்பது மணிக்கு குளியல்.பத்து மணிக்கு இரண்டு அல்லது மூன்று பொரியல், ஒரு கூட்டு, ஒரு கீரை, சாம்பார், ரசம், மோர் என்று ஒரு விருந்து சாப்பாடு. பத்தரை மணிக்கு மீண்டும் வாண்டுகள் விஜயம். அவர்களுடன் அப்படியே சீட்டாட ஆரம்பித்தால் ஒன்றரை மணி வரை போகும். மீண்டும் மதிய உணவாக தயிர் சாதம் ஊறுகாயுடன். இரண்டு மணிக்கு நாலு வீடு தள்ளி இருக்கும் வீட்டில் கேபிள் டிவியில் படம் போடுவார்கள். அதற்கு அனைத்து வாண்டுகளும் ஆஜர். மூன்றரை மணிக்கு தெருவில் வரும் ஐஸ் வண்டிக்காரனிடம் பதினைந்து காசுக்கு பால் ஐஸ். திரும்ப ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து கிணற்றடியில் குளியல். அப்படியே காலாற நடந்து பெரிய கோவிலுக்கு சென்று நந்தி மண்டபத்தில் உட்கார்ந்து காற்று வாங்கிவிட்டு வந்தால் வீட்டில் அடையோ, தோசையோ, சேவையோ, பச்சமாபொடி உப்புமாவோ செய்திருப்பார்கள். அதை ஒரு ரவுண்டு கட்டிவிட்டு ஏழரை மணிக்கு தூக்கம். எட்டரை மணி அந்த தெருவுக்கே நடுஜாமம். மீண்டும் காலை ஏழு மணி...என்ன சுகமான வாழ்கை? அனுபவிக்கும் போது தெரியவில்லை.

இப்படியே ஒரு மாசம் போகும். மீண்டும் செங்கோட்டை பாசஞ்சரில் சோத்து மூட்டை கட்டிக்கொண்டு சென்னை பயணம். ஒரு ஸ்டேஷன் விடாமல் எல்லா இடத்திலும் நிற்கும் செங்கோட்டை பாசஞ்சர். ஆறு மணிக்கு திட்டை, பண்டாரவாடை ஊர்களில் விற்கும் காய்கறிகளும், அதை விற்கும் பெண்களும், மாயவரம் ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் நாசியை துளைக்கும் அந்த பில்டர் காபி, தோசை, சாம்பார் வடை எல்லாம் கலந்த வாசம். அந்த நாளும் வந்திடாதோ?

8 comments:

Gokul said...

வாசு,

சூப்பர் , உண்மையிலேயே சூப்பர், உண்மையில் நான் ஒரு மொக்கை பதிவை போடலாம் என்று எண்ணித்தான் நம்ப blog-ஐ திறந்தேன், உன் பதிவை பார்த்தவுடன் , கொஞ்ச நேரத்திற்கு (நாளைக்கு) இதுவே முதல் பதிவாக இருக்கவேண்டும் என்று எழுதவே தோன்றாமல் விட்டுவிட்டேன்.

நீ சொன்னதில் ஒன்று மிகவும் உண்மை, சந்தோஷமாக இருக்கும் நாட்களில் நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று தெரியவே தெரியாது, மேலும் அவை புயல் வேகத்தில் கடந்து செல்லும்.

Swamy and Friends ஞாபகம் வருகிறது, ஒரே ஒரு சந்தேகம், அப்போது கேபிள் டி.வீ வந்துவிட்டதா?

Vasu. said...

கோகுல்,

நன்றி. 1985-1989 வரை கேபிள் டிவி இருந்ததாக நினைவில்லை. ஆனால், அதற்கு பின் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு லோக்கல் கேபிள் டிவி இருந்தது. இது சன் டிவி வருவதற்கு முன். அந்த லோக்கல் கேபிள் டிவியில் மதியம் புதுப்படம் ஒளிபரப்புவார்கள்.

அந்த கேபிள் டிவி கனக்க்ஷன் இருக்கிற வீடு எங்களை பொறுத்தவரை அப்போது பணக்காரர்கள் வாழும் வீடு. அந்த தெருவில் ஒரு வீட்டில் தான் இருந்தது. அங்கு படம் பார்க்க அந்த தெருவே வரும். கேபிள் டிவி படம் ஒரு பக்கம், அந்த வீட்டு ஓனர் போடுகிற படம் அதை விட ஓவராக இருக்கும். காலை நீட்டிக்கொள்ள கூடாது, படுத்துக்கொண்டு படம் பார்க்க கூடாது, நடுவில் எழுந்து போனால் திரும்ப வரும் போது நம் இடத்தை வேறு யாரவது பிடித்திருப்பார்கள், படம் ஆரம்பித்த உடன் கதவை தாளிட்டு விடுவார்கள். படம் முடிந்த பின் தான் அது திறக்கப்படும். ஓவர் அலும்பல் பண்ணுவார்கள்.

கேபிள் டிவியை விடு. 1990 வரை எங்கள் தஞ்சை இல்லத்தில் கக்கூஸ் கிடையாது. கால் வைத்துக்கொள்ள இரண்டு கல் இருக்கும். அவ்வளவு தான். பீ அள்ளவே ஒரு கூட்டம் இருந்தது. தினம் வீட்டுக்கு வருவார்கள். சத்தியமாக கொடுமையான வாழ்க்கை அவர்களுடையது.அவர்களை எல்லாம் அப்போது அவர்கள் முதுகுக்கு பின் கிண்டல் செய்வோம். இப்போது நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

Mahalakshmi said...

A very nice post...but oru sandhegham...what is that "Pachamapodi Upuma"??? Have never heard of it....

By the way, naama onnu othukanum...namma pasangalukku ippadi oro "Kodai vidumuraiyum, rayil payanamum" kidaikuma??? Sandhegam thaan...

Vasu. said...

Maha, Thanks for the comment. I don't remember how Pachamapodi uppuma is made but my paati was too good at making it.

Ramz said...

wonderful post Vasu..i really liked it..

Vasu. said...

Thanks Ramz

Srinivasan said...

Vasu its really good which resemblance my school holidays too
but i think u forgot about watch muttai,the man who will make a watch with muttai with different design and kamaracttu,sitting on cow, etc its all went like dream.

Gokul said...

இந்த பதிவிற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பக்கத்தில் இருந்து சில வரிகளை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
//
சாப்பாடும் சங்கீதம் போல தான், ரசனை உள்ளவன் தான் அதன் நுட்பங்களை அறிந்து கொள்வான் என்பார்கள். அதுவும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள சங்கீத ரசிகர்கள் தேர்ந்த ரசனைக்காரர்கள். சாப்பாட்டிலும் அப்படியே.

சமஸ் இந்த நூலில் தஞ்சை பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் என்ன உணவு சிறப்பானது. எதனால் அந்த சிறப்பு வந்தது. எங்கிருந்து அந்த உணவு வந்தது என்று ஆதியோடு அந்தமாக சுவைபட கூறுகிறார்.

டிகிரி காபிக்கு பிரசித்தி பெயர் தஞ்சாவூர் காபி பேலஸ், திருவையாறு தெற்குவீதியில் கிடைக்கும் அசோகா, நீடாமங்கலம் மேலராஜவீதியில் கிடைக்கும் பால் திரட்டு. கூத்தாநல்லூர் மௌலான பேக்கரி தம்ரூட், மன்னார்குடி டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மயிலாடுதுறை விடுதிபொங்கல்

திருச்சி ஆதிகுடிகாபிகிளப்பில் கிடைக்குடம் ரவா பொங்கல்,. பட்டணம் பக்கோடா, கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸ் பூரிபாசந்தி, மன்னார்குடி மிலிட்டரிபரோட்டா. திருவானைக்கா பார்த்தசாரதி விலாஸ் ஒரு ஜோடி நெய்தோசை,

திருவாரூர் எஸ்.ஆர்.ஆர். கபே கட்டுசோறு, திருச்சி நியூ மதுரா ஹோட்டல் தலைவாழை இலை சாப்பாடு.மதுரை கோனார்மெஸ் கறிதோசை. மேலசித்திரைவீதி கோபி ஐயங்கார் கடை வெள்ளை அப்பம். விருத்தாசலம் ருசி இனிப்பக தவலை வடை, சிதம்பரம் உடுப்பி கிருஷ்ணவிலாஸ் கொத்சு, நெல்லை இருட்டுகடை அல்வா. பாளையங்கோட்டை தேங்கால்பால் முறுக்கு. //

Refer : http://www.sramakrishnan.com/view.asp?id=268&PS=1