Monday 9 November 2009

கமல்ஹாசன் பிறந்தநாள் - பத்து தீர்மானங்கள்

நவம்பர் ஏழாம் தேதி அன்று தன் ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். பகுத்தறிவாளர்கள் பிறந்தநாள் தீர்மானங்கள் (Resolution) எல்லாம் எடுப்பார்களா என்று நமக்கு தெரியாது.இருந்தாலும், அவருக்காக நாம் பரிந்துரைக்கும் சில தீர்மானங்கள் இதோ:

1. குழப்பமாக மட்டுமே பேசுவேன் என்பதை மாற்றிக்கொள்வேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

2. சந்தானபாரதி, R.S.சிவாஜி இருவருக்கும் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வருங்காலத்தில் ராஜ்கமல் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ஒரு பாத்திரம் வழங்குவேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளலாம்.

3. வையாபுரி, அப்பாஸ் போன்றவர்கள் மிகக் குறைந்த பணம் அல்லது பணமே பெற்றுக்கொள்ளாததால் எல்லா படத்திலும் அவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

4. சுற்றுலா பொருட்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்ல நேர்ந்தால் கூட நாத்திகம் அல்லது பகுத்தறிவு பற்றி பேசியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன் என்று ஒரு தீர்மானம் செய்து கொள்ளலாம்.

5. "கமல் ஐம்பது" விழாவில் ரஜினி என்னை புகழ்ந்ததை போல நானும் பிறரை புகழக் கற்றுக்கொள்வேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

6. எந்த படமாக இருந்தாலும் அதில் மூக்கை நுழைப்பேன் என்ற எனது கொள்கையை தளர்த்திக் கொள்வேன் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளலாம்.

7. "Method Acting" பற்றிய தனது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று தீர்மானிக்கலாம்.

8. நேரம் கிடைக்கும் போது நல்ல கதை அமைந்தால் மேடை நாடகங்களில் நடிப்பேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம். (கமல் போன்றவர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது, நலிந்திருக்கும் அந்த கலைக்கு செய்யும் பெரும் உதவி. மலையாள நடிகர்கள் பலர் மேடை நாடகங்களிலும் நடிக்கிறார்கள்)

9. வார்த்தை ஜாலம் எல்லாம் பிரயோகம் செய்யாமல், அடுத்த தலைமுறை நடிகர்களில் இவர்(கள்) நடிப்பு எனக்கு பிடிக்கிறது என்று மனம் திறந்து பாராட்டி, அவர்(கள்) மேலும் நன்றாக தன்னை மெருகேற்றிக்கொள்ள உதவலாம்.

10.இறுதியாக,வீடு மாற்றும் போது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பேன் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாம்.

2 comments:

Gokul said...

வாசு ,

சூப்பர். இரண்டு விஷயங்களை மட்டும் சேர்த்து கொள்கிறேன்.

இளைய தலைமுறை இயக்கத்தில் (செல்வராகவன் , அமீர், பாலா, போன்றார்) கமல் சண்டை போடாமல் நடிக்க வேண்டும்.

முக்கியமான நடிகர் சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

Vasu. said...

கோகுல்,

இவை இரண்டையுமே நான் யோசித்தேன். ஆனால், நடிகர் சங்க கூட்டங்களில் பலர்(இன்றைய தலைமுறை நடிகர்களையும் சேர்த்து) கலந்து கொள்வதில்லை. அதனால், கமலை மட்டும் குறை சொல்ல முடியாது. கமலின் அடுத்த படம் மிஷ்கின் இயக்கத்தில் என்று என்று கேள்விப்பட்டேன். சண்டை போடாமல் நடிக்கிறாரா என்று பார்க்கலாம்.