Saturday, 23 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஆதங்கங்கள், பாராட்டுக்கள் ,ஐயங்கள்...

போன பதிவில் என்னுடைய சந்தேகங்கள்/கேள்விகளை கேட்ட பின்பும் சில ஆதங்கங்கள், பாராட்டுக்கள் ,ஐயங்கள் மிச்சமிருக்கின்றன .....

படத்தில் ஆரம்பத்தில் சோழர்களை பற்றி பின்னணி குரல் ஒலிக்கும்போது  சோழர்களை சோளர்கள் என்றே ஒலிக்கின்றது, இது ஒருவகையில் சரித்திர படம் , அதனால் இந்த படத்திலாவது ழ என்று ஒழிக்க கூடாதா... சூர்யா கூட "அவ எவ்வளவு அளகுன்னா அவ்வளவு அளகு" என்றே அளைகிறார்.

தமிளை சாரி தமிழை தாய்மொழியாக கொண்ட பெரும்பாலான மக்களால் (நடிகர், பின்னணி குரல் குடுப்பவர் உட்பட ) பேச முடியாத ஒரு வார்த்தை தமிழில் இருப்பது தேவையா? அல்லது அந்த அழகான வார்த்தையை பயன்படுத்த முடியாத அளவு நாம் அவ்வளவு சோம்பேறி கூட்டமா?

இந்த படத்தில் நான் ரசித்த இன்னொரு அம்சம், அந்த சோழர்கள் கூட்டத்தில் ஒரு நொடி ஆடும் அலிகளின் கூட்டம், செல்வா ராகவன் , நீங்கள் அந்த ஒரு நொடிக்காக நிச்சயம் நிறைய படித்திருப்பீர்கள் , excellent.

இந்த படத்தில் நான் ரசித்த மற்றொரு விஷயம், பார்த்திபன் மனைவியாக வரும் கதாபாத்திரம் அதற்கான நடிகை தேர்வு. அவரை ஒரு ராணியாக மிக அழகாக காண்பிக்காமல் ஒரு தமிழ்ப்பெண்ணாக காண்பித்து இருக்கிறார் செல்வராகவன். 12-ஆம் நூற்றாண்டின் பதிபக்தியை அந்த கதாபாத்திரமும் அற்புதமாக வெளிபடுத்துகிறது.

ஆனால் அந்த யதார்த்தத்தை ரீமா சென் விஷயத்தில் காண்பிக்க முடியவில்லை - அந்த பாண்டிய தேச பெண் மிகவும் வெள்ளையாக தமிழுக்கு மிக அன்னியமாக இருக்கிறார் , ஒரு வங்காளி வேறு எப்படி இருப்பார்.

இந்த நிலைக்கு காரணம், தமிழ் பெண்களா, தமிழ் ஆண்களா, தமிழகத்தில் நிலவும் ஆணாதிக்கமா (அப்படி சொல்ல முடியாது , மற்ற துறைகளில், தமிழக பெண்கள் முன்னேறிய இருக்கின்றனர்), தமிழ் பெண்களின் தாழ்வு மனப்பான்மையா, இல்லை தமிழ் ஆண்களின் பிற்போக்கான சிந்தனையா இல்லை தமிழ் ஆண்களின் வெள்ளைத்தோல் வெறியா  தெரியவில்லை.

அது எப்படி யதார்த்தம் பார்க்கும் எந்த இயக்குனரும் வேறு வழி இல்லாமல் வேற்று மாநில பெண்களை கதாநாயகியாக போடும் அவலம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. தமிழ் ஹீரோ தமிழ், தமிழன் என்று சொல்லலாம், நாங்க எல்லாம் லோக்கல் என்று பேசி முன்வரிசை, பின்வரிசை என்று எல்லா வரிசையையும் கவரலாம், ஆனால் பெண்கள் நாங்க எல்லாம் லோகல்பா என்று கருப்பாக இருக்க முடியாது, ஏனெனில் எல்லா லோகல்களுக்கும் கனவு மட்டும் சிவப்பாக இருக்கும். தமிழ் பெண்களுக்கு கனவு கருப்பாக இருக்க வேண்டும் , இல்லை என்றால் அவள் திமிர் பிடித்தவள்.

இந்த படத்தில் நான் கவனித்த மற்றொரு விஷயம் 'குதிரை', இந்த 'சரித்திர' படத்தில் சோழரிடம் 'குதிரைகள்' இல்லை. அதே போல் இறுதியில் பார்த்திபன் பார்வையில் வரும் shadowed  தீவட்டிகள் ஏந்திய மரக்கலமும் சூப்பர்.

ஒரு பேட்டியில் வைரமுத்து சொல்லி இருந்தார் , இப்போது பாடல்கள் கனமாக இல்லை , ஏனெனில் கதைக்கருவோ , கதைக்களமோ சிச்சுவோஷனோ கனமாக இருக்க வேண்டும் , அதை பொறுத்துதான் பாடல் அமையும்.

இந்த படத்தில் ஒரு பாடல்,இந்த பாடலின் situation என்ன?

சுமார் 800 ஆண்டுகளாக சோழ மண்ணை பிரிந்து வாழும் மக்களின் அவலத்தை , அந்த மக்களின் அரசன் பாடுவது.

இவ்வளவு கனமான situation கொடுத்தால்தான் , வைரமுத்து போன்ற கவிஞருக்கு

தாய் தின்ற மண்ணே , ஒரு பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்.............................

நெல்லாடிய நிலமெங்கே , சொல்லாடிய அவைஎங்கே
வில்லாடிய களமெங்கே , கல்லாடியே சிலை எங்கே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது  நாசி

சிலைவழி மேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி ஒட்டி உலர்ந்தது நாவும் ...


போன்ற வரிகள் வரும், வந்து இருக்கிறது.


தமிழில் வந்த முதல் சரித்திர கதை என்று பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவலை சொல்லுவார்கள் (இதை படிப்பவர்கள் தயவு செய்து சாண்டில்யனையும், கல்கியையும் எழுதியதை சரித்திர நாவல் என்று நினைத்துக்கொண்டு இருக்காதிர்கள், பிரபஞ்சனின் கதையையும் படித்து பாருங்கள்..), செல்வ ராகவன் அதே போல் தமிழின் முதல் சரித்திர கதை எடுத்த பெருமையை கொண்டிருப்பார் , ஆனால் அதை நவீன காலத்தோடு சேர்த்ததில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், எதிர்காலத்தில் அவருக்கே உரிய உக்கிரத்தோடும், உழைப்போடும் , உண்மையோடும் எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

செல்வ ராகவன் போன்ற இயக்குனர்கள் காலத்துக்கு முன்பே வந்து விட்டனரோ தெரியவில்லை, அவர் ஒரு lower middle class கதையை எடுத்தாலும் (7G), தற்கால தமிழக அரசியலின் அடிநாதமான பணப்புழக்கதிற்க்கான ரவுடி அமைப்பை பற்றி படம் எடுத்தாலும் (புதுப்பேட்டை) அவரால் மேல்பூச்சு பூசவே முடியவில்லை, கதாநாயகன் அல்லது கதாநாயகி சிறுநீர் கழிக்கின்றனர், காமத்தோடு பெண் மேல் ஆணோ, ஆண் மேல் பெண்ணோ தொடையை தூக்கி போடுகின்றனர், பயத்தில் , காமத்தில் உடல் உதறுகிறது... ஆனால் இதனை தமிழ் மக்கள் தங்கள் வழக்கமான 'குடும்பத்துடன் பார்க்கும் கலாச்சாரத்தில்' வைத்து பார்த்து நெளிகின்றனர் , அதனால் புதுபேட்டையும் பெண்கள் வராததினால் தோல்வியை தழுவியது, ஆ.ஒருவனுக்கும் பெண்கள் கூட்டம் கம்மி என்று சொல்கின்றனர்....

No comments: