Monday 26 April 2010

The Alchemist

பிரேசிலிய எழுத்தாளர் பாலோ கொய்லோ அவர்களின் "The Alchemist" புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதுவரை உலகின் 42 மொழிகளில் இந்த புத்தகம் பிரசுரமாகியுள்ளது. "உங்கள் கனவுகளை தொடருங்கள்" என்பது தான் புத்தகத்தின் முக்கிய கருத்து. அப்படி தொடரும் ஒரு சிறுவனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களை அங்கங்கே கொஞ்சம் தத்துவம் தெளித்து நமக்கு வழங்குகிறார் கொய்லோ. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட சில எண்ணங்களை தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக, சுய பரிசோதனை செய்தல், கனவுகளை தொடர்தல், மனதுடன் பேசுதல் போன்றவற்றை விட சிறப்பாக சொல்லும் புத்தகங்கள் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் உண்டு. உதாரணமாக, பாலகுமாரனின் கற்றுக்கொண்டால் குற்றமில்லை, சுவாமி சுகபோதனந்தவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், அய்யா அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் போன்றவை உடனே நினைவிற்கு வருகின்றன. ஆனால், இந்த புத்தகங்களை பற்றி எத்தனை வெளிநாட்டினருக்கு தெரியும்? வெளிநாட்டை விடுங்கள், நம்ம ஆளுங்க எத்தனை பேருக்கு இந்த புக் எல்லாம் தெரியும்?

இந்தியா பல தத்துவங்களின் பிறப்பிடம். ஆனால், நம்ம புத்தகங்கள் மற்ற மொழிகளில் பிரசுரமாவதே இல்லை. ஏன் இந்த நிலை? தெரியவில்லை. பாலகுமாரன் அவர்களின் பல புத்தகங்கள் "உங்களை அறிவது எப்படி", "வாழ்வின் அர்த்தம்" போன்ற தலைப்புகளில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் அபார தகுதி பெற்றவை. பாலகுமாரன் போன்றவர்களை படித்ததனால் தானோ என்னவோ தெரியவில்லை "The Alchemist" படித்த போது உற்சாகம் பீறிட்டு கொண்டெல்லாம் வரவில்லை. ஆனால், பலரை கேட்ட போது "The Alchemist" தங்கள் வாழ்வை மாற்றியது என்றார்கள். இதை சில பிரபல நடிகர்/நடிகைகள் சொல்ல கூட நான் பேட்டிகளில் கேட்டிருக்கிறேன்.

நல்ல புத்தகங்களை தேடிப் படிக்கும் பலர் நம்மில் உண்டு. நிச்சயம் நம் மொழியின் சிறந்த படைப்புகளை உலகிற்கு அடையாளம் காட்ட நம்மால் முடிந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

நல்ல புத்தகம்.
ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.
பகிர்தலுக்கு நன்றி.