Tuesday, 6 April 2010

ஜெயலலிதாவிற்கு சில யோசனைகள்

2006 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆரம்பித்த தி.மு.க வெற்றி அதன் பின் நடந்த பத்து இடை தேர்தல்களிலும் தொடர்ந்து இப்போது பதினோரவதாக பென்னாகரத்தில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை அதன் கடைநிலை தொண்டனுக்கு நிச்சயமாக இருக்காது. அ.தி.மு.க தலைமையும் பாவம் என்ன செய்யும்? சிறுதாவூர், கொடநாடு என்று சென்று வெற்றி பெறுவதற்கான வழிகளை யோசித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இதற்கிடையே, தமிழினத் தலைவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அனுதாப ஒட்டு முழுவதும் அங்கு சென்று விடும்.அழகிரி "பவரை" தாண்டி அ.தி.மு.கவிற்கு கிடைக்கிற பத்து பதினைந்து தொகுதி கூட அந்த நிலையில் கிடைக்காது. இப்படி ஒரு இக்கட்டான சுழலில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களை தன் பால் ஈர்க்க ஜெயலலிதா என்ன செய்யலாம்? நம்மால் முடிந்த சில யோசனைகள்.

1. தமிழக மக்கள் ஜாதிப் பற்றுடையவர்கள். உதாரணமாக, அமைச்சர் ஆ.ராசா 3G Spectrum ஊழலில் சிக்கிய போது கலைஞர் என்ன செய்தார் என்று நினைவிருக்கிறதா? ராசா "தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்" என்பதால் தானே அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றார். அவ்வளவு தான். யாரும் வாயை திறக்கவே இல்லை. அது போல்,"நான் பிராமண வகுப்பை சேர்ந்த பெண்மணி என்பதால் தானே தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் என்னை தீண்டத்தகாத ஒருவரை போல நடத்துகின்றன? தமிழக மக்களே, இது நியாயமா?" என்று கேட்கலாம்.தமிழகத்தில் ஜாதிக் கலவரம் உருவாக இது ஒரு நல்ல வழி. சரியாக சட்டசபை தேர்தலுக்கு முன் இதை செய்தால், தேர்தல் நிறுத்தப்பட்டு ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படலாம். அதற்கு பின் நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும்.

2. "ஸ்டாலினுக்கு அனுபவம் குறைவு. கலைஞரின் உடல்நலமோ சரியில்லை. இந்த நிலையில் என்னை விட சிறப்பாக யார் தமிழகத்தை நிர்வகிக்க முடியும்? எனவே, தமிழக மக்கள் ஆட்சிப் பொறுப்பை என்னிடம் கொடுக்க வேண்டும். ஸ்டாலின் எப்போது தயார் என்று "நான்" நினைக்கிறேனோ அப்போதே ஆட்சிப் பொறுப்பை அவரிடம் தந்து விடுகிறேன்" என்று சொல்லலாம்.

எம்.ஜி.யார் உடல்நலம் சரியின்றி அமெரிக்கா சென்ற போது, கலைஞர் என்ன சொன்னார்? "ஆட்சியை என்னிடம் கொடுங்கள், எம்.ஜி.யார் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருப்பித் தருகிறேன்" என்றார். அதை போல தான் இதுவும். எதையும் கூர்மையான மதி நுட்பத்துடனும் தொலைநோக்கு பார்வையுடனும் சிந்திக்கும் தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. "ஸ்டாலினுக்கு அனுபவம் வந்தவுடன் ஆட்சியை தருகிறேன் என்கிறாரே, இந்த பெரிய மனது யாருக்கு வரும்?" என்று பாராட்டுக்கள் வேறு குவியும்.

3. "என்னை பொறுத்தவரை அழகிரி தான் தமிழகத்தை ஆள ஸ்டாலினை விட தகுதியானவர். ராமன் இருக்க பரதனுக்கு முடிசூட்ட நினைக்கும் தசரதனை தமிழக மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பலாம். இது ஜாதிக் கலவரத்தை காட்டிலும் உக்கிரமான விளைவுகளை உருவாக்க கூடியது. குறைந்த பட்சம் தமிழகத்தில் ஆயிரம் பேர் மரணம், நூறு பஸ் எரிப்பு போன்றவை நடக்கும். தேர்தல் ரத்தாகும். தேர்தல் மீண்டும் நடக்கும் பட்சத்தில் மக்கள் உயிருக்கு பயந்தாவது அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.

4. ஜெயா டிவியில் "ஆங்கிலம் சிறப்பாக பேசுபவர் கலைஞரா/அழகிரியா/ஸ்டாலினா?" என்று தென் மாவட்டங்களில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். ஸ்டாலின் தான் வெற்றி பெற்றார் என்று அறிவித்த உடனே தென் மாவட்டங்களில் உள்ள ஜெயா டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும். அந்தந்த மாவட்ட தி.மு.க தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சுவரேறி குதித்து உள்ளே வந்து ஆட்களை உதைப்பார்கள். மதுரையில் அழகிரியே கூட பங்கேற்கலாம். இதையெல்லாம் காமெராவில் பதிவு செய்து தேர்தல் வரும் வரை ஒளிபரப்பலாம். அனுதாப ஒட்டு முழுதும் அ.தி.மு.கவிற்கு தான்.

5. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் இலவச டிவியுடன் DVD ப்ளேயர் இலவச இணைப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். மேலும், DVD வாங்க மக்கள் அலையவேண்டாம், அவை ரேஷன் கடைகளில் விற்கப்படும். இரண்டு கிலோ துவரம்பருப்பு வாங்கினால் ஒரு DVD இலவசம், ஒரே சமயத்தில் பத்து கிலோ மற்றும் அதற்கு மேலாக மளிகை சாமான்கள் வாங்குபவர்களுக்கு புதுப்பட டிவிடிக்கள் கொடுக்கப்படும் போன்ற அறிவிப்புகள் நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க அ.தி.மு.கவிற்கு உதவும்.

6. "அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எனக்கு பாராட்டு விழாக்கள் எதுவும் நடத்தப்பட மாட்டாது" என்று அறிவிக்கலாம். இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த ஒரு காரணத்திற்க்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.கவிற்கு ஓட்டளிப்பார்கள்.

1 comment:

Gokul said...

சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் சீன அரசு பீரங்கிகளை ஏவியது , அதன் மூலமே இன்றும் சீனாவில் ஜனநாயகம் தலை தூக்காமல் இருக்கிறது. இந்திய அரசு, ஆயுதம் மூலம் போராடுபவர்களை எதிர்த்து தனது ராணுவத்தை அனுப்ப மறுக்கின்றது, மேலும் தேவை இல்லாத ஒரு வெட்டி பந்தாவோடு இருக்கிறது இந்திய அரசு, " இவர்களை சமாளிக்க தனது ராணுவம் தேவையில்லை, துணை இராணுவமே போதும் என்ற மனோநிலையில் இருக்கிறது," சற்று காலம் கழித்து ஒரு 3000 பேரை பலி கொடுத்த பின்பு ராணுவத்தை அனுப்புவார் சிதம்பரம்.

சத்தீஸ்கர்,ஒரிசா, மற்றும் ஜார்க்கன்ட் மாநில அரசுகளை ஆந்திர அரசோடு ஒப்பிடவே முடியாது. ஆந்திராவில் நக்சலிசம் பொதுவாக குறைந்ததிற்கு அல்லது குறைந்தது போல தோற்றமளிப்பதற்கு காரணம், மக்களின் migration , வெளி மாநிலத்திற்கு அல்லது வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே தெலுங்கான பகுதியில் நக்சலைட் இயக்கம் செல்வாக்கு இழப்பதற்கு காரணம், நாளையே இது மாறவும் கூடும்.

மேலும்,ஜார்க்கன்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் போலீஸ் துறையும் , ஆந்திர போலீஸ் துறையையும் ஒப்பிடுவது முட்டாள்தனமானது.