திரு.M.K.காந்தி அவர்களின் "My Experiments with Truth". இந்த புத்தகத்தை இவ்வளவு நாளாக படிக்காமல் இருந்தோமே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல வேளை இப்போதாவது படிக்கிறோமே என்று தோன்றியது. எத்தனையோ மேல் நாட்டு ஆசிரியர்களின் புத்தககங்களை படிக்கிறோம், ஆனால் நம் மண்ணில் பொதிந்துள்ள வைரங்களை நாம் தேடுவதில்லை. "My Experiments with Truth" அப்படியொரு வைரம்.
"மகாத்மா" என்ற சொல் பலமுறை தன்னை வெட்கமடைய செய்திருக்கிறது என்கிறார் முகவுரையில். மிகுந்த பாலுணர்ச்சி காரணமாக தன் தந்தை இறந்த போது அவருடன் இருக்க முடியாமல் போனதை குறித்து வருந்துகிறார். நெருங்கிய நண்பர் ஒருவர் பெண்கள் பற்றி சொன்னதை நம்பி தன் மனைவியை சந்தேகித்தது, வேசிப் பெண்களை தேடி சென்று திரும்பி வந்தது, தன் ஆணாதிக்க சுபாவம், பயம் காரணமாக பல பொது மேடைகளில் பேச முடியாமல் போனது போன்ற தன் தவறுகளை தான் நிறைய பதிவு செய்திருக்கிறார். இந்த புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் அவர் ஒரு "icon". தன் தவறை எல்லாம் அவர் சொல்ல வேண்டியே அவசியமே இல்லை.
ஒரு பக்கம் இதையெல்லாம் காந்தியே செஞ்சிருக்காரு, அட நம்ம செஞ்ச என்ன என்று தோன்றினாலும், தன் ஒவ்வொரு தவறில் இருந்தும் பாடம் கற்று அவர் மகாத்மா ஆனது தான் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம்.இந்த புத்தகம் படித்த பின் மீண்டும் ஒரு முறை ஜெயமோகனின் காந்தி பற்றிய பதிவுகளை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment