Monday 17 May 2010

எஸ்.ராவின் வலைதளத்திலிருந்து

சென்ற மாதம் கோவை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எதிரில் ஒரு அரசு அதிகாரி பயணம் செய்தார். ரயில் கிளம்பும் வரை அவர் யாரோடோ போனில் பேசியபடியே இருந்தார் ஐம்பது வயதிருக்கும். குடிநீர் வடிகால் துறையில் பணியாற்றுவதாக அறிமுகம் செய்து கொண்டார். பேச்சு சினிமா அரசியல் என்று சுழன்று முடிவில் குடும்ப உறவுகள் பற்றியதாக திரும்பியது.

தனது மகள் திருமணமாகி அமெரிக்கா போனதில் இருந்து தனது இயல்பே மாறிப்போய்விட்டது என்றும் இவ்வளவிற்கும் அவள் என் வீட்டில் இருந்த நாட்களில் அதிகம் அவளோடு பேசியதில்லை என்று சொன்னார்.

எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மகளை திருமணம் செய்து கொடுத்து பிரிய மனதில்லாமல் பக்கத்து ஊரிலே திருமணம் செய்து வைத்து தினமும் ஒரு முறை தன்னை வந்து பார்த்து போகும்படியாக ஏற்பாடு செய்திருந்தார். அது போலவே டால்ஸ்டாயின் கடைசிமகள் தான் அவரது உதவியாளர் போல கடிதங்கள், இலக்கிய பிரதிகள் யாவையும் கூட இருந்து எழுதியவள். மனைவி மீது கோபித்து கொண்ட டால்ஸ்டாய் மகள்கள் மீது காட்டிய நெருக்கம் அளவில்லாதது. ஞானியை போல வாழ்ந்த டால்ஸ்டாய் மகள் விசயத்தில் மட்டும் எளிய விவசாயி போலவே இருந்தார் என்றேன்.

அப்படிதான் இருக்க முடியும் என்றார் அதிகாரி. எனக்கு ஒரே பெண். இரண்டு பையன்கள். என் மகள் சிறுவயதில் இருந்தே அம்மாவோடு தான் நெருக்கமாக இருந்தாள். அவர்களை தாயும் மகளும் என்றே சொல்ல முடியாது. இரட்டை பிள்ளைகள் போல ஒரே ஜாடையில் ஒரே உடல் அமைப்பில் இருப்பார்கள். குரல் கூட ஒன்று போலவே இருக்கும்

ஆனால் திருமணமானமாகி அமெரிக்கா போனபிறகு அவள் தினம் ஒரு முறை என்னோடு மட்டும் தான் பேசுகிறாள். நானும் அவள் அப்படி பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என் இரண்டு பையன்களிடம் இல்லாத ஒரு ஒட்டுதல் அதிக நெருக்கம் மகளிடம் மட்டும் இருக்கிறது. நான் எனது பிள்ளைகளிடமே பேதம் காட்டுகிறேனோ என்று கூட தோன்றுகிறது. ஆனால் மகள் மீது உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு காட்டுவதை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை. என் மனைவி கூட இதை கேலி செய்கிறாள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

எனக்கு உடனடியாக ஷேக்ஸ்பியரின் லியர் அரசன் நாடகம் நினைவு வந்தது. லியர் அரசனுக்கு மூன்று மகள்கள்.அவர்களில் இருவரை திருமணம் செய்து கொடுத்துவிட்டான். மூன்றாம் மகள் திருமண வயதில் இருக்கிறாள். ஒரு நாள் தனது மகள்கள் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.மூவரையும் அழைத்து கேட்கிறான்

முதல் பெண் இந்த உலகிலே உங்களை போல வேறு யாரையும் நான் நேசிக்கவேயில்லை. நீங்கள் தான் எல்லாமே என்கிறாள். அடுத்தவளோ ஒரு படி மேலே போய் நீங்கள் என் தெய்வம் என்கிறாள். மூன்றாம் மகளோ ஒரு அப்பாவை மகள் எவ்வளவு நேசிக்க வேண்டுமோ அவ்வளவு உங்களை நேசிக்கிறேன். நாளை மணமாகி கணவன் வந்தால் என் நேசித்தில் அவனுக்கும் பங்குண்டு என்கிறாள். அது அப்பாவிற்கு பிடித்தமானதாக இல்லை. மகள் மீது கோபபடுகிறாள். மூன்றாம் மகள் தன்னை நேசிக்கவேயில்லை என்று ஆத்திரம் கொண்டு அவளை துரத்த முடிவு செய்கிறார் என்று நீள்கிறது அந்த நாடகம்.

தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது என்றேன்.

அவர் சில நிமசங்கள் அமைதியாகிவிட்டார். பேச்சில்லாமல் பயணம் நீண்டது. பிறகு அவர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டபடியே சொன்னார்

சத்தியமான உண்மை அது. சமீபத்தில் என் மகள் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்திருந்தாள். ஒரு மாத காலம் வீட்டில் இருந்தாள். ஆனால் நான் அவளோடு அதிக பட்சம் பத்து வார்த்தைகளுக்கு மேலே பேச முடியவில்லை. தினமும் அவளை பார்த்து கொண்டேயிருப்பேன். அவளும் என்னை பார்த்து சிரிப்பாள்.

திருமணமாகி சென்ற மகளுடன் பேசும் போது ஏதோ ஒரு சிறிய விலகல் இருக்கிறது. எனக்கு மட்டுமே இருந்த பிரத்யேக உரிமையை நான் இழந்துவிட்டது போலவே நினைக்கிறேன். சொன்னால் சிரிப்பீர்கள். நானும் என் மகளும் மட்டும் தனியே எங்கேயாவது போய்வர வேண்டும் என்று விரும்பினோம். நான் அவளை அழைத்து கொண்டு காரில் பயணம் செய்தேன். காவிரி ஆற்றோரம் உள்ள ஒரு கோவிலை பார்த்து காரை நிறுத்தி இறங்கி நானும் அவளும் இடிந்து போயிருந்த படித்துறையில் உட்கார்ந்து கொண்டோம்.
என் வாழ்நாளில் அது போன்ற நிம்மதியும் சாந்தியும் ஒரு போதும் கிடைத்ததேயில்லை. அவள் வயது கரைந்து போய் சிறுமி போலவே எனக்கு தெரிந்தாள். என் மனைவியோடு எத்தனையோ கோவில்களுக்கு போயிருக்கிறேன். அப்போது கிடைக்காத ஏதோவொரு உணர்வு மகளோடு தனியே போகையில் கிடைத்தது.

ஊருக்கு கிளம்பும் நாளில் வழி அனுப்ப போகும் வரை இயல்பாக இருந்தேன். வீடு திரும்பி வந்த பிறகு கதவை மூடிக் கொண்டு அழுதேன். இவ்வளவிற்கும் நான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவனில்லை. என் மகள் விசயத்தில் நான் அப்படி என்னால் இருக்க முடியவில்லை. அவளை நான் நேசிக்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாதபடி நேசிக்கிறேன். அது அவளுக்கும் புரிகிறது. நான் இயல்பாக தான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்று கேட்டார்

என் அப்பாவும் உங்களை போல தானிருக்கிறார். எங்கோ தொலைவில் வாழும் மகளின் முணுமுணுக்கும் குரல் கூட அப்பாவிற்கு கேட்டுவிடுகிறது போலும். துடித்து போய் மகளை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள் என்று சொல்லி சிரித்தேன். அவரும் கூட சேர்ந்து சிரித்தார்.

லியர் அரசன் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டேயிருக்கிறான் . என் முன்னே ஐம்பது வயதில் அரசு பணியாற்றும் ஒரு லியர் அரசன் அமர்ந்திருப்பதை பார்த்து கொண்டேயிருந்தேன் பிறகு இருவரும் உறங்க சென்றுவிட்டோம். அவர் வழியில் இறங்கி கொண்டுவிட்டார் போலும். இருக்கை காலியாக இருந்தது.

காலையில் எழுந்து ரயிலை விட்டு இறங்கி அறைக்கு வந்து குளித்து சாப்பிட்டு எனது அன்றாட பணிகளுக்குள் சென்ற போதும் அவரது உணர்ச்சிமயமான சொற்கள் என் கூடவே வந்து கொண்டிருந்தது.

உலகில் ஒவ்வொரு அப்பாவும் தன் பிள்ளைகள் பற்றிய எழுதப்படாத நீண்ட கதை ஒன்றை தனக்குள்ளாக சுமந்து கொண்டுதானிருக்கிறார் போலும். நான் அதன் ஒருபக்கத்தை படித்திருக்கிறேன் . அவ்வளவே.

நன்றி: www.sramakrishnan.com

1 comment:

karges said...

லியர் கதையை பற்றி சொல்லுங்கள்...