ஒரு திருமணத்திற்காக கடந்த வார இறுதியில் மதுரை சென்றிருந்தேன். திருமண முஹுர்த்தம் காலை 10:30 மணிக்கு என்பதால் மீனாட்சி அம்மனை தரிசிப்போம் என்று சென்றேன். கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பூ கடைக்காரரிடம் சென்று "இங்கு செருப்பு விடலாமா?" என்றேன். "அர்ச்சனை தட்டு வாங்கிட்டு விடுங்க" என்றார். "தட்டு எல்லாம் வேண்டாம் பத்து ரூபாய்க்கு பூ மட்டும் கொடுங்க" என்று சொல்லி செருப்பை விட்டு சென்றேன்.
திரும்பி வந்து பார்த்த போது செருப்பை காணவில்லை. கடைகாரரிடம் கேட்டதற்கு, "நான் பார்க்கவில்லையே" என்றார். சரி விடுங்க, நான் புதுசு வாங்கிக்கறேன் என்று சொல்லி கிளம்பியபோது, "அந்த மீனாட்சி அம்மன் போட்டோ தொங்குதில்ல, அங்க போய் கேளுங்க, செருப்பு இருக்கும்" என்றார். இது என்னடா வம்பு என்று அங்கு சென்ற கேட்ட போது, கடையின் உட்பகுதியில் இருந்து ஒரு கோணி முழுக்க இருந்த செருப்புகளை கொட்டிவிட்டு "இதுல உங்க செருப்பு எதுன்னு பாத்து எடுத்துக்குங்க" என்றார் அந்த கடைக்காரர்.
என்ன கேட்பது என்று தெரியாமல் செருப்பை எடுத்துக்கொண்டு கிளம்பிய போது, "டீ சாப்பிட அஞ்சு ரூபாய் கொடுத்துட்டு செருப்பை எடுத்துக்குங்க" என்றார். "ஏங்க, நான் அந்த கடையில விட்ட செருப்பை நீங்க இங்க எடுத்துட்டு வந்து போட்டுட்டு என் கிட்ட அஞ்சு ருபாய் கேக்கறீங்க, என்னங்க நியாயம் இது?" என்றேன். "அந்த மாதிரி கண்ட எடத்துல எல்லாம் விட கூடாது. போலீஸ்காரங்க எடுத்துட்டு போய்டுவாங்க, அதுனால தான் நாங்க பத்திரமா கொண்டு வந்து இங்க வெக்கறோம். அதுக்கு தான் அஞ்சு ரூபாய்" என்றார். எனக்கு அஞ்சு ரூபாய் கூட பெரிதாக தெரியவில்லை, போலீஸ்காரங்க செருப்பை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று சொன்னது தான் கொஞ்சம் ஓவராக இருந்தது. "தினுசு தினுசா கொள்ளை அடிக்கறாங்களே ஐயா, வீட்ல ஒக்காந்து யோசிப்பாங்களோ" என்று வடிவேலு பாணியில் புலம்பியபடி நடையைக் கட்டினேன்.
சரி, இப்படி நூதன கொள்ளை ஒரு பக்கம் என்றால் மதுரை ஆட்டோகாரர்கள் அவர்களின் சென்னை பங்காளிகளை மிஞ்சி விடுவார்கள் போலும். மதுரை சந்திப்பிலிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு(ஒன்றிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்) நாற்பது ரூபாய். ஒரு இளநி இருபது ரூபாய், கரும்புச்சாறு பத்து ரூபாய் என்று எல்லாமே தடாலடி விலை. இதெல்லாம் கூட பரவாயில்லை, நம்மூரில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் பன்னீர் சோடா கூட அங்கு எட்டு ரூபாய். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியிருந்த இடத்தில் அமைந்த கடைகள் என்பதால் இந்த விலையா அல்லது மதுரை முழுவதுமே இப்படித்தானா என்று தெரியவில்லை. மதுரைவாசிகள் யாராவது கொஞ்சம் சொல்லுங்கள்.
2 comments:
Not all the place in madurai. only surrounding temple place.
makdns.blogspot.com
Thanks for the comment
Post a Comment