வேளச்சேரியில் உள்ள McDonalds உணவகத்திற்கு சென்றிருந்தேன். "Veg Burger and Fries" வேண்டும் என்றேன். கவுன்டரில் இருந்த பெண்மணி ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். அதில் "சீஸ்" என்ற வார்த்தை மட்டுமே எனக்கு புரிந்தது. மீண்டும் "Veg Burger" என்றேன். மீண்டும் அவர் பதிலுக்கு ஏதோ சொல்ல அதிலும் சீஸ் மட்டுமே புரிந்ததால் "எஸ்" என்றேன். பில்லை பார்த்த போது தான் அவர் எக்ஸ்ட்ரா சீஸ் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதற்கு இருபது ரூபாய் பில்லில் சேர்த்திருந்தனர்.
என்னிடம் பேசிய அந்த பெண் தமிழர். நான் தமிழில் தான் அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவர் ஆங்கிலத்தில் பதில் பேசியதால் நான் வேறு வழியின்றி ஆங்கிலத்தில் பேசினேன். McDonalds போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் குரல் பயிற்சி, உச்சரிப்பு பயிற்சி போன்றவற்றை அளிக்கின்றன. அது அங்கு வரும் வெளிநாட்டினருக்காக. உள்ளூர்வாசிகளிடம் ஆங்கிலம் எதற்கு? போதாகுறைக்கு அந்த பயிற்சி எல்லாம் எடுத்தும் கூட அவர் சொன்ன அந்த எக்ஸ்ட்ரா சீஸ் எனக்கு புரியவே இல்லை. என்னைப் போன்ற accent புரியாத ஜென்மங்களை எல்லாம் கொஞ்சம் பெரிய மனதுடன் மன்னித்து தமிழில் பேசலாமே?
ஒரு முறை ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் உள்ள McDonalds சென்ற போது அவர்கள் ஜெர்மன் மொழி மட்டுமே பேசினர். மிக குறைந்த ஆங்கில அறிவே இருந்தது. என் முறை வந்த போது ஆங்கிலம் சுமாராக அறிந்த ஒருவரை பேச அழைத்தனர். எனக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. " Burger with no meat" என்று மட்டுமே சொன்னேன். ஆனால், வேளச்சேரி சீதாராமன் நகர் McDonalds உணவகத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு இருபது ரூபாய் விரயம்.
பின்குறிப்பு: வேளச்சேரி McDonalds செல்லும் அன்பர்கள் கவனத்திற்கு.டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் இவர்கள் வாங்குவதில்லை.பணம் மட்டும் தான்.என்னிடம் போதிய அளவு பணம் வேறு இல்லை.பின்னர் மனைவியிடம் இருந்து வாங்கிக் கொடுத்தேன்.
No comments:
Post a Comment