Thursday 5 August 2010

ப்ளாஷ்பாக் - 1

இன்று வரும் இளைஞர்களை போல் பொறியியல் முடித்துவிட்டு இந்த துறையில்(கணினி) நான் சேரவில்லை. நான் படித்தது வணிகவியல். என்னோடு படித்தவர்கள் CA, MBA, ICWA, ACS என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்த போது நான் கலைத்தாயிடம் ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தேன். "இத்தனை வருஷம் என்ன எப்படியோ காப்பாத்திட்ட. இனிமே என்னால முடியாது. இவ்வளவு வருஷம் என் கூட இருந்ததுக்கு நன்றி" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டேன். என்னை மாதிரியே சிந்தித்த என் நண்பர்கள் சிலருடன் பொழுதை கழிக்க ஆரம்பித்தேன். என்ன வேலைக்கு போகலாம் என்று யோசித்து சேல்ஸ் தான் எங்களுக்கு சரியாக வரும் என்று தீர்மானம் செய்தோம். அந்த தொழிலில் நிறைய ஊர் சுற்றலாம் என்பதால் அதை தேர்ந்தெடுத்தோம்.

வாரம் தவறாமல் நாளிதழ்களை பார்த்து அதில் எங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தோம். ஒரு வழியாக சென்னை அண்ணாநகரில் இருந்த ஒரு மருந்து நிறுவனம், விற்பனை பிரதிநிதி வேலைக்கு என்னையும் என் நண்பனையும் நேர்முக தேர்வுக்கு அழைத்தது. உலக அனுபவம் கொஞ்சம் கூட இல்லாததால் எங்களை மட்டும் தான் அவர்கள் அழைத்திருப்பார்கள் என்று நினைத்து ஷு கூட அணியாமல் சென்ற எங்களுக்கு அங்கு கண்ட காட்சி பீதியளித்தது. "காதலுக்கு மரியாதை" விஜய் ரேஞ்சுக்கு வந்திருந்தனர் பலர். சிலரிடம் பேசிய போது அவர்கள் B.Pharm படித்தவர்கள் என்று தெரிந்தது. எப்படியும் வேலை கிடைக்க போவதில்லை, இருந்தாலும் பஸ் காசு செலவு செய்து வந்துவிட்டோம், இருந்து பார்த்து விட்டு போகலாம் என்றான் என் நண்பன்.

காலை பத்து மணிக்கு வந்த எங்களை ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு அழைத்தனர். எதற்காக எங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனால் பத்து நாள் பயிற்சி உள்ளதாகவும் அதற்கு நாங்கள் தகுதி பெற்று விட்டதாகவும் கூறி மறு நாள் வரும்படி சொல்லி அனுப்பினார்கள்.

அந்த நிறுவனம் தயாரித்த மருந்தின் பெயர் "சேபெக்ஸ்". அதை மருத்துவர்களிடமும் மருந்து கடைகளிலும் சென்று அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிப்பதே நிறுவனத்தின் குறிக்கோள். நாள் முழுதும் வேலையில் மூழ்கியிருக்கும் மருத்துவர்கள் விற்பனை பிரதிநிதிகளை பார்க்க இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்குவார்கள். அந்த இரண்டு நிமிடத்தில் மருந்தின் பெயர் மருத்துவரின் மனதில் நிற்கும்படி செய்வதே விற்பனை பிரதிநிதியின் வேலை. அதற்குத்தான் பயிற்சி. குரல் பயிற்சி, மருந்தின் பெயரை உச்சரிக்க வேண்டிய விதம் போன்றவை பயிற்சியின் போது கற்றுத் தரப்படும்.

இந்த இடத்தில் நிறுவனத்தை பற்றி கொஞ்சம் கூற வேண்டும். அது ஒரு தனி நபர் நடத்திய நிறுவனம். பல ஆண்டுகளாக அந்த துறையில் இருந்து அவர் அந்த மருந்தை கண்டுபிடித்திருந்தார். பயிற்சி முடியும் நாள் வரை நாங்கள் அவரை சந்திக்கவில்லை. பயிற்சின் கடைசி நாளன்று அவர் வருவாரென்றும் அவரை மருத்துவராக கருதி நாங்கள் பயின்றதை செய்து காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு எங்களை எந்தெந்த ஊரில் விற்பனை பிரதிநிதிகளாக நியமிப்பது என்று அவர் முடிவு செய்வார் என்றார்கள். ஒரு வழியாக பயிற்சியும் முடிந்தது. பத்து நாளைக்கு பிறகும் சிலர் "சேபெக்சை" "சபக்ஸ்" என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

நிறுவனத்தின் உரிமையாளர் எங்களை சோதிக்க பயிற்சியின் இறுதி நாள் வந்தார். ஆறடி உயரத்தில் கருப்பாக இருந்தார். ஒரு வட்ட வடிவ மேஜையில் நாங்கள் சுற்றி அமர்ந்திருக்க அவர் நடுவில் எங்கள் அனைவரையும் பார்க்கும் படியான ஒரு கோணத்தில் அமர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் சரளமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு எங்களை பற்றி கேட்டுக் கொண்டார். எங்களில் ஒருவரை அவரே தேர்வு செய்து இவர் என்னை மருத்துவராக பாவித்து நம் மருந்தை பற்றி ஒரு விற்பனை பிரதிநிதி போல பேசட்டும் என்றார்.

முதலில் பேச ஆரம்பித்த அந்த நண்பர், சபக்ஸ் என்ற உடனே, நம்ம முதலாளி, "டேய் பு.மவனே, பேரை ஒழுங்க சொல்லுடா, பத்து நாளா என்ன புடுங்கின என்றார்". எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கி வாரிப் போட்டது. அறையில் இருந்த அனைவர் முகத்திலும் பயம் அப்பிக் கொண்டது. முதல் நபர் வாங்கிய திட்டில் அடுத்த நபரும் பயந்து உளறத் தொடங்க, நிறுவனர் அவரை கொஞ்சம் சாந்தப்படுத்தும் விதம், "ஏன் பயப்படற, எந்த ஊரு உனக்கு, அப்பா என்ன செய்யறாரு என்றார்?". அவரும் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி, "அப்பாக்கு எண்ணை விக்கறது தான் தொழில்" என்றார். "அப்போ அந்த மயிரையே புடுங்க வேண்டியது தான, ஏன்டா இங்க வந்து என் உசிர வாங்குற" என்று பாய்ந்தார்.

ஏற்கனவே கொஞ்சம் கோபம் அதிகம் உள்ள என் நண்பன் என்னிடம், "ஒ!!!, நம்மள எதாவது சொன்னான், மூஞ்சிலே மங்கேர் மங்கேர்னு ரெண்டு குத்து விடறோம்.சாயங்காலமே அவனை குடும்பத்தோட தூக்கறோம் மச்சான்" என்றான். எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ஒரு வழியாக எங்கள் முறை வந்த போது தொழிலதிபர் சோர்ந்து போய் இருந்தார்.
நானும் என் நண்பனும் சுமாராக எதோ பேசியதால் இருவரும் தேர்வானோம். சென்னையில் இருப்போம் என்று நினைத்த எங்களை தஞ்சைக்கும் மதுரைக்கும் போக சொன்னதால் அந்த வாய்ப்பை புறக்கணித்தோம். அதன் பின் கணினி கற்று இந்த துறைக்கு வந்ததெல்லாம் பெரிய கதை. இந்த பத்து வருடத்தில் எத்தனையோ நிறுவனங்கள், நேர்முக தேர்வுகள். ஆனால், மருந்து நிறுவன அனுபவத்தை மறக்கவே முடியாது.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை

Vasu. said...

நன்றி ராம்ஜி

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு.