Sunday 13 February 2011

ராஜாதிராஜ சோழன்

சோழ சக்கரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் பற்றி அறிந்தவர்கள் அவருக்கு வாரிசான ராஜாதிராஜனை பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாம் அனைவரும் ராஜராஜ சோழன் --> ராஜேந்திர சோழன் , அதற்கு பிறகு குலோத்துங்க சோழன் என்று தாவி விடுகிறோம். உண்மையில் ராஜேந்திர சோழனுடைய மகன் ராஜாதிராஜ சோழன் , நிகரற்ற போர்வீரர், தன்னுடைய பெரிய பாட்டனார் ஆதித்த கரிகாலன் போலவே அகால மரணம் அடைந்தவர்  (ஆனால் பாட்டனார் போல சதியால் இல்லாமல் , போர்களத்தில் வீரமரணம் அடைந்தவர்).

ராஜ ராஜன் காலத்திலேயே
ராஜேந்திர சோழர், முக்கிய பொறுப்புகளை ஏற்று மாதண்ட நாயகராக விளங்கியது போலவே , ராஜேந்திரன் காலத்தில் ராஜாதி ராஜனும் மாதண்ட நாயகனாக விளங்கினார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசன் விக்ரமபாஹு, பாண்டிய இளவரசன் விக்கிரம பாண்டியன் மற்றும் வட இந்திய (கன்னோஜின்) அரசன் ஜகத்பாலன் ஆகியோரை அழித்தார்.

இவரின் முக்கிய பங்கு , சோழர்களின் முக்கிய பரம்பரை எதிரிகளான மேலை (கல்யாணி) சாளுக்கியருடனான போர்களே. கி.பி.1046 ஆண்டில் கல்யாணி சாளுக்கியர் , கீழை (வேங்கி) சாளுக்கியரை மேல் ஆதிக்கம் கொள்வதை தடுக்க , பெரும் படையுடன் கிளம்பி கிருஷ்ணா நதிக்கரையில் (கடலோர ஆந்திரமாக இருக்கலாம்) தண்னடா என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி பெற்று, சாளுக்கியரின் கோட்டையை தீக்கிரையாக்கினார்.

ஆனால் ராஜாதிராஜனின் மிகப்பெரிய (போர்வீரனாக) சாதனை மேலை சாளுக்கியரை தோற்கடித்து அவர்களின் தலைநகரமான கல்யானியையே (தற்போது பசவ கல்யான் என்ற சிற்றூராக ஹைதராபாதிற்கு அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் இருக்கிறது) சூறையாடி , தீக்கிரையாக்கி "விஜயராஜேந்திரா"(கவனிக்கவும் விஜய.டி.ராஜேந்திரா அல்ல) என்ற பட்டம் பெற்றார்.

இவர் கல்யாணி சாளுக்கியர் உடனான கொப்பல் (தற்போது கொப்பலா) என்ற இடத்தில் நடந்த போரில் (கி.பி 1053-1054) வீரமரணம் அடைந்தார். இவரை தொடர்ந்து ராஜகேசரி  ராஜேந்திர சோழன் (II) அரச வாரிசு ஆனார்.

No comments: