Saturday, 9 April 2011

ரலேகன் சித்தி

ரலேகன் சித்தி என்ற அந்த கிராமத்தை மது ஆக்கிரமித்திருந்தது. மதுவை ஒழித்தால் அன்றி முன்னேற்றம் ஏற்படாது என்று அந்த மனிதருக்கு புரிந்தது.மக்கள் தெய்வத்திற்கு பயப்படுவார்கள் என்பதால் அவர்களை கோவிலில் ஒருங்கிணைத்து "மதுவை தீண்டமாட்டோம்" என்று சபதம் ஏற்க செய்தார். சாராய விற்பனை செய்த முப்பது கடைகள் மூடப்பட்டன."விற்றே தீருவோம், முடிந்ததை பார்" என்று சூளுரைத்த சாராய வியாபாரிகள் சிலரின் கடைகள் அந்த கிராமத்து இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனால், இதையும் மீறி கிராம மக்கள் சிலர், அக்கம் பக்கம் இருந்த ஊர்களில் இருந்து மது வாங்கி அருந்தினர். அப்படி செய்த பனிரெண்டு பேரை கிராம மக்கள் ஊர் நடுவே கம்பத்தில் கட்டி வைத்து நையப் புடைத்தனர். அப்போது அந்த மனிதர் சொன்னார், "ஒரு தாய் தன் குழந்தை உடல் நலம் குன்றி திணறும் வேளையில் அதற்கு கசப்பான மருந்தை தருகிறாள். குழந்தைக்கு மருந்து பிடிக்காது என்ற போதிலும் அந்த குழந்தையின் நலம் கருதியே மருந்து திணிக்கப்படுகிறது. இந்த பனிரெண்டு பேருக்கு கொடுத்த தண்டனை அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும்.

அய்யா கிசன் பாபத் பாபுராவ் ஹசாரே அவர்களே, காந்தியவாதியாக இருந்த போதிலும் "ரௌத்திரம் பழக" வேண்டிய சூழ்நிலை வந்த போது அதை செய்தீர்கள். இன்று அப்படிப்பட்ட மருந்தே இந்த தேசத்திற்கு தேவைப்படுகிறது. வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற காந்தியம் உதவியது. நம்மவர்களிடம் நம்மை காத்துக்கொள்ள காந்தியம் உதவுமா என்று தெரியவில்லை. உங்கள் சித்தாந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments: