Saturday 6 August 2011

புறநகர் ரயில் பயணம்

அலுவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் கிண்டி வரை செல்ல வேண்டி இருந்தது. காரை எடுத்து செல்லலாம் என்றால் மேடவாக்கத்தில் டிராபிக் ஜாம். சரியென்று காரை வீட்டில் பார்க் செய்துவிட்டு பஸ் பிடித்து தாம்பரம் ரயில்நிலையம் சென்றேன். லேப்டாப் எல்லாம் தோளில் வைத்துக்கொண்டு தடம் எண் T51 ஏறிய என்னை பேருந்தே விநோதமாக பார்த்தது. எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது. நீ என்ன பெரிய மன்மதனா என்று பின்னூட்டம் எல்லாம் போடக் கூடாது. அது ரேஞ்சுக்கு நான் சுமாராக இருந்தேன்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க நின்ற கூட்டத்தை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. ஒரு வழியாக பத்து நிமிடம் வரிசையில் நின்று கவுண்டர் அருகே சென்றவுடன் "இந்த கூட்டம் தானே ரயிலிலும் வரும், பேசாமல் முதல் வகுப்பில் செல்வோம், அதில் கூட்ட நெரிசல் இருக்காது" என்றெண்ணி, எழுபத்தாறு ரூபாய் கொடுத்து தாம்பரம்-கிண்டி தடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். கவனிக்கவும், இரண்டாம் வகுப்பு தாம்பரம்-கிண்டி பயணச்சீட்டு ஆறே ரூபாய்.

மூன்று வருடங்கள் கல்லூரி முடித்த பின் புறநகர் ரயில் பயணம் அரிதாயிற்று. வெகு நாட்களுக்கு பின் இந்த பயணம். முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன். முதல் வகுப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெண்டார்ஸ் பெட்டி. இன்னொரு புறம் பெண்கள் பெட்டி. ஒன்றரை வயது கைக்குழந்தை கூட எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் முதல் வகுப்பில் குதித்து டிக்கெட் பரிசோதகர் வருவதை பார்த்தவுடன் மீண்டும் தன் பெட்டிக்கே செல்லலாம்.அப்படியொரு வசதி.முதல் வகுப்புக்கு என்ன சிறப்பு வசதி செய்யலாம் என்று யோசித்து முடிவாக முன்னால் பெண்கள் பெட்டியாவது வைத்து கண்களை குளிர்விக்கலாம் என்பது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் எண்ணம் போலும்.

என் வரிசையில் ஜன்னலோரம் இருந்தவர் "பொன்னியின் செல்வன்" படித்துக்கொண்டிருந்தார். சானடோரியத்தில் கொஞ்சம் கூட்டம் ஏறியது. நகர்ப்புற கணினி அலுவலகங்களில் பணியில் உள்ள சிலர் தங்கள் மடிக்கணினி சகிதம் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்து காதில் ஐபாட் பொருத்திக் கொண்டு மடிக்கணினியை திறந்து தங்கள் உலகத்தில் ஆழ்ந்தனர். பத்து வருடம் முன் முதல் வகுப்பில் இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது. இவர்கள் எல்லாம் அமெரிக்க ரிடர்னாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். Sanjose-Sanfrancisco, Fremont போன்ற வழித்தடங்களில் பெரும்பாலானோர் இப்படி பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த பாதிப்பு போலும்.கக்கூசில் உட்கார்ந்தால் கூட ஐபாடுடன் அமர்ந்தால் தான் இப்போது பெருமை. ஔவை இன்று இருந்தால்,"ஐபாட் இல்லா ஊரில் ஐந்து நிமிடம் கூட இருக்காதே" என்று புது ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்.

ரயில்வே துறையின் கடைநிலை ஊழியருக்கு கூட இந்த முதல் வகுப்பு பிரயாண சலுகை உண்டு போலும். கிரோம்பேட்டை(ஆம், அப்படி தான் பெயர் பலகையில் இருந்தது) ரயில் நிலையத்தில் கடப்பாரை, ஒயர், சிமெண்ட் பலகை என்று சகலத்தையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு ஒரு கூட்டம்.முதல் வகுப்பிற்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது.

கிரோம்பேட்டை மாமா ஒருவர், பொன்னியின் செல்வனை பார்த்து, "இந்த ஜெனரேஷன் இதெல்லாம் கூட படிக்கறதா, பேஷ்" என்றார். ஜன்னலோர சீட்டு வாய் முழுக்க பல்லாக,"டமில் மேல ரொம்ப லவ். எங்க டாடி படிப்பாங்க. அந்த புக் கிழிஞ்சு போச்சு, புது எடிஷன் வாங்கி படிக்கிறேன் சார். பாருங்க, அட்டை படமெல்லாம் கலர்புல்லா இருக்கு. எப்படியும் ஒரு ஒன் இயர்குள்ள படிச்சுடுவேன். வேலை ரொம்ப ஜாஸ்தி, அதான்." என்றது. மாமா மீண்டும், "நீங்க எல்லாம் தமிழ் படிக்கறதே சந்தோஷம், என் புள்ள தமிழ் படிக்கறதே இல்லை, இங்கிலீஷ் புக்ஸ் தான். ரொம்ப வருத்தமா இருக்கு" என்று சந்தில் சிந்து பாடிற்று.

"ரூபாய்க்கு ரெண்டு கொய்யப்பழம், சீப்பான பூவன் பழம்மா டசன் பத்து ருபாய், மல்லி மொழம் அஞ்சு ரூபாம்மா, சார், சீசன் டிக்கெட், ரேஷன் கார்டு, பால் கார்டு கவர் எல்லாம் சேர்த்து ஒரே கவர் பத்து ரூபாய், வேர்கல்லை வேர்கல்லை " என்ற குரல்கள், "மல்லிகை முல்லை, பொன்மணி கிள்ளை", "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே", "அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ" போன்ற பாடல்களை பாடும் கண் தெரியாத அதே பிச்சைக்காரர், "இந்தியாவோட முதல் பிரதமர் யார் தெரியுமா" என்று ஆரம்பித்து இன்றைய பிரதமர் வரை சொல்லும் குடிகார அறிவாளி என்று நான் கல்லூரி வாழ்க்கையில் பார்த்த அனைவருமே இந்த புறநகர் ரயிலை நம்பி தான் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை கிரோம்பேட்டை ஆரம்பித்து கிண்டி வரை கண்டேன்.

8 comments:

சாந்தி மாரியப்பன் said...

வெவ்வேறு வகை மனிதர்கள்.. வெவ்வேறு அனுபவங்கள் புறநகர் ரயில்களில்..

Gokul said...

//எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது//

வாசு நீ என்ன பெரிய மன்மதனா...?

சாரி வாசு , என்னால போடாம இருக்க முடியலை...

முதல் வகுப்பு எழுபத்தாறு ரூபாயா? இதுக்கு ஏ சி கூட இல்லாம .. நியாயமா பார்த்தா ஏ.சி / பாத்ரூம் எல்லாம் இருக்கணும், தனி டிக்கெட் பரிசோதகர் , தனி போலீஸ் உட்பட...

Vasu. said...

கோகுல், இனிக்கு தேதில ஒரு பொண்ணு நம்மள பார்க்க மன்மதனா இருக்கவே வேண்டாம். லேப்டாப், கூலிங்க்ளாஸ் இதெல்லாம் போதும்.

Vasu. said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

A Blip said...

எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது.

Andha ponnu feel apnicho illayo.. neenga adhu feel pannanum nu asa patu irukeenga nu mattum theliva puriyudhu!

கோகுல், இனிக்கு தேதில ஒரு பொண்ணு நம்மள பார்க்க மன்மதனா இருக்கவே வேண்டாம். லேப்டாப், கூலிங்க்ளாஸ் இதெல்லாம் போதும்.

Idha na othukavae matan! Oru ponna idha naan kandikaran :D

Vasu. said...

Krithi,

எங்கம்மா சத்தியமா அந்த பொண்ணு என்னை அப்படிதான் பாத்துச்சு :-))

நான் என்ன சொல்ல வந்தேன்னா, லேப்டாப், ஐபோட், கூலிங்க்ளாஸ் இது எல்லாம் இருந்து ஒரு நாலு நாள் நாயா பேயா அலைஞ்சு "நீ தான் எனக்கு எல்லாமே" அப்படின்னு டயலாக் எல்லாம் விட்டா எவ்வளோ கேவலமா நம்ம இருந்தாலும் பொண்ணு விழுந்துடும்.

Women are so vulnerable. எனக்கு தெரிந்து காதல் என்ற பெயரில் மிக சுலபமாக ஏமாந்து இன்று வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு நிற்கும் சில பெண் நண்பர்களை வைத்து இதை சொல்கிறேன். Generalize செய்யவில்லை.

A Blip said...

Paavam vasu en amma mela sathiyam panreenga.. Naan othukaran vidunga ;) Andha ponnuku anga time pass panna vera yaarum irundhu iruka matanga, so ungala vechu time pass pani irukalam.. :D

200% true MOST women are vulnerable.Iniya thethiku oru ponna ematha, neenga ipod , laptop varaikum poga venam..neenga sonna maree pesiyae kaviltharanga pasanga...life eh tholachutu neekara neraya pera ah pathutan.. purely andha pasanga pesina asai varthaiku mayangi, elathayum elandhutu nikaranga...

Viji said...

76 rupees? :o ayyoda...
very picturesque... adhae train la naanum unga kooda payanichutu vandha madiri irukku...

"evan thaana? evan thaana?" ;)