Friday 5 December 2008

இன்றைய தமிழகத்தின் எம்.ஆர்.ராதா

தமிழ்நாட்டில் எம்.ஆர். ராதாவிற்கு பிறகு காமெடி மற்றும் வில்லன் வேடங்களை சிறப்புடன் செய்யக்கூடியவர் யார் என்று இப்போது கேட்டால் குழந்தை கூட யோசிக்காமல் சொல்லும் பதில் "கலைஞர் கருணாநிதி" என்பது தான்.

சட்டக்கல்லூரி மாணவர்களிடையே வன்முறையை தூண்டியது ஜெயலலிதா தான் என்றார். அதற்கு எதிராக வழக்கு தொடர போவதாக ஜெயலலிதா அறிவித்தவுடன் தான் "விளையாட்டுக்கு" சொன்னதாக ஒரு அந்தர்பல்டி அடித்தார். ஒரு மாநில முதல்வர் விளையாட்டாக சொல்லக்கூடிய வார்த்தைகளா இவை?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தி.மு.க ஆட்சியை காட்டமாக விமர்சித்ததை அடுத்து காடுவெட்டி குருவை தமிழக அரசு கைது செய்தது. அதே ராமதாசுடன் சில நாட்களுக்கு முன் சமரசம் ஏற்பட்ட நிலையில் காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரை காக்க தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று பேசிய வைகோ கைது செய்யப்பட்டார். அதே போல், அவர்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தொல்.திருமா கூட்டணி தர்மம் காரணமாக கைது செய்யப்படவில்லை.

தி.மு.க அரசு வரும் முன்னே, வன்முறை வரும் பின்னே என்று புது பழமொழியே எழுதலாம் போல் இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் தமிழகத்தில் கொலை/கொள்ளை. இதற்கிடையே, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பல கைதிகளை விடுதலை வேறு செய்துள்ளார்.

தினகரன் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அழகிரி பொறுப்பல்ல. எந்த செய்தியின் காரணமாக தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதோ அந்த செய்தியை வெளியிட்ட மாறன் சகோதரர்களே காரணம் என்றார். கடந்த பிப்ரவரி மாதம் மாறன் சகோதரர்களை எச்சரித்து கலைஞர் முரசொலியில் கவிதையை பார்ப்போம்:

நாடு போற்றிய நல்லறிவாளனே
ஏடு புகழ் என்னருங் கண்மணியே!
தோகாவில் திறன்காட்டி இந்தியத் திருநாட்டின் கீர்த்தி
தொல் புவியில் நிலைநாட்டியவனே!
இங்கிலாந்துப் பிரதமரை சந்தித்துப் பேசியபின்;
“இத்தனைக்கும் காரணம் இந்த மாமன் தான்’ என்று;
எழுதி நீ அனுப்பிய கடிதத்தில்
இறுதி வாசகமாய் “நான் உங்கள் வளர்ப்பன்றோ’ என்று
அன்றைக்கு நீ இலண்டன் மாநகர் இருந்து மடல் எழுதி
நன்றியினைக் குன்றின் மேல் இட்ட விளக்காக
ஏற்றி வைத்து; இன்றைக்கும் எனை அழவைக்கும் அன்பே ஆரமுதே!
தூற்றுகின்றான் நான் பெற்ற பிள்ளையினை; நீ பெற்ற பிரகலாதன்!
மகனே ஆயினும் தவறு செய்யின் மன்னிக்காமல் கண்டிக்கின்ற
மனு நீதிச் சோழன் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் நான்;
தோளுக்கு நிகராக வளர்ந்தோரின் பகை கண்டுள்ளேன் இன்று நான்
தோளில் தூக்கி வளர்த்தோரும் வாளைத் தூக்குகின்றார்;
வசைமாரி பொழிகின்றார்
மானம் போற்றுதற்கும் திருக்குறள் தரும் மறை நீதி
மறையாமல் காப்பதற்கும் இந்தத் தமிழ்
மண்ணில் நிலைத்த திராவிட இயக்கத் தருவை வீழ்த்த நினைத்து
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலைவோரின்
கண்ணில் விரலை விட்டு ஆட்டுதற்கும் கழகப் பாசறை வீரர்கள்
எண்ணற்றோர் உண்டு; எதிரிகள் ஓடி ஒளியட்டும் இதனை
எச்சரிக்கையாகக் கொண்டு!

இப்படி எல்லாம் கவிதை எழுதியும் பல ஊடகங்களின் வாயிலாகவும் மாறன் சகோதரர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியவர், நான்கு நாட்களுக்கு முன் அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு தான் ஆகிறது. அதற்குள், ஆட்சி எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.கேவலம் ஒரு கலர் டிவி, மலிவு விலையில் அரிசி இவற்றுக்காக ஒட்டு போட்ட தமிழனுக்கு இது தேவை தான்.

2 comments:

பாண்டித்துரை said...

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது உண்மையா கோகுல்

6000 கோடி ஸ்பெக்ட்ரம் பூதம்தான் மாறன் கருணாநிதி கூட்டு போட்ட பூட்டா!

Gokul said...

பாண்டிதுரை,
உங்க வருகைக்கு நன்றி ஆனால் இது நான் எழுதவில்லை, எனது நண்பர் வாசு எழுதி இருக்கிறார். (அவரும் இந்த blog-இன் owner).

இந்த குடும்ப இணைப்பில் கேட்க வேண்டிய கேள்விகள் என்னை பொறுத்தவரை
1.spectrum ஊழல்
2. இறந்து போன தினகரன் ஊழியர்கள்
3.கலைஞர் டி.வி
4.அரசு கேபிள்
5.அழகிரி ஆதரவு கேபிள் operators
6. கனிமொழியின் (அல்லது தயாநிதியின்) அரசியல் எதிர்காலம்