Wednesday, 24 December 2008

ஜெயா டிவி - மார்கழி மகா உற்சவம்

இந்த வருஷம் டிசம்பர் சீசன் கச்சேரி ஒன்று கூட இன்னும் போகவில்லை. ஆபீஸ் சிறுசேரியில் உள்ளது. சபாக்கள் எல்லாம் மயிலாப்பூர், தி.நகர், திருவல்லிகேணி பகுதியில் உள்ளது. ஆகையால், வார நாட்களில் கச்சேரிக்கு போக முடியாது. சனி, ஞாயிறு போகலாம் என்றால் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாரம் முழுதும் போராடும் என் மனைவிக்கு அந்த இரண்டு நாட்கள் நான் உதவி செய்தால் தான் உண்டு.

இந்த நிலையில், ஜெயா டிவியில் காலை 6:30 முதல் 7:00 மணி வரை(முதல் நாள் மாலை 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் compressed version)ஒளிபரப்பாகும் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சி சபாக்களுக்கு நேரில் சென்று கச்சேரி பார்க்க முடியாத வருத்தத்தை ஓரளவுக்கு தீர்க்கிறது. சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அரங்கில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் இந்த வருட தீம் தமிழ் பாடல்கள். அருணாச்சல கவிராயர், பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பலரின் தமிழ் பாடல்களை சௌமியா, சஞ்சய் சுப்பிரமணியம், நித்யஸ்ரீ, நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் பலர் பாடுகின்றனர்.

நிகழ்ச்சியின் இடையே பாடகர்கள் அவர்களின் சிறு வயது ஆசைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வது சுவாரசியமாக உள்ளது. குறிப்பாக சௌமியா அவர்கள் தனக்கு சாலைகளில் விற்கும் பானி பூரி பிடிக்கும் என்றும் சிறு வயதில் கோலி விளையாட்டு பிடிக்கும் என்றார். அந்த கோலி உருண்டைகளை இன்றும் வீட்டில் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

நேரம் கிடைத்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்கவும்.இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஜெயாவின் காலை நிகழ்ச்சிகள் பல சுவையாக உள்ளன. திரு.அனந்த பத்மனாபசாரியார் வழங்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கம், திருமலை திருப்பதி பிரமோற்சவ நிகழ்ச்சி, திரு.விட்டல்தாஸ் மஹாராஜ் பாடும் பாண்டுரங்க பஜனை போன்றவை சில.

No comments: