Friday 10 April 2009

தொலைந்து போனவர்கள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார். "மரணத்தை விட கொடுமை என்ன தெரியுமா? மறக்கப்படுவது" என்று. எவ்வளவு உண்மை. சமீபத்தில் மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் கூட, புகழின் உச்சியில் இருந்த போது அவரை தேடி வந்தவர்கள் அவரது அந்திம காலத்தில் அவரை கண்டுக்கொள்ளவில்லை என்று வருந்தியதாக செய்திகள் படித்தேன். தமிழ் திரையுலகில் ஓரளவு பெயர் வாங்கி ஒரு கட்டத்தில் ஓசையே இல்லாமல் திடீரென்று காணாமல் போன சிலரை பற்றிய பதிவு இது.

பாக்யராஜ்
=========
சகலகலா வல்லவர். இவரை போல் திரைக்கதை அமைக்க இன்றும் ஆள் இல்லை என்பார்கள். பாக்யா என்ற பெயரில் வார இதழ் நடத்தி அதிலும் வெற்றி கண்டார். சுந்தரகாண்டம் திரைப்படத்திற்கு பின் ஏனோ இவர் நடித்த/தயாரித்த/இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை. முருங்கக்காயை இவர் அளவுக்கு யாரும் மார்க்கெட்டிங் செய்யவில்லை.

மோகன்
=======
சில்வர் ஜூபிளி நாயகன் என்று பெயர் பெற்றவர். 25 சில்வர் ஜூபிளி படங்கள் கொடுத்த ஒரே நடிகர். கமல்/ரஜினி கூட அத்தனை படங்கள் கொடுக்கவில்லை. பல படங்களில் பாடகராக மைக் பிடித்து நடித்ததால் "மைக்" மோகன் என்று அழைக்கப்பட்டார். ஒரு முறை கமல் சொன்னார் "நல்ல வேளை நண்பர் மோகன் வந்து என்னிடமிருந்து மைக்கை வாங்கினாரோ நான் பிழைத்தேன். இல்லையென்றால் நான் மைக் கமல் என்று பெயர் வாங்கியிருப்பேன் என்றார்".

ஹீரோவாக கொடி கட்டி பறந்த போது நெகடிவ் ரோல் செய்தவர்(நூறாவது நாள்,விதி). மௌன ராகம் தான் கடைசியாக அவர் நடித்து பெயர் வாங்கிய படம். அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இசைக்கு இளையராஜா, பின்னணி குரலுக்கு S.N.சுரேந்தர் என்று ஒரு சூப்பர் காம்பினேஷன் வைத்து வெற்றி பெற்றார். சமீபத்தில் சுட்டபழம், அன்புள்ள காதலுக்கு என்று சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் ரிலீஸ் ஆன அதே வேகத்தில் பொட்டிக்கு போய்விட்டன.

ராமராஜன்
=========
கமல், ரஜினிக்கு பிறகு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர். உண்மையை சொல்லவேண்டும் என்றால் பி,சி சென்டர்களில் இவர் படங்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்து கமலுக்கும் ரஜினிக்கும் சில காலம் பேதி கண்டது. இவருக்கும் பெரிய பக்கபலம் இளையராஜாவின் இசை. அதை தவிர கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை. கடைசியாக என்ன படத்தில் நடித்தார் என்றே நினைவில் இல்லை. நடிகை நளினியுடன் இருபது ஆண்டுகள் வாழ்ந்து பின் விவாகரத்து பெற்றார். ராமராஜனை விட நளினி இப்போது பிரபலம். டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது.

ராம்கி
=====
இவர் ராமராஜன், மோகன் அளவுக்கு பிரபலம் இல்லை. ஆனால், இவருக்கும் கொஞ்சம் ரசிகர்கள் இருந்தார்கள். இணைந்த கைகள், சின்ன பூவே மெல்ல பேசு, செந்தூர பூவே போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார்.கடைசியாக, குஷ்பூ மற்றும் ஊர்வசியுடன் இரட்டை ரோஜா என்ற படத்தில் நடித்தார்.

முரளி
======
காலேஜ் ஸ்டுடென்ட் பாத்திரத்தில் ரொம்ப நாள் நடித்தார். ஒரு கட்டத்தில் கால மாற்றத்தை உணர்ந்து மல்டி-ஹீரோ படங்களில் நடித்தார். ஆனாலும், சோபிக்க முடியவில்லை. இப்போது இவர் மகன் "பாணா" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பிரதாப்
=======
தமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு பைத்தியம் பிடிப்பது போன்ற கதாபாத்திரம் என்றால் கூப்பிடு பிரதாப்பை என்பார்கள். லூசு வேடங்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருப்பார். சமீபத்தில் மணிரத்னத்தின் குரு படத்தில் மாவட்ட ஆட்சியாளர் பாத்திரத்தில் தோன்றினார்.உலக சினிமா பற்றி நல்ல ஞானம் உள்ளவர் என்று எங்கோ படித்தேன். வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களின் இயக்குனர். நடிகர் திலகம் சிவாஜி, மோகன்லால் என்ற இரு துருவங்களை வைத்து படம் எடுத்த ஒரே இயக்குனர். படத்தின் பெயர் யாத்ரா மொழி.

6 comments:

Zahoor said...

"டிவியை அணைத்த பின்பு கூட அவர் முகம் தெரிகிறது" :) :) :)

Gokul said...

வாசு,

முதலில் நாகேஷ் பற்றி, பொதுவாக நாகேஷ் சிவாஜி போன்றவர்களால் புகழை எப்படி tackle செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில் ஜெமினி கணேசன் ஒரு Gem, தன்னுடைய கதாநாயக புகழ் விரைவில் மங்கும் என தெரிந்து மிகவும் தெளிவாக வாழ்க்கையை பார்த்தவர் அவர்.

உன்னுடைய list-இல் எனக்கு தெரிந்து சேர்க்க வேண்டிய பெயர் ரவீந்திரன்.80-களின் ஆரம்ப வருடங்களில் அவர் பல படங்கள் நடித்தார் , அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை, அவர் நடித்த படங்களில் சில "சகல கலா வல்லவன்" , "ரங்கா".

சுரேஷ் - பல படங்களில் நடித்தார் (மென்மையான கதாநாயகனாக) அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தெலுங்கில் பார்க்க முடிந்தது.

பிரசாந்த் ... என்ன சொல்ல...

-Gokul

Vasu. said...

வருகைக்கு நன்றி Zahoor

Vasu. said...

கோகுல்,

இரண்டு வருடங்களுக்கு முன்பு 6.2 என்ற சத்யராஜ் படத்தில் ரவீந்திரன் வில்லனாக நடித்தார். பிரஷாந்த் சில படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். சுதாகர் கூட தமிழில் ஹீரோவாக நடித்துவிட்டு தெலுங்கு படங்களில் காமெடியன் ஆனார்.

Srinivasan said...

ஒரு சிறு செய்தி வாசு,

நடிகை காஞ்சனா தெரிந்திருக்கும் என்று நினைகிறேன், பல வெற்றி படங்களில் நடித்தவர் தற்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறார், ஒரு வருடர்த்திற்கு முன்னால் நடுரோட்டில் பிச்சை எடுத்து கொண்டிருதராம். சொத்துகளை உறவினர்களிடம் பரிகொடுதுவிடு முதியோர் இல்லத்தில் இருக்கிறார்

விமான பணிபென்னாக இருந்த அவரை காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர்

Vasu. said...

ஸ்ரீனி,

காஞ்சனா பெங்களுருவில் எதோ ஒரு முதியோர் இல்லத்தில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன் குமுதத்திலோ அல்லது விகடனிலோ நானும் ஒரு செய்தி படித்தேன். அந்த செய்தி வெளிவந்த பிறகு வழக்கம் போல் பரபரப்பிற்கு பேயாய் அலையும் சில பத்திரிகைகள் அவர் நிலை பற்றி பேச காஞ்சனாவை அணுகிய போது அவர் தான் அப்படிப்பட்ட சுழலில் இல்லை என்றும் அது தவறான செய்தி என்றும் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஜெயா டிவியின் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் பேசிய காஞ்சனா இது பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், படப்பிடிப்பு நடத்திய இடம் அவர் இல்லம் போல் இருந்தது. அவ்விடத்தில் ஏழ்மைக்கான எந்த அறிகுறியும் இல்லை. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.