Tuesday, 23 June 2009

மீசை

ஜெயமோகனின் மீசை பதிவை படித்த பாதிப்பில் உருவான பதிவு இது. இந்த குளம்பியகம் வலைப்பூவை ஆரம்பிக்கும் போது நானும் கோகுலும் சொந்த விஷயங்களை பற்றி எழுதுவதில்லை என்று ஒரு சங்கல்பம் செய்துகொண்டோம். இந்த பதிவு அதற்கு விதிவிலக்கு.

ஜெயன் அவர்களின் பதிவு மீசை வைப்பது/எடுப்பதை பற்றி. என் பதிவு மீசை வளராத காலத்தில் சந்தித்த அவமானங்களையும் அதன் பின் வளர்த்த மீசையையும் பற்றியது. இறுதி வருடம் கல்லூரி முடிக்கும் வரை எனக்கு மீசை வளரவில்லை. ஏற்கனவே பள்ளியில் மீசை இல்லாத காரணத்தால் பல காமெடிகளுக்கு ஆளானேன். சின்னப்பையன் என்று ஒதுக்கப்பட்டு எடுபிடி வேலைகளுக்கு மட்டுமே அழைக்கப்பட்டேன். நான் சொல்லும் பள்ளிப்பருவம் பிளஸ் ஒன் & பிளஸ் டூ.

இங்கே எடுபிடி வேலை என்பது நல்ல மீசை வளர்ந்த என் வகுப்பு மாணவன் என் வகுப்பை சேர்ந்த மாணவியை பள்ளி முடிந்து தள்ளிக்கொண்டு போகும் போது நான் அவன் வண்டியை தள்ளிக்கொண்டு வரவேண்டும். யாராவது மாணவியிடம் தங்கள் காதலை(காதல் என்ன கருமம் எல்லாம் ஒரு infatuation தான்) தெரிவிக்க வேண்டும் என்றால் நான் தான் தூது. அந்த பெண் கர்ம சிரத்தையாக பிரின்சிபாலிடம் போய் சொல்ல என்னை பின்னி எடுப்பார்கள். அந்த காவிய காதலுக்கு தூது போகவில்லை என்றாலும் உதைப்பார்கள். இது போதாதென்று வகுப்பில் உள்ள மாணவிகளிடம் யாராவது மாணவன் வீரம் காட்டவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவர்களுக்கு நான் தான் "கைப்புள்ள". உயரம் வேறு கம்மியாக இருந்ததால் நாலு பிரிவில் இருந்த மாணவர்களும் ரவுண்டு கட்டினார்கள். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால் என்னை மாதிரி இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். பெண்கள் எங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று சொல்லவே தேவையில்லை.

இப்படியாக பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு ஒரு வழியாக கல்லூரியில் போய் சேர்ந்தேன். இங்கேயும் கைப்புள்ள தான் ஆனால் பள்ளி அளவுக்கு மோசமில்லை. இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது "மீசை இல்லாதவன் ஆம்பளையே இல்லை" என்று என்னை பார்த்து கூறப்பட்டது. இதற்கு நடுவில் என் மீசை வளர்ப்பு முயற்சிகளை சொல்லியாக வேண்டும். கரடி ரத்தம் தடவினால் வளரும் என்று ஒருவர் சொன்னார். கரடிக்கு எங்கே போவது என்று அதை மட்டும் தான் முயற்சிக்கவில்லை. மற்றபடி அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு மேல் கொஞ்சம் பிளேடு பட்டாலும் ரத்தம் கொட்டுமோ என்கிற அளவுக்கு சவரம் செய்தேன். தலைக்கு தடவும் எண்ணையை உதட்டின் மேல் போட்டுப்பார்த்தேன். ம்ஹூம்..ஒரு மாற்றமும் இல்லை.இதற்கிடையில் மீசையில் சீப்பை உபயோகிப்பவர்கள், Handlebar mustache எனப்படும் வளைந்த மீசை வைத்திருப்பவர்கள், கையால் மீசையை நீவி விடுபவர்கள்,இவர்களை எல்லாம் பார்த்தால் கொலைவெறி ஏற்பட்டது.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த "தனியாவர்த்தனம்" என்று ஒரு படம் உண்டு. அதில் அவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கட்டாயம் பைத்தியம் பிடிக்கும். மம்மூட்டி அவர்களின் சந்ததியில் அவருக்கு தான் வரும் என்று சொல்லியே அவருக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார்கள் ஊர்காரர்கள். அந்த மாதிரி உனக்கு மீசை வளராது என்று தொடர்ந்து சொல்லப்பட்டதால் நானும் அதை நம்ப தொடங்கினேன். அதன் காரணமாக கல்லூரி முடித்து வேலைக்கு சென்ற பின் கூட மீசை வளர்ப்பதை பற்றி யோசிக்கவே இல்லை.ஆனால், ஆணாய் பிறந்த ஒவ்வொருவரும் ஆணினத்தின் அடையாளம் என்று பெருமையுடன் சொல்கிற ஒரு விஷயம் நம் வாழ்க்கையில் கிடையவே கிடையாதோ என்கிற கவலை மட்டும் இருந்தது. அதை விட மேலாக, திருமணம் முடித்தவுடன் மனைவி "ஏங்க, மீசை வைங்களேன். உங்களுக்கு மீசை வெச்சா எப்படி இருக்குன்னு பாக்கலாம்" என்று சொல்லக்கூடாதே என்கிற யோசனை ஒரு பக்கம். மீசை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமா என்று ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் கவலை வேறு சேர்ந்து கொண்டது.

ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது. எதிர்பார்த்த மாதிரியே சில நாட்களுக்கு பின் என் மனைவி மீசை வைங்களேன் என்றார். "என் முகத்துக்கு மீசை செட் ஆகாது மா. இப்படி இருந்தா தான் ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க" என்று சமாளித்தேன்.ஆனால் மனதிற்குள், "எவ்வளவு நாளைக்கு தான் சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி இப்படி சமாளிப்பது.". எவ்வளவு செலவானாலும் சரி, எப்படியாவது மீசை வளரும் உபாயங்களை சீக்கிரம் தெரிந்து கொண்டு ஒரு கடா மீசை வளர்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இதற்கிடையே ஒரு வருடம் லண்டன் செல்ல நேர்ந்தது.

லண்டனில் என்னுடன் இருந்த இரண்டு நண்பர்கள் மீண்டும் மீசை வளர்க்கும் ஆசைக்கு தூபம் போட என் இருபது ஆண்டு கால ஆசை மீண்டும் உயிர் பெற்றது. நான்கு மாதம் சவரம் செய்யாமல் விட வாயை மறைக்கும் அளவுக்கு மீசை வளர்ந்தது. முதல் முறை மூக்குக்கு கீழே அத்தனை ரோமங்களை பார்த்த போது நான் அடைந்த இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.எனக்கு மீசை வளராது என்று சொன்ன ஒவ்வொரு நண்பனுக்கும் என் முகத்தை படம்பிடித்து அனுப்பி வைத்தேன்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மீசை வளர்த்தது ஒரு இமாலய சாதனை தான்.ஆனால், இருபது வருடங்கள் இல்லையே இல்லையே என்று ஆதங்கப்பட்டு வளர்த்த மீசையை என் மகள் வேண்டாம் என்று கூறியதால் எடுத்துவிட்டேன்.

7 comments:

Gokul said...

வாசு,

உன் மீசைக்கு பின்னால இவ்வளவு கதையா , நான் கூட உன்னை ஒரு metrosexual man அதனால்தான் மீசை வைக்கவில்லை என்று நினைத்தேன்.

crazy mohan நாடக தலைப்புத்தான் நினைவுக்கு வருது " மீசை ஆனாலும் மனைவி" .

VS.Senthil said...

Vasu,

Too good...உன் மீசை பின்னால் ஒரு ஆதங்கம் இழைகிறது :-)

VS.Senthil said...

Vasu,

Your blog made me remind my Poondi days .. ய்னக்கும் ஒரே பீலிங்-saa போச்சு when one of my english professor said 'Man without mustache is like a cup of coffee without sugar'

Zahoor said...

// உயரம் வேறு கம்மியாக இருந்ததால் நாலு பிரிவில் இருந்த மாணவர்களும் ரவுண்டு கட்டினார்கள்

// பெண்கள் எங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்கள்

இப்பொழுது உங்களைப் பார்தால் மேற்சொன்ன வாக்கியங்களை நம்ப முடியவில்லை.

மீசை சமந்தப்பட்ட அவமானங்களை நானும் சந்தித்து இருக்கிறேன். என்னைப் போல் ஒருவர் இருந்திருக்கிறார் என நினைக்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது :)

Vasu. said...

செந்தில்,

வருகைக்கு நன்றி. சுலபமாக மீசை வளர்த்தவர்களுக்கு இந்த கட்டுரையின் வலி புரியது. :-))

Zahoor,
உயரம் வளர்க்க நான் பட்ட கஷ்டங்களை பற்றி தனியே ஒரு பதிவு எழுதுகிறேன். :-))

Saran said...

Ennakum antha kastam theriyum vasu. Aalaga finish panni irukinga.. I love that vasu!!!

Vasu. said...

Saravanan,

Thanks for the comment.