Sunday 28 June 2009

பாராட்டு

யோசித்து பார்க்கையில், நாம் பாராட்ட வேண்டியவர்களை , சரியான முறையில் பாராட்டுகிறோமா என்று தெரியவில்லை.

பாராட்டு சமூக வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகவே இருக்கிறது, சமூகத்தில் சரியான நேரத்தில் முக்கியமான செயல்களை, பெரும் ஆபத்துக்களை, சீரழிவுகளை தடுப்பவர்களை, தன்னலம் பாராது உழைப்பவர்களை , ஒரு மாற்றத்தை கொண்டு வருபவர்களை , சீர்திருத்தம் செய்பவர்களை, கவலைகளை குறைப்பவர்களை , பீதியை குறைத்து, பயத்தை குறைத்து ஆசுவாச படுத்துபவர்களை , பெரும் நிம்மதி அளிப்பவர்களை, அநியாயங்களை தட்டி கேட்பவர்களை, மாறுபட்ட துறைகளில், அதிகம் கவனித்திரா துறைகளில் முதன்முறையாக நுழைந்து சாதிப்பவர்களை நாம் சரியான முறையில், நிறுவனபடுத்தி பாராட்ட தவறுகிறோம் என்றே தோன்றுகிறது.

நாம் பாராட்டு எல்லாம் சினிமா, சங்கீதம் என்று கலைதொடர்பான விஷயங்களுக்கும், விளையாட்டுகளுக்குமே போய் விடுவதாக தோன்றுகிறது, இது உலகெங்கும் நடக்கும் விஷயம்தான் எனினும் , மற்ற முக்கிய துறைகளில், விஷயங்களில் இருப்பவர்களுக்கு நாம் எம்மாதிரியான பாராட்டை வழங்குகிறோம் என்று தெரியவில்லை, அல்லது தெரியும்படி பாராட்டை
வழங்குவதில்லை.விளையாட்டுகளிலும் கிரிக்கெட் அல்லாத வேறு விளையாட்டுகளில் நாம் பெரும்பாலும் பாராட்டை வழங்குவதில்லை, அவர்கள் உலக அரங்கில் நுழையும் வரை , தேசிய அளவு சாம்பியன்களை பெரும் இந்தியருக்கு தெரிவதில்லை.ஒரு தேசிய சாம்பியன்களுக்கு குடுக்காத பாராட்டு என்பது நமது தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது , அதாவது எங்களை
ஜெயிப்பது சுலபம், மற்ற நாட்டினரை ஜெயிப்பதுதான் கஷ்டம் என்று..

இது ஒரு வகையில், நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம், ஒரு சமூக சேவகருக்கோ, ஒரு நேர்மையான அரசு அதிகாரிக்கோ கொடுக்காத பாராட்டு , எதிர்காலத்தில் வரும் பல நல்ல திட்டங்களுக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டை.

அதே போல் கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொறியியல், Town planning,உணவு, ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள், புத்தகம், உடை முக்கியமாக விஞ்ஞானம் , கணிதம் என்று கலை சம்பந்த படாத துறைகளுக்கு நாம் ஒரு நிறுவனபடுத்தபட்ட (institutionalised) பாராட்டை வழங்க வேண்டும். அது அரசியல் சார்பற்ற நிலையில் இருக்க வேண்டும், இது இன்றைய middle class செய்ய வேண்டிய மிக மிக முக்கிய பணி.ஏனெனில், பெரும் பணக்காரர்கள் இதற்கென மெனக்கெட மாட்டர்கள், ஏழைகள் இதனை யோசிக்க மாட்டர்கள், மேலும் ஒரு அளவிற்கு மேல் அவர்களால் போக முடியாது, படித்த ஓரளவு வசதி படைத்த மிடில் கிளாஸ் ஜனமே இதனை செயல்படுத்த முடியும்.

துரத்தும் consumerism , அதற்கான பணம் சம்பாதிக்கும் சமூக, குடும்ப அழுத்தம், தனி மனிதனின் ஆசையை அதிகபட்சமாக தூண்டக்கூடிய விளம்பரங்கள், சக பணியாளர்களின் குற்ற உணர்ச்சி இல்லா ஊழல் தன்மை , நிறுவனபடுத்தபட்ட ஊழல், லஞ்சம், நேர்மையின்மை, அதன்மூலம் வரும் ஆதாயங்கள், பெருமைகள், இவற்றை தாண்டி அரசியல்வாதிகளின் அதிகாரம், மிரட்டல், ஆசை காட்டுதல், தனி மனித பலவீனங்களை குறி வைத்து அடிக்கப்படும் அம்புகள் ,நேர்மையாக இருந்தால் அவன் சாமர்த்தியம் இல்லாதவன் என பார்க்கும் மக்கள், அது தரும் விரக்தி, எரிச்சல்,இவை எல்லாவற்றையும் தாண்டியே இன்று நேர்மை என்பது இருக்கிறது.

இந்த நேர்மைக்கு நீங்கள் எப்படி பலம் கூட்ட முடியும்? எத்தனையோ முறைகள் இருக்கின்றன , பாராட்டுதல் அதில் முக்கியமானது, செத்துக்கொண்டு இருக்கும் பொது வாழ்வு நேர்மைக்கு உயிர் தருவது.

வேறு வழியில்லாமல், வருமான வரி கட்டுவதும், கிரிக்கெட்டில் இந்திய ஜெயிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவதும், கூடுமானவரை பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பதும் மட்டும் போதாது.இதைப்போன்ற அர்த்தமுள்ள செயல்களை செய்தால்தான் அது உண்மையாக இருப்பது, இல்லாவிட்டால் ஒரு மொந்தைத்தனம் உள்ள கூட்டம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.

இதில் மீடியாக்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு , கூடுமானவரை இந்த பாராட்டல்களை தகுந்த மனிதருக்கு தருவதோ , அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோ மீடியாவின் பணி, மிகச்சிறிய அளவிலாவது இதை அரசியல் கலப்பில்லாமல் ஆரம்பித்தால் அது சமூகத்திற்கு செய்த மிகப்பெரிய தொண்டு.தங்கள் வணிக நோக்கங்களை சுமார் 1% குறைத்துக்கொண்டாலே , இதனை மீடியாக்கள் செய்ய முடியும்.

ஒரு ஏரியாவில் மிகச்சிறப்பாக குப்பை அள்ளுபவருக்கு ஒரு பாராட்டு பத்திரம் என்பதில் இருந்து ஆரம்பித்து, ஒரு நகராட்சி பூங்காவை ஒழுங்காக வடிவமைத்தரை பாராட்டுவதில் இருந்து , ஒரு ஏரியாவின் (இருப்பதிலேயே) சுத்தமான தெரு எது என்று அடையாளம் கண்டுகொள்வதில் இருந்து, தமிழகத்தின் மிக சிறந்த தாசில்தார் யார் என்று அடையாளம் கண்டுகொண்டு பெருமைபடுத்துவதில் இருந்து, மாநில அளவில் சிறந்த விஞ்ஞானி யார் என்பது வரை போகாலாம். அடையாளம் கண்டுகொள்வதில் இருக்கும் அறிவியல் தன்மை, துறை வல்லுனர்களின் நேர்மையான பங்களிப்பு, transparency, தனி மனித கோபதாபங்கள் மற்றும் அரசியலை அகற்றுவதிலேயே இந்த பாராட்டுதல்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

4 comments:

Vasu. said...

Excellent article. Gokul, naan unnai "Paaratitten". :-))

Gokul said...

:-)); good comment!

சீமாச்சு.. said...

நல்ல விஷயம் கோகுல். இங்க பதிவுலகத்துல மா. சிவக்குமார் என்று ஒருத்தர் உண்டு. அவருக்கும் உங்களைப் போல சிந்தனைகள் உண்டு. நீங்கள் சென்னையிலில் இருந்தால் ஒரு முறை சந்தித்துப் பாருங்கள்.. அவசியம் சந்திக்க வேண்டிய ஒரு மனிதர்.

தொடர்ந்து எழுதுங்கள்.. நல்லா எழுதறீங்க..

Gokul said...

சீமாச்சு,

வருகைக்கு நன்றி , கூடிய விரைவில் சென்னையில் இருப்பேன், நீங்க சொன்ன மா.சிவகுமாரை சந்திக்க முயற்சிக்கிறேன்.

Your words are very much encouraging..thanks a lot.