Tuesday 2 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - 2

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இதர ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக துபாய் அரசு ஊருக்கு வெளியே லேபர் கேம்ப்ஸ்(Labour Camps) என்று ஒன்றை
அமைத்திருக்கிறார்கள்.ஒரு முறை தவறான பேருந்தில் ஏறி இந்த கேம்ப் ஒன்றிற்கு சென்றுவிட்டேன். மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தியில் பெயர்ப்பலகை கொண்ட முடி திருத்தும் கடைகள், நகை கடைகள், பொட்டிக்கடை, காய்கறி அங்காடி, துரித உணவு விடுதிகள் என்று இந்த கேம்ப் துபாய்க்குள் இன்னொரு குட்டி(ஆனால் அழுக்கு)துபாய் போல் இருந்தது.

இந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருக்கும் அலுவலகங்கள், காலை ஒரு வேன் அனுப்பி அவர்களிடம் பணிபுரிபவர்களை அழைத்து செல்லும். பனிரெண்டு மணி நேர வேலை முடிந்தவுடன் மீண்டும் வேனில் ஏற்றி இங்கே கொண்டு வந்து அடைத்துவிடும். சனிக்கிழமை தொடங்கி வியாழன் வரை இவர்களின் தினசரி வாழ்க்கை இது தான். வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை. ஆக, வடிவேலு கேட்பது போல் "துபாய்ல நீ எங்க இருந்த?" என்று கேட்டால் பெரும்பாலும் பதில் Al Qusais Camp அல்லது Al Quoz camp என்று தான் வரும்.

ஐந்து வருடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இங்கு வரும் தொழிலாளர்களுக்கு அண்ணன், தம்பி எல்லாம் இந்த கேம்பில் இருக்கும் நண்பர்கள் தான். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு செல்லலாம். செலவு கருதி இரண்டு வருடம் முடிந்த பின்பு கூட பலர் செல்வதில்லை.ஐந்து வருடம் முடியட்டும் என்று காத்திருக்கிறார்கள்.அப்படியும் போக மனமில்லாமல் இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்று பின் விளைவுகள் பற்றி தெரியாமல் ஓவர்ஸ்டே செய்து துபாய் ஜெயிலுக்கு செல்கிறார்கள்.

இவர் மனைவியோ குடும்பத்தாரோ மூன்று மாதம் காத்திருந்து பார்த்துவிட்டு போன் கூட செய்யவில்லையே என்று கவலைப்பட்டு கிராம அதிகாரியை சந்தித்து அவரை "கவனித்து" அவர் மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு, பின்னர் அவர் அரசிடம் பேசி, அவர்கள் துபாய் அரசை தொடர்பு கொண்டு பேசி சம்பந்தப்பட்ட நபரை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் முன் அவர் துபாய் ஜெயிலில் குறைந்தது ஒரு வருடம் இருந்திருப்பார்.

நான் வழக்கமாக மதிய உணவிற்கு செல்லும் சங்கீத உணவக சர்வர் ஒருவர் சொன்னார், "நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.என் பையன் இப்போ தான் பள்ளிக்கூடம் போறான்.அவன் பொறந்த உடனே நான் இங்க வந்துட்டேன்.போன்ல கூட பேச மாட்டேன்கறான்.அவனுக்கு நான் யாருன்னு தெரியல.அவங்க அம்மா கிட்ட போனை கொடுத்துட்டு ஓடிப் போயிடறான்.அடுத்த வருஷம் போய் தான் பாக்கணும்".பாத்ரூம் போய் வருகிறேன் என்று சொல்லி சென்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு வந்தேன்.

பேருந்தில் கூட நிறைய தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பெரும்பாலும் பேச்சு வாங்கிய கடன் பற்றியும் அதனால் தன மனைவி/குடும்பம் அங்கு படும் அவமானத்தை பற்றியே இருக்கும். ஒரு முறை டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த போது அருகில் இருவர் பேசுவதை கேட்க நேர்ந்தது. இருவரும் நண்பர்கள் போலும். ஒருவர் சொன்னார் "எங்க அத்தாச்சி கிட்ட பத்து(பத்தாயிரம்) ரூபா வாங்கினேன். அவங்க பிள்ளை என் பொண்டாட்டிய ரோட்ல பாத்து பணத்தை கேட்டு இருக்கான். என் பொண்டாட்டி "அதான் சீக்கரம் கொடுக்கறோம்னு சொன்னோமே, வாரத்துக்கு ஏழு நாளுமா கேப்பீங்க" அப்படின்னு சொல்லியிருக்கா. உடனே அவளை அறைஞ்சிட்டானம். அப்பறம் என் தம்பி மச்சான் எல்லாம் போய் சண்டை போட்டு இருக்காங்க. ரெண்டு மாசம் முன்னாடி போன் செஞ்சப்போ சொன்ன என் பொண்டாட்டி. இப்போ என்ன ஆச்சுனு தெரில. அடுத்த வாரம் போன் பண்ணனும்".

(இன்னும் பேசுவேன்)

2 comments:

வடுவூர் குமார் said...

இதே மாதிரி நானும் அல் கோஸ் போய் வ‌ரும் போது தொழிலாள‌ர்க‌ளின் சோக‌க்க‌தையை கேட்டிருக்கேன்.
:-(

Vasu. said...

குமார் சார்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி