2010 ஆம் ஆண்டு இன்றுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறது. விடைபெறும் ஆண்டின் Highlights என்ன?
ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், சுக்னா நில ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் போன்றவற்றை எல்லாம் புறமுதுகு காட்டி ஓட வைத்த, ஊழலுக்கெல்லாம் தாய் என்று வர்ணிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த ஆண்டு.(அது நடந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது புல்லரிக்க வைக்கும் பெருமை)
ரஜினி டீ குடிப்பதையே இரண்டு மணி நேர படமாக எடுத்தால் கூட தமிழ்நாட்டில் நூறு நாள் ஓடும் என்பதற்கு சாட்சியாக எந்திரன் வெளிவந்த ஆண்டு.
முஹம்மத் அப்சல், அஜ்மல் கசாப் ஆகியோர் நம் அரசு செலவில் சௌஜன்யமாக கழித்த மற்றொரு ஆண்டு.
மாவோயிஸ்டுகள் தங்கள் வீர பிரதாபங்களை அரங்கேற்ற,அரசு கடமை தவறாமல் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த மற்றுமொரு சராசரி ஆண்டு.
ஆறேழு விபத்துக்களின் வாயிலாக ரயில்வே துறை தங்கள் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபித்த ஆண்டு.
டெண்டுல்கர் தன ஐம்பதாவது சதத்தை அடித்து இரண்டு கோடி ரூபாயை வீட்டிற்கு கொண்டு செல்ல, "கலக்கிட்டாம்ப்பா சச்சின்" என்று ஆங்காங்கே டாஸ்மாக்கில் நம் குடிமகன்கள் தங்கள் சம்பளப் பணத்தை செலவழித்து கொண்டாடிய மற்றுமொரு ஆண்டு.
என்னதான் வேகமாக வளர்ந்தாலும் போலிச் சாமியார்கள் மற்றும் "என் மருந்தை சாப்டினா சும்மா லைட் கம்பம் மாதிரி நிக்கும்" என்று சத்தியம் செய்யும் பழனி சித்த மருத்துவர்களுடனோ விஞ்ஞானத்தால் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்று மீண்டும் பறைசாற்றிய ஆண்டு.
இறுதியாக, மன்மோகன் சிங் உண்மையில் நேர்மையானவரா என்று மக்களை கொஞ்சம் சந்தேகப்பட வைத்த ஆண்டு.
No comments:
Post a Comment