Saturday 1 January 2011

ஸ்ரீபெரும்புதூர்

ஆண்டின் முதல் பதிவை சென்னைக்கருகே உள்ள ஒரு திருத்தலத்தை பற்றிய குறிப்போடு தொடங்குகிறேன். வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரம் சென்றேன். வரும் வழியில் ராமானுஜர் அவதரித்த திருபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள்/ஸ்ரீ பாஷ்யகார பெருமாள் கோவிலுக்கு வண்டியை செலுத்தினேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஒரு காலத்தில் மிக அழகான கிராமமாக இருந்திருக்க வேண்டும். கோவில் உள்ள சாலையின் இரு புறமும் திண்ணை வைத்து கட்டப்பட்ட அழகான ஐயங்கார் வீடுகள். பெருமாள் பெயர் ஆதி கேசவன். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக ஆதி கேசவ பெருமாள் காட்சி தருகிறார். தாயார் பெயர் எதிராஜநாதவல்லி.

நாயக்கர், நாயுடு குடும்பங்கள் பெருமாளுக்கு ஒரு காலத்தில் நிறைய கைங்கர்யம் செய்திருக்க வேண்டும். கோவிலில் உள்ள படங்களில் எல்லாம் தெலுங்கில் பெயர் மற்றும் விளக்கங்கள். பெருமாள் மற்றும் தாயார் பெயர்களில் கூட தெலுங்கு வாசம் இருப்பதை உணரலாம். கோவிலின் அருகே பழங்கள்/பூ விற்பனை செய்பவர்கள் கூட தெலுங்கு கலந்த தமிழில் பேசுகிறார்கள்.

பிரகாரத்தை சுற்றி முக்கிய வைணவ திருத்தலங்களின் பெயர்கள், அங்கு பெருமாளின் பெயர், அவர் காட்சி தரும் அழகு என்று படங்களாக வரைந்திருக்கிறார்கள். ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருமாலிருஞ்சோலை, பரமபதம், பத்ரிநாத், திருவல்லிக்கேணி போன்றவை சில உதாரணங்கள். கோவிலில் நம்மாழ்வர்க்கென்று தனி சந்நிதி உள்ளது. கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை ஆனால் உள்ளிருக்கும் சிலைகளின் அழகை பார்த்தால் சோழர் அல்லது விஜயநகர மன்னர்களின் காலமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

1 comment:

Gokul said...

அழகான,அமைதியான,நிறைவான பதிவு.
-கோகுல்