Tuesday, 25 January 2011

தியாகராஜ ஆராதனை - திருவையாறு

ஞாயிறு காலை திருவையாறு சென்றேன்.ஆராதனை திங்களன்று தான் என்பதால் கூட்டம் அதிகமில்லை. தியாகராஜர் சந்நிதியில் மட்டும் கொஞ்சம் கூட்டம் இருந்தது. காவிரியில் தண்ணீர் அதிகம் இல்லை. குழந்தைகள் இருவரையும் காவிரியில் இறக்கி ப்ரோக்ஷனம் செய்தேன். மேடையில் பெயர் தெரியாத வளரும் கலைஞர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஜெயமோகன் எங்காவது தென்படுகிறாரா என்று அந்த சொற்ப கூட்டத்தில் தேடினேன்.

காவேரி கரைக்கு செல்லும் வழி நெடுக கடைகள். அண்ணாமலை பல்கலைகழகம் தொலை தூர கல்வித் துறையின் அரங்கு, பக்தி பாடல்கள் கடை, மிருதங்கம், தவில் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள் விற்கும் கடை, தமிழக அரசின் போலியோ சொட்டு மருந்து முகாம் என்று ஏகப்பட்ட அங்காடிகள். காரியதரிசி என்ற முறையில் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஜி.கே. மூப்பனார் குடும்பம் தான் வெகு காலமாக இந்த விழாவிற்கு தொடர்ந்து ஆதரவு. தஞ்சையை அடுத்த கபிஸ்தலம் மூப்பனாரின் சொந்த ஊர்.

தியாகராஜருடன் பெங்களூர் நாகரத்னம்மாள் படமும் சந்நிதியில் இருந்ததை பார்த்த போது மனதிற்கு இதமாக இருந்தது. இத்தனை சங்கீத வித்வான்கள் இன்று வந்து திருவையாறில் பாடினாலும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்தது அந்த தாசி தானே.வரும் வழியில் ஐயாறப்பர் (வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவேரி, வடவாறு என்று ஐந்து ஆறுகள் தாண்டி இருப்பதால் திருவையாறு சிவனுக்கு ஐயாறப்பர் என்று பெயர்) கோவில் முகப்பில் இருக்கும் ஆட்கொண்டார் சந்நிதியில் குங்குலியம் வாங்கிப் போட வேண்டுமென்று நினைத்தேன். கடை வீதியில் கூட்டம் அதிகம் இருந்ததால் காரை நிறுத்தவில்லை. ஆட்கொண்டார் சந்நிதியில் குங்குலியம் போடுவோரை எந்த ஜந்துவும் கடிக்காது என்பது ஐதீகம்.சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கை ஏதோ பூச்சி கடிபட்டு வீங்கி விட்டது. குங்குலியம் போடாதது தான் காரணமோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

2 comments:

Gokul said...

இந்த முறை ஜெயமோகன், வாசுதேவன் போன்ற பெரும் இலக்கியவாதிகள் அனைவரும் திருவையாறு சென்று இருக்கிறார்கள்.

நவீனத்துவத்திற்கு வந்த ஒரு நிலப்ப்ரபுத்துவ சமுதயாத்தின் மிச்சமிருக்கும் ஒரு முரனியக்கமான இதனை, இந்திய தத்துவ ஞானத்தின் நீட்சியாகவே என்னால் பார்க்க முடிகிறது --...

மன்னிச்சிடு வாசு, ஜெமோவை அதிகமா படிச்சதால வர்ற கை நடுக்கம் இது..

ஹ்ம்ம் என்னதான் வளைச்சி வளைச்சி எழுதினாலும் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் எல்லாம் எங்க வரப்போகுது...

Vasu. said...

Nice one Gokul..LOL :-))