Monday 21 January 2013

ஆயுத எழுத்து

தந்தி தொலைகாட்சியில் ஆயுத எழுத்து என்றொரு நிகழ்ச்சி. பொங்கல் தினத்தன்று தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சியில் கவிஞர் ஞானச்செல்வன், தங்கர் பச்சான் மற்றும் சாரு நிவேதிதா பங்கேற்றனர்.தங்கர் வழக்கம் போல் கொந்தளித்தார். "ஏன் தமிழன் வேட்டி கட்ட வெட்கப்படறான்? கோட்டு போட்ட முட்டாப்பய எத்தனை பேரு இருக்கான்னு நான் காட்டட்டுமா" என்றார். கோட்டு போட்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் புன்னகையுடன், "நீங்க என்னை சொல்லவில்லை என்று நம்புகிறேன்" என்றார்.

தங்கரும் சாருவும் வேஷ்டி என்று இரண்டு முறை கூற, அது வடமொழி சொல் என்ற ஞானச்செல்வன், வேட்டி என்பதே தமிழ்ச்சொல் என்றார். எல்.கே.ஜி ஆரம்பித்து தமிழே படிக்காமல் ஒருவன் முதுகலை பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என்றனர் மூவரும். ஊடகங்களை பெரிய அளவில் சாடினார் மூவருமே. "அம்மாவின் கைப்பேசி" என்று படத்திற்கு பெயர் வைத்தால், "கைப்பேசி" என்றால் என்ன என்று கேட்கிறான்? கைப்பேசி, அலைபேசி, செல்பேசி(சென்று கொண்டே பேசுவதால்) என்று அதற்கு பல பெயர்கள் உள்ளன. எது சரியான பெயர் என்று தெரியவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே தமிழை பற்றி அக்கறை இருக்கும் போது மக்கள் எப்படி மதிப்பார்கள் என்றார் தங்கர்.

கமல் விஸ்வரூபம், தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள் என்று பெயர் வைக்கிறார். கமல் என்பதால் சொல்லவில்லை, ஆனால் சம்ஸ்க்ருத வார்த்தைகள் தமிழில் கலக்கின்றன, பிறமொழி கலப்பு கூடாது என்கிற போது ஆங்கிலம் என்ன சமஸ்க்ருதம் என்ன, எதுவுமே தமிழுடன் சேரக்கூடாது என்றார் தங்கர். தங்கர், ஞானச்செல்வன் இருவரும் அதிகம் பேச, சாரு பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். பூங்கா ஒன்றில் தந்தை ஒருவர் புளியமரம், மாமரம் போன்றவற்றை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியதை சொன்னவர், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் தமிழர்கள் என்றார். சென்னையில் நடைபெறும் புத்தக விழாவின் மீதான தன் அதிருப்தியையும் பதிவு செய்தார் அவர்.

இவ்வளவும் கேட்ட பின் எனக்கு தோன்றிய கேள்விகள் இவை.

அமெரிக்க உலகின் மற்ற நாடுகளில் இருந்து எத்தனையோ பேரை வரவேற்று அரவணைத்து செல்கிறது. அவர்கள் பண்பாட்டை இழப்பது பற்றி பேசுவதில்லை. நாம் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம்?

சிதம்பரம் எந்த நேரமும் வேட்டியுடன் தான் இருக்கிறார். அதை பார்த்து ராஜ் தாக்கரே "தமிழர்களை பாருங்கள், அவர்கள் பண்பாட்டை விட்டுக்கொடுப்பதே இல்லை. மராட்டியர்கள் நாம் எப்போது அப்படி இருக்கப் போகிறோம்?" என்கிறார். ஆக, பண்பாடு கூட Perception தான். அது பார்ப்பவர் கண்ணை பொருத்தது.

பண்பாடு என்பதே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது தானே? பொங்கலை பானையில் வைத்துக் கொண்டாடினான் பாட்டன். அதையே, Induction ஸ்டவ்வில் வைத்துக் கொண்டாடுகிறோம் இன்று. ஆனால், பொங்கலை கொண்டாட வேண்டும் என்னும் எண்ணம் மாறவில்லையே?

பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் மரியாதை இல்லை. ஆனால். அவரை இன்றைய இளைஞர் சமூகம் தான் கொண்டாடுகிறது. தங்கர் சொல்லும் தமிழ் தெரியாத இன்றைய இளைஞர்கள் கூட்டம் தான் பாரதிக்கு விழா எடுக்கிறது. இந்தக் கூட்டமா தமிழை வளர்க்காமல் விட்டுவிடும்?

1 comment:

Gokul said...

வாசு,
சாரு வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் தங்கர் பற்றி கூறுகையில் "தங்கரின் தனித்தமிழ் பேச்சின் அடுத்த கட்டம் - எல்லோரும் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும் , அந்த வயல்களுக்கு எல்லாம் தங்கர்தான் பண்ணையாராக இருக்க வேண்டும் என்ற ஆசை" என எழுதினார்.

தமிழன் வேட்டி கட்டுவது இருக்கட்டும் , தங்கர் ஏன் சட்டை போடுகிறார்?

//அமெரிக்க உலகின் மற்ற நாடுகளில் இருந்து எத்தனையோ பேரை வரவேற்று அரவணைத்து செல்கிறது. அவர்கள் பண்பாட்டை இழப்பது பற்றி பேசுவதில்லை. நாம் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம்?//

ஏனென்றால் அவர்களுக்கு நிறைய விஷயம் இருக்கிறது பொதுவில் யோசிக்க[Hygeine in public place, Gun Control Act,Reforms in Education etc ] , நமக்கு சினிமாவும் பண்பாடும்தான் இருக்கிறது.