Tuesday, 6 January 2009

கமல்ஹாசன்-நிகழ மறுத்த அற்புதம்-ஓர் எதிர்வினை(3)

சாரு மேலும் தொடர்கிறார்:

கமல் படங்களில் கையாளப்படும் சமூகப் பிரச்சினைகள் சராசரித் தன்மையோடு இருப்பதன் மற்றொரு காரணம், கமல் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள். உதாரணமாக, தசாவதாரத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் அமிதாப் பச்சன் நடித்து உலக அளவில் பேசப்பட்டு வரும் லாஸ்ட் லியர் வெளியாகியுள்ளது. இதை இயக்கியவர் ரிதுபர்னோ கோஷ். வங்காள மாற்று சினிமாவில் ( alternate cinema) ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த பெயர். அமிதாப் பச்சன் என்ற இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரிதுபர்னோ கோஷ் என்ற யாருக்குமே தெரியாத ஒரு வங்காள இளைஞனை நோக்கி ஓட வேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் சினிமா பற்றிய அமிதாபின் அக்கறை.

கமல்ஹாசனால் இப்படி ஒரு இளைஞனிடம் பணியாற்ற முடியுமா? பிரச்சினை என்னவென்றால், கமலுக்கு இளைஞர்களுடனும், சம காலத்தோடும் தொடர்பே அற்று விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (ஆனால் கமலின் நண்பராக இருந்த சுஜாதாவின் எழுத்து அவரது கடைசிக் காலம் வரை இளமைத் துடிப்புடனும், சமகாலத் தன்மையோடும் விளங்கியது என்பதை இங்கே நாம் ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்). ஏஸி காரில் செல்லும் நம்முடைய அரசியல்வாதிகளுக்கு டவுன் பஸ்ஸில் செல்லும் கொடுமை பற்றி ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்குக் கமலும் தனது சமகாலத்திலிருந்தும், சமகாலப் பிரச்சினைகளிலிருந்தும் அந்நியமாகி விட்டார் என்று அவரது படங்களிலிருந்து தெரிகிறது.

விருமாண்டி என்ற படத்தையும், இதே கதைக் களனைக் கொண்ட பருத்தி வீரனையும் எடுத்துக் கொள்வோம். உலக சினிமாவை அறிந்த கமல்ஹாசனின் ’ விருமாண்டி ’ ஒரு சராசரி கமர்ஷியல் படமாகவும், உலக சினிமா பற்றி எதுவுமே அறியாத அமீரின் ’ பருத்தி வீரன் ’ ஒரு கலைப் படைப்பாகவும் உருவானது எப்படி? சினிமாக்காரர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தையான அதிர்ஷ்டமா? இல்லை. கமல் மட்டும் அல்ல; எத்தனையோ ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த யாருமே அமீர் உருவாக்கியது போன்றதொரு கலைப் படைப்பை உருவாக்கியதில்லை என்பதுதான் நிஜம். அமீர் மட்டுமல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய பாரதிராஜாவும் கூட உலக சினிமா புத்திஜீவி அல்ல என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், தனக்கு இலக்கியமும் தெரியாது என்று மற்றொரு அதிர்ச்சியையும் தருகிறார் அமீர். மறுபடியும் பாரதிராஜா கதைதான். அவரும் சமகால இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் அல்ல. ஆனால் கமலுக்கு ஞானக் கூத்தனிலிருந்து மனுஷ்ய புத்திரன் வரை நண்பர்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஒரு கலைப் படைப்புமே வெறும் அறிவினால் மட்டுமே உருவாகக் கூடியதல்ல. ’ அப்படியானால் வேறு என்ன தேவைப் படுகிறது? வாழ்க்கை பற்றிய கூரிய அவதானமா? ’ என்றெல்லாம் கேட்டால் எனக்குத் தெரியாது. ஏனென்றால் அது ஒவ்வொரு கலைஞனுக்கும் வேறு படுகிறது.

பருத்தி வீரனைப் போல் அல்லாமல் விருமாண்டி தோற்றுப் போனதற்கு மற்றொரு காரணம், கமலின் தன்முனைப்பு. விருமாண்டியில் மட்டும் அல்ல; கமலின் எல்லாப் படங்களிலுமே அவர் தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்கள் அடிபட்டுப் போய் கமல்ஹாசன் என்ற பிரம்மாண்டமான நட்சத்திரமே நம் முன் ரூபமெடுக்கிறார். இதனாலேயே அவருடைய நோக்கம் வெற்றியடையாமல் போகிறது. ஹே ராம், ஆளவந்தான், தசாவதாரம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இதைத்தான் ஆரம்பத்தில் இமேஜ் பொறி என்று குறிப்பிட்டேன். இப்போது ரிதுபர்னோ கோஷுக்கு வருவோம். யாருக்குமே தெரியாத இந்த வங்காள இளைஞனின் இருப்பிடத்தை நோக்கி மும்பையிலிருந்து கொல்கொத்தா நோக்கிச் செல்கிறார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலக கேட்டைக் கூட ரிதுபர்னோ கோஷ் போன்ற ஒரு இளம் இயக்குனரால் தொட முடியுமா என்பது சந்தேகம்.

கமலும் அவரது சகாவான ரஜினியைப் போலவே நடிகர் என்ற இடத்திலிருந்து நட்சத்திரம் என்ற தந்த கோபுரத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். 1978- ஆம் ஆண்டு தீபாவளி அன்று ஐந்து படங்கள் வெளியாயின. அதில் அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா? என்ற மூன்று படங்களில் கமல் ஹீரோ. ஆனால் அதே நாளில் வெளிவந்த பாலச்சந்தரின் தப்புத் தாளங்களில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் கமல் சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்டு ஒரு பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளனாக வருகிறார். இதை கமல் அவரது குருநாதரான பாலச்சந்தருக்காக அப்போது செய்தார். இப்படி தனது ஹீரோ அந்தஸ்தைத் துறந்து விட்டு ஒரு நடிகனாக மட்டுமே கமல் இப்போது இதைச் செய்யத் துணிவாரா? அமிதாப் செய்கிறார்.

மேலும் ஒரு விஷயம், கமலின் குருநாதர் பாலச்சந்தர் பற்றி. நேற்று வந்த ரிதுபர்னோ கோஷ் பற்றியும், ஷ்யாம் பெனகலின் சமீபத்திய படம் வெல்கம் டு சஜ்ஜன்பூர் பற்றியும், சந்தோஷ் சிவனின் தஹான் பற்றியும் உலக சினிமா அரங்கில் விவாதிக்கிறார்கள். காரணம், இவர்கள் சினிமாவை ஒரு கலையாக வெளிப்படுத்தியவர்கள். ஆனால் பாலச்சந்தர்? தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்காவது இந்த இயக்குனர் சிகரத்தின் பெயர் தெரியுமா? பாலச்சந்தர் பற்றி 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெங்கட் சாமிநாதன் கூறினார், “பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைப்பூச்சுதான் பாலச்சந்தர் ” என்று. இப்படிப் பட்ட ஒருவரை குருநாதராக வரித்துக் கொண்டு எங்கிருந்து சீரியஸ் சினிமாவை உருவாக்குவது?

இப்போதும் ஒன்றும் தாமதமாகி விடவில்லை. கமல்ஹாசன் தன்னை ஒரு நட்சத்திரம் என்பதை மறந்து விட்டு, அமீர், சசிகுமார் போன்ற இயக்குனர்களிடம் தன்னை ஒரு அறிமுக நடிகனைப் போல் முழுமையாக ஒப்படைத்தால் உலக அளவில் கவனத்தைத் திருப்பக் கூடிய கலைப் படைப்புகளை உருவாக்க முடியும்.

இறுதியாக, இவ்வளவு விமர்சனங்களையும் கமல்ஹாசன் என்பதால் மட்டுமே திறந்த மனதுடன் முன் வைத்திருக்கிறேன் ; அவரை எனது சஹ்ருதயர் என்று கருதுவதால். வேறு நடிகர் என்றால் ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டேன்.

பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. அது பணம். Drona என்று அபிஷேக் பச்சன் நடித்த படம் சமீபத்தில் வெளிவந்தது. வந்த வேகத்தில் பொட்டிக்கு போனது. படத்தின் செலவு 70 கோடி. Goldie Behl(காதலர் தினம் மற்றும் பாம்பே பட ஹம்மா ஹம்மா புகழ் சோனாலி பிந்த்ரேயின் கணவர்) தான் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். Drona படம் வெளியாகும் முன்பே மூன்று படங்களை அறிவித்தார். Drona படத்திற்கு முன் அவர் கம்பெனி ரோஸ் மூவிஸ் தயாரித்த இரண்டு படங்களும் தோல்வி. Drona படமும் தோல்வி. ஆனால் இன்னும் மூன்று படங்கள் அறிவித்துள்ளார். எங்கே இருந்து வருகிறது பணம்? தெரியவில்லை.

தசாவதாரம் ஊத்தி கொண்டு இருந்தால் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அடுத்த படம் எடுக்க இரண்டு ஆண்டுகளாவது ஆகி இருக்கும். ஆக மொத்ததில், பாலிவுட் ஹாலிவுட் போல மாறிவிட்டது. அதாவது, படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அடுத்த படத்திற்கு சென்று விடுகிறார்கள்.தமிழ் சினிமாவில் அந்த நிலை இல்லை.(ஜென்டில்மேன்,காதலன் படங்களை எடுத்த K.T.குஞ்சுமோன் இருக்கிற இடம் தெரியவில்லை)

The Last Lear படத்தை எடுத்து கொள்வோம்.இந்தியாவில் படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. அன்பே சிவமும், மகாநதியுமே ஓடாத தமிழ்நாட்டில் கமலை வைத்து The Last Lear போல ஒரு படம் எடுத்தால் தயாரிப்பாளர் நேரே திருப்பதி போய் மொட்டை தான் போடணும்.கமல் The Last Lear போன்ற படங்களில் நடித்தால் சந்தோசம் தான். ஆனால், தமிழ்நாட்டில் சாரு மாதிரி நாலு பேர் பார்ப்பார்கள். தயாரிப்பாளர் கதி என்ன?

தயாரிப்பாளருக்கு செலவு அதிகம் வைக்காமல் படம் எடுப்பவர் என்று K.S.ரவிகுமாரை கூறுவார்கள். அது மட்டும் இல்லாமல்,அவர் இயக்கிய படங்களின் வெற்றி சதர்விகிதம் ஏறக்குறைய 70%. அதாவது,10 படங்கள் இயக்கினால் அதில் 7 வெற்றி. அவரை போன்ற ஒரு இயக்குனரை வைத்து எடுத்தால் தான் தயாரிப்பாளர் நாலு காசு பார்க்க முடியும்.

இயக்குனர் பாலு மகேந்திரா உலக சினிமா பற்றி நிறையவே ஞானம் உள்ளவர் தான். அவரால் எத்தனை நல்ல படம் எடுக்க முடிந்தது? அவரை நம்பி யார் பணம் போட்டார்கள்? ஒரு கட்டத்தில் நொந்து போய் "நீங்கள் கேட்டவை" என்று ஒரு பக்கா மசாலா படம் எடுத்தார்.படம் சூப்பர்ஹிட்.

சரி, சாரு சொல்லும் அமீருக்கு வருவோம். அமீர் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். மௌனம் பேசியதே சுமாரான ஹிட், ராம் மற்றும் பருத்தி வீரன் சூப்பர்ஹிட். பருத்தி வீரன் உலகத்தரம் வாய்ந்த ஒரு கலைப்படைப்பு என்கிறார் நம் எழுத்தாளர். மௌனம் பேசியதே மற்றும் ராம் பற்றி அவர் பேசவில்லை. எனக்கு இலக்கியம், உலகத்தரம் பற்றி எல்லாம் தெரியாது அதனால் நான் பருத்தி வீரனை பற்றி சாரு கூறும் எதையும் மறுக்கவில்லை. ஆனால், பருத்தி வீரன் என்ற ஒரு படத்தை எடுத்து கொண்டு கோடம்பாக்கத்தில் அமீர் அளவுக்கு யாரும் ஒரு படைப்பை கொடுக்கவில்லை என்பது முட்டாள்தனத்தின் உச்சம். பருத்தி வீரன் கமர்ஷியலாக தமிழ்நாடு முழுவதும் வெற்றி. அதற்கு அர்த்தம் தமிழர்கள் அனைவருக்கும் உலக சினிமா தெரியும் என்பதா?

கமல் இமேஜ் பொறியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் என்பது ஏற்க முடியாத வாதம். இமேஜ் என்பது என்ன? தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி படங்கள் பண்ணுவது. ரஜினி, விஜய், சிம்பு, விஜயகாந்த் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஹே ராம், அன்பே சிவம், பேசும்படம், மகாநதி, குருதிப்புனல், ராஜபார்வை என்று ஒவ்வொரு படத்திற்கும் மாறுதல் காட்டிய ஒருவரை எப்படி இமேஜ் பொறியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார் என்று கூற முடியும்?

இப்போதும் கமல் "A Wednesday" என்ற ஹிந்தி படத்தை தமிழில் செய்ய போகிறார் என்று பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நசுருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் இணைந்து நடித்தனர். இதில் நசுருதீன் ஷா வேடத்தில் கமலும் அனுபம் கேர் நடித்த வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றங்களை முயற்சித்து பார்ப்பதில் கமலை தவிர யாருக்கு தமிழ் சினிமாவில் ஆசை இருக்க முடியும்? ஆனால், அப்படிப்பட்ட பரிட்சையில் இறங்கும் போது படத்திற்கு பணம் போட்ட தயாரிப்பாளரையும் நினைத்து கொள்ள வேண்டும். உலகத்தரம் வாய்ந்த சினிமா எடுக்காவிட்டால் பரவாயில்லை. படம் கொடுக்கும் தோல்வியில் தயாரிப்பாளர் உலகை விட்டு போய் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

1 comment:

பிரியமுடன் பிரபு said...

எந்த முட்டாள் சொன்னான் “பருத்திவீரன்” கலை படம் என்று ???????
மிக சிறந்த மசாலா படம் அது , அதை அமீரே ஒத்துக்கொண்டார்
அய்யா சாரூ முதலில் தமிழ் சினிமா பாருங்கள் அப்புறம் உலக சினிமா பாருங்கள்