Friday, 18 February 2011

செவ்வரளி

ஜெயமோகனின் "யானை டாக்டர்" சிறுகதை படிக்கும் போது பாலகுமாரனின் "செவ்வரளி" நினைவுக்கு வந்தது. குறிப்பாக அதில் வரும் குதிரை டாக்டர் ராமநாதன் பாத்திரம். "மாரு பல்கே குன்ன வேமிரா" என்று தியாகையர் கிருதி பாடிக்கொண்டு அவர் குதிரை அருகில் சென்று அதற்கு வைத்தியம் பார்ப்பது, கல்யாணம் தேவையா என்ற கேள்விக்கு குதிரையை உதாரணமாக கொண்டு அவர் சொல்லும் பதில், கூண்டிற்குள் இருக்கும் மலைப்பாம்பிற்கு ரப்பர் துண்டுகளை போடும் பார்வையாளர்கள், அதை உண்பதால் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பாம்பு இறந்து போவது, மேஜைக்கு அடியில் பலான படங்களை பார்க்கும் ஆடிட்டர் அது போன்ற படங்களை பார்த்ததுண்டா என்று விலங்கு மருத்துவனான கதையின் நாயகனை கேட்கும் போது அவன், "சாரை பாம்பும் நல்ல பாம்பும் பின்னிக்கொள்வது போல தானே இதுவும்" என்று கூறுவது போன்ற பகுதிகளை அசை போட்டுக்கொண்டிருந்தேன்.

யானை டாக்டர் போல செவ்வரளியிலும் மனிதனை விலங்கோடு ஒப்பிடும் இடங்கள் ஏராளம். Romulus Whitaker அவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கேரக்டர் ஒன்று செவ்வரளியில் உண்டு. பெரும்பாலும் அந்த கதாப்பாத்திரத்தின் வழியாக நிறைய கருத்துக்களை சொல்லியிருப்பார் பாலா. "ஒரு மானை புலி வேட்டையாடும் போது முதலில் அதன் கழுத்து நரம்பை தாக்குகிறது. அந்த நரம்பு ஏழு வினாடிகளில் அறுபடும். அது அறுபடும் வரையில் மட்டுமே மானுக்கு வலி. ஆனால், வண்டியில் மாட்டை கட்டி பொதி சுமக்க வைத்து அதன் கழுத்து பகுதியில் உண்டாகும் ரணம் காலத்திற்கும் போவதில்லை" என்று சொல்வார். மிருகங்களுக்கு மனிதனை காட்டிலும் கருணை உணர்வு அதிகம் என்று பொட்டில் அடிப்பது போல் சொல்லும் காட்சி அது. அதே போல் மரணத்திற்கு அஞ்சுவுதில் மனிதனை மிஞ்ச எந்த உயிரும் இல்லை என்ற கருத்தை செவ்வரளியில் பதிவு செய்திருப்பார் பாலகுமாரன்.

எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயற்கை மற்றும் சக உயிரினங்கள் மீது அலாதியான பற்றுள்ளது. சுஜாதா, எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாலகுமாரன் என்று பலரை படிக்கும் போது அவர்களிடம் பொதுவாக இந்த உணர்வு மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.

1 comment:

Gokul said...

யானை டாக்டர் இப்போதுதான் படித்தேன்..வழக்கம் போல் ஜெ.மோ கலக்கல். அதை படித்தபின் செவ்வரளி படிக்க தோன்றுகிறது.

//எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயற்கை மற்றும் சக உயிரினங்கள் மீது அலாதியான பற்றுள்ளதுஎழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயற்கை மற்றும் சக உயிரினங்கள் மீது அலாதியான பற்றுள்ளது//

உண்மைதான்!ஆரம்ப புகழுக்கு பிறகு, இந்த பற்றே அவர்களை தொடர்ந்து எழுத வைக்கிறது போல..