Monday, 14 September 2009

தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மேலே உள்ள தலைப்பின் எதிர்ப்பதம் மிக பிரபலம். எதை வைத்து அன்று வடக்கு வாழ்கிறது என்று சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால், இன்று என்னை போல தெற்கில் இருந்து வருபவர்களுக்கு வட மாநில மக்களின் வாழ்க்கைத்தரம் அதிர்ச்சியளிக்கிறது.

வட மாநிலங்கள் என்று நான் சொல்லும் போது டெல்லியை மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். தேசிய தலைநகரம் என்கிற வகையில் டெல்லி ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், டெல்லியை விட்டு சற்று தள்ளி உள்ள ஹரியானாவை எடுத்துக்கொள்வோம். ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேரம் இங்கு மின்சாரம் இருப்பதில்லை. போக்குவரத்து வசதிகளோ மிக மிக குறைவு. நான் இருக்கும் குர்கான் ஹரியானாவை சேர்ந்தது. டெல்லியிலிருந்து இருபத்தைந்து அல்லது முப்பது கிலோமீட்டர் இருக்கலாம். ஆனால், இங்கிருந்து டெல்லிக்கு நேரடி பேருந்து கிடையாது. சென்னையை எடுத்துக்கொள்வோம். எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்திருக்கும் மத்திய சென்னையை அடையலாம். நீங்கள் ஆவடியில் இருந்தாலும் சரி, தாம்பரத்தில் இருந்தாலும் சரி சென்ட்ரல் வருவதற்கு நேரடி பேருந்து வசதி உண்டு.

வார இறுதியில் ஆக்ரா சென்றிருந்தேன். உத்திர பிரதேசத்தை சேர்ந்தது. இங்கு ஊரை சுற்றிப்பார்க்க பேருந்து வசதி கிடையாது. எங்கு சென்றாலும் ஆட்டோ அல்லது ரிக்க்ஷாவில் தான் செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ் மகாலை காண ஆண்டு தோறும் வருகிறார்கள். இவர்கள் தங்க நல்ல விடுதிகளோ அல்லது பயணம் செய்ய பேருந்துகளோ கிடையாது. இங்கும் ஒரு நாளில் குறைந்தது பத்து மணி நேர மின்சார வெட்டு. இந்த ஊரில் பலர் மின்சார கட்டணம் செலுத்துவதே இல்லை. இவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் வீட்டின் அருகில் ஒரு குழு அமைத்து மின்சார கட்டணம் கட்ட வாரீர் வாரீர் என்று அழைப்பு விடுக்கிறது. அந்த அழைப்புக்கு செவி சாய்த்து மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் மிக சிலரே. வோட்டை மனதில் கொண்டு அரசு இவர்களின் மின்சார இணைப்பை துண்டிப்பதும் இல்லை.

வெளியூர்களிலிருந்து பிழைப்புக்காக உத்திர பிரதேசம் வரும் மக்கள் ஆங்காங்கே தெருவோரங்களில் குடிசை அமைத்து தங்குகின்றனர்.இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள வீடுகளின் மின் இணைப்புகளில் இருந்து எடுத்து கொள்கின்றனர். இவர்களையும் அரசு கண்டுகொள்வதில்லை.

கவுன்சிலர், நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் என்று பலரும் தங்கள் பாதுகாப்புக்கென்று நாட்டு துப்பாக்கி வைத்து உள்ளனர். ஜாதி பலம் காட்ட துப்பாக்கி வைத்திருப்பவர்களும் உண்டு. ஆக்ராவில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர் உள்ள ஜாதி சங்க தலைவர்களை காண்பது சர்வ சாதாரணம்.

தார் சாலை என்பதை உத்திர பிரதேசத்தில் பார்க்கவே முடியாது. எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இங்குள்ளவர்களை கேட்டால் இது பரவாயில்லை, தலைநகர் லக்நோ இதை விட மோசமாக இருக்கும் என்கிறார்கள்.உத்திர பிரதேச பேருந்துகள் வாய் இருந்தால் கதறி அழும்.அந்த அளவுக்கு மோசமான பராமரிப்பு.சென்னை பேருந்துகளின் தரத்தை நினைத்துக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் இருந்த பொது கழிப்பிடத்தில் சிறுநீர் செல்ல ஐந்து ருபாய். நாற்றமோ குடலை பிடுங்குகிறது.

சரி, பேருந்து தான் இப்படி இருக்கிறதே என்று ஆக்ராவில் இருந்து ரயிலில் டெல்லி செல்லலாம் என்று முடிவு செய்து ஆக்ரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன். விசாகப்பட்டனத்திலிருந்து அம்ரித்சர் செல்லும் ஹிரகுத் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வர, அதில் ஏறிக்கொண்டேன். அவசரத்தில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியதால் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் மாட்டிக்கொண்டேன். முந்நூறு ருபாய் அபராதம் என்றார். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி பொது பெட்டியில் ஏறிக்கொள்கிறேன் என்றேன்.உங்களை பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறீர்கள், பொது பெட்டியில் உங்களால் பயணம் செல்ல இயலாது என்றார். ஏன் என்றேன்? அங்கே குழந்தைகள் பெட்டியிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்துள்ளன. டெல்லி சென்ற பின்பு தான் அதை சுத்தம் செய்வார்கள். இப்போது தான் அங்கிருந்து வருகிறேன் என்றார். ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் என்றார். ஆனால், இருக்கை கிடைக்காது. படிக்கட்டு அருகே நின்று கொண்டே வர வேண்டும் என்றார். சரி என்று சொல்லி ஐம்பது ரூபாய் தந்தேன். படிக்கட்டு அருகே ஏற்கனவே நிறைய பேர் இருந்தனர். பலர் அங்கேயே பீடி, சிகரெட் புகைத்தபடி இருந்தனர். பெண்கள் சிலர் இயற்கை உபாதைக்காக பாத்ரூம் வர, அவர்களை கண்டபடி கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பழக்கம் போலும். இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

எத்தனையோ முறை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், பெட்டியில் பயணிகள் புகைத்து பார்த்ததில்லை. மேலும், ரயிலையும் ஓரளவுக்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறார்கள். நான் சொல்வது குளிர் சாதன பெட்டியல்ல. சாதாரண பதிவு செய்யப்பட்ட பெட்டிகள். ரயிலில் பெண்களை கிண்டல் செய்வதெல்லாம் மிக மிக குறைவு. மருந்துக்கு கூட டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலான டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் ஆங்கிலம் பேசுவார்கள். இங்கே நம்மிடம், இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி, முடிந்தால் அதில் பேசு என்கிறார்கள். நான் இந்தியன்,என்னிடம் அவர்கள் இதை சொல்வது நியாயம் தான்,ஆனால் வெளிநாட்டு பயணிகளிடம் இதை சொல்லமுடியாதே.

தெரிந்த ஒரு நண்பரிடம், ஏன் வட மாநில மக்களின் வாழ்க்கைதரம் இப்படி இருக்கிறது? படிப்பறிவு இல்லை என்பதை மட்டும் இதற்கு காரணமாக சொல்லாதீர்கள், தமிழகத்திலும் படிப்பறிவு ஒன்றும் பெரிய அளவில் இல்லை, ஆனால் இங்குள்ள மக்களை விட அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் முதிர்ச்சி இருக்கிறதே என்றேன்? அவர் சொன்னார், "உங்க ஊர்ல அரசியல்வாதிகள் ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால் ஐம்பது ரூபாய்க்கு உங்களுக்கு எதாவது செய்கிறார்கள். ஆனால், இங்கே மக்களுக்கு அரசால் எந்த பயனும் இல்லை. அதே போல் மக்களுக்கும் அரசிடம் என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரசு நமக்கு செய்யும் பெரிய உதவி என்று நினைக்கிறார்கள். அரசும், இவர்கள் நம்மை இம்சை பண்ணாத வரை நிம்மதி என்று இருக்கிறார்கள். இது தான் இவர்கள் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றார்.நல்ல வேளை தமிழ்நாட்டில் இருக்கிறேன் என்று நினைத்தேன்.

8 comments:

ரவிசங்கர் said...

வட நாட்டுக்கு இந்தி மட்டும் பேசுகிறார்கள் என்று குறைபடுவதும் தவறு. தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு இந்தி பேச மாட்டேன் என்கிறார்கள் என்று குறைபடுவதும் தவறு.

அப்புறம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை. அதனால், தமிழ்நாட்டில் வந்து இந்தி தெரியாதா என்று கேட்பதில் எந்த நியாமமும் இல்லை.

ramu said...

Hi Vasu,

Very true. Agra is a place which myself and Sathish will never forget in our life. Both of us fell sick after our visit to Agra(we were there for hardly 6 hours), during our official trip to Noida.

Even educated people do not respond to our queries in english. The worst part was when I had a meeting at P***t systems for the re-skin work, where everyone were discussing in Hindi. Thank God I understood what they spoke, else I wouldn't even be aware if they were scolding me for reporting issues in application.

If those people who voted for Taj Mahal to make it a part of world wonders had visited Agra, they would deeply regret for their votes.

Vasu. said...

அன்புள்ள ரவிசங்கர்,

பின்னூட்டத்திற்கு நன்றி. இந்தியில் பேசு என்று என்னை சொன்னது ஆக்ராவில் தானே தவிர தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்கள் நம்மை ஹிந்தி பேசு என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். அவர்கள் நம்மிடம் தமிழில் கதைப்பார்கள். (மார்வாடிகள் நல்ல உதாரணம்).

Vasu. said...

Ram,

Thanks for your comment

Gokul said...

//தேசிய தலைநகரம் என்கிற வகையில் டெல்லி ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.//

வாசு,

நீ வட மாநிலங்கள் பற்றி சொன்னது உண்மையென்றால், டெல்லி ஓரளவிற்கு அல்ல, சென்னையை விட நன்றாகவே முன்னேறி இருக்கிறது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

வடமாநிலங்களின் பெரும் பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மோசமாக இருந்தாலும், பெரும் கோடீஸ்வரர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீ இருந்த குர்கானிலும், நொய்டாவிலும் சதுர அடி சென்னையை விட எவ்வளவு அதிகம் என்பது உனக்கே தெரியும்.

மொத்தத்தில் பெரும் வறுமை இருந்தாலும், பெரும் தொழில் அதிபர்களும், பெரும் செல்வந்தர்களும் இருக்கும் பகுதி அது என்பதே என் எண்ணம்.

Vasu. said...

கோகுல்,

செல்வந்தர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை. அவர்கள், பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோ செல்ல போவதில்லை என்பதால் அவர்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். நான் சொல்வது அரசின் மெத்தன போக்கை பற்றியும் சாதாரண மக்கள் மீண்டும் மீண்டும் அதே அரசுக்கு வாக்களிப்பது பற்றியும்.

நம்மூரில் இந்த நிலை இல்லை. மக்கள் காசை சாப்பிடுவது என்பது இந்தியாவில் அரசியல்வாதிகளின் உரிமையாகி விட்டது எனலாம். ஆனால், இதற்கு நடுவில் நம்மூரில் மக்களுக்கு நிச்சயம் ஏதோ செய்கிறார்கள். தமிழ்நாட்டை போன்ற போக்குவரத்து வசதி இந்தியாவில் எங்குமே இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். பேருந்து கட்டணமும் குறைவு. குற்றங்கள் கூட அதிக அளவில் இல்லை. நமது காவல்துறையை அகில இந்திய அளவில் ஒப்பிட்டால் நிச்சயம் முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இருப்போம். ஆக்ரவிலோ அல்லது பீகாரிலோ காவல்துறை செயல்படும் முறையை நீ பார்க்க வேண்டும். அராஜகம் செய்கிறார்கள். சென்ற வாரம் ஓடும் ரயிலிலிருந்து ஒரு செருப்பு தைக்கும் சிறுவனை தள்ளிவிட்டார் ஒரு காவலர் என்று செய்தி வந்தது. இது நடந்தது பீகாரில். இங்கு மக்களை புழு, பூச்சி போல நடத்துகிறது அரசாங்கம் என்பது தான் வேதனையான விஷயம்.அது தான் என் பதிவின் அடிநாதம்.

ராஜ நடராஜன் said...

தலைப்பு நல்லாயிருக்குதே!ஆனாலும் தெற்கால பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய.

மெட்ரோ மெட்ராஸ் சென்னை,டெல்லி,கல்கத்தா,பம்பாய் மும்பாய் என்ற நகரங்களில் survival factorஐ கணக்கில் கொண்டால் வாழத்தகுந்த இடம் மும்பாய்.மற்றபடி பயணத்திற்கான வசதிகளை கணக்கிலிடும் போது தமிழகம் முதல் என்பதில் சந்தேகமில்லை.

Zahoor said...

போக்குவரத்தில் மட்டுமில்லை, மருத்துவத்துறையிலும் தென்மாநிலங்கள் தான் முன்னிலையில் இருகின்றன.

சென்னை பொது மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக வரும் வட மாநிலத்தவர்களை நீங்கள் எப்பொழுதும் பார்க்கலாம். சங்கர நேத்ராலயா, அகர்வால் போன்ற கண் மருத்துவமனைகளிலும் நம்மூரை விட வட மாநிலத்தவர்கள் அதிகமாக வருகின்றனர்.